Published:Updated:

`ஸ்டாலினைப் புலம்ப விட்டாச்சு; வைகோவை ஜால்ரா போட விட்டாச்சு!'- பிரசாரத்தில் கலகலத்த முதல்வர் எடப்பாடி

`ஸ்டாலினைப் புலம்ப விட்டாச்சு; வைகோவை ஜால்ரா போட விட்டாச்சு!'- பிரசாரத்தில் கலகலத்த முதல்வர் எடப்பாடி
`ஸ்டாலினைப் புலம்ப விட்டாச்சு; வைகோவை ஜால்ரா போட விட்டாச்சு!'- பிரசாரத்தில் கலகலத்த முதல்வர் எடப்பாடி

"ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால், நினைத்ததையெல்லாம் பேசிவருகிறார்" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாடினார்.

கடலூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க  வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமியை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி ஆகிய இடங்களில் பிரசாரம்செய்தார். அப்போது, "நாம் பாதுகாப்பாக வாழ வேண்டும் எனில் தூய்மையான, வலிமைமிக்க, தகுதிமிக்க ஒருவர் பிரதமராக வர வேண்டும். இதற்குத் தகுதியான ஒரு நபர் மோடிதான் என்று முடிவுசெய்துதான் இந்தக் கூட்டணியை அமைத்துள்ளோம். கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க 37 இடங்களில் வெற்றிபெற்றது. பா.ஜ.க ஒரு இடத்திலும், பா.ம.க. ஒரு இடத்திலும் வெற்றிபெற்றது. தமிழகத்தில் உள்ள 39 இடங்களிலும் வெற்றி பெற்ற கட்சிகள் இணைந்து, இந்த மெகா கூட்டணியை அமைத்துள்ளோம். இந்திய நாடு மிகப்பெரிய ஜனநாயக நாடு. நாம் வல்லரசாகத் தகுதி பெறக்கூடிய அளவில் வளர்ச்சிபெற்றுள்ளோம். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத அண்டை நாடுகள், நம் நாட்டின் மீது பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்துள்ளனர். இந்தப் பயங்கரமான நிலையில் நாம் தேர்தலை சந்தித்துள்ளோம்.

ஆகவே, நாட்டின் பாதுகாப்பு முக்கியம். எனவே, நாடு நலம் பெற, பலம் பெற, வலிமையான நரேந்திரமோடி மீண்டும் பிரதமராக வர நமது கூட்டணிக் கட்சி வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமிக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். எதிர்க்கட்சியான தி.மு.க தலைவர் ஸ்டாலின், செல்கின்ற இடத்தில் எல்லாம் பொய்யான தகவலைத் தெரிவித்துவருகிறார். பொய்யான செய்தியைச்  சொல்லிச் சொல்லி மக்களிடத்தில் குழப்பத்தை விளைவித்துக்கொண்டிருக்கிறார். தேர்தல் அறிக்கையில் இதைச் செய்வோம், அதைச் செய்வோம் என அறிவித்திருக்கிறார். நான் கேட்கிறேன், ஏற்கெனவே நீங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தீர்களே... நீங்கள் எந்தத் தேர்தல் அறிக்கையையாவது நிறைவேற்றியிருக்கிறீங்களா என்றால் கிடையாது. ஆனால், உங்கள் குடும்பம் வளம் பெற்றது. குடும்ப உறுப்பினர்கள் பதவி, அதிகாரத்தைப் பெற்றனர். ஆனால் அ.தி.மு.க-வும், சரி இந்தக் கூட்டணியும் சரி, மக்களுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி.

இது மெகா கூட்டணி, வலிமையான கூட்டணி. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அ.தி.மு.க தலைவர்களைப் பற்றி பேசுகிறார், கூட்டணி கட்சித் தலைவர் ராமதாஸைப் பற்றிப் பேசுகிறார். இப்படி நினைத்ததையெல்லாம் பேசிப் புலம்பிவருகிறார். அவரைப் புலம்ப விட்டாச்சி. அவருக்குத் தேர்தல் பயம் வந்துவிட்டது, தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் நினைத்ததையெல்லாம் பேசிவருகிறார். ம.தி.மு.க தலைவர் வைகோ அப்படிதான் போர இடத்தில் எல்லாம் பேசிவருகிறார். நீங்கள் முதலில் கட்சிவைத்து நடத்துங்கள், கட்சியை அடமானம் வைக்காதீர்கள். தி.மு.க-வில் இருந்து பிரிந்து போய் ம.தி.மு.க-வை ஆரம்பித்தார். பின்னர், எந்தக் கட்சியில் இருந்து பிரிந்தாரோ அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் அது கட்சியா?. இப்ப என்ன சின்னத்தில் போட்டியிடுகிறீர்கள். தி.மு.க. சின்னத்தில். ம.தி.மு.க-விற்கு ஒரு சின்னம் இருக்கிறது. அதில் போட்டியிடாமல் தி.மு.க சின்னத்தில் போட்டியிடுவது, அந்தக் கட்சி கலப்படக் கட்சியாகிவிட்டது. அவர் வந்து நம் கூட்டணியைப் பற்றி பேசுகிறார். முதலில் உங்கள் கட்சியைக் காப்பாற்றப் பாருங்கள், பிறகு அடுத்த கட்சியைப் பற்றி பேசலாம்.

வைகோ எப்ப பாத்தாலும் தமிழ் ஈழம் அழிக்கிறது, அதற்குக் காரணம் காங்கிரஸ். அதற்குத் துணைபோகும் தி.மு.க என்று பேசியவர். இன்று பதவிக்காக ஜால்ரா போடுகிறார். இவர்கள், பச்சோந்தி போல் நிறத்தை மாற்றி கூட்டணி அமைத்துள்ளனர். ஆனால், அ.தி.மு.க கூட்டணி நிலையான கூட்டணி; வலிமையான கூட்டணி. தமிழகத்தில், கடந்த தி.மு.க  ஆட்சியில் கடும் மின்வெட்டு காணப்பட்டது. கடந்த 2011-ல் முதல்வரான ஜெயலலிதா, தடையில்லாத மின்சாரத்தை வழங்கினார். தமிழகம் தற்போது உணவு தானியம் உற்பத்தி, மின்சாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முன்னேறியுள்ளது. தமிழக அரசு ஏழை மாணவர்களின் கல்வித் தரம் உயர இலவச லேப்டாப், இலவச ஸ்கூட்டி,  ஏழை எளிய மக்கள் நலன் பெற 1000 ரூபாய் பரிசு பொருள் கொடுக்கப்பட்டன.

இதேபோல், ஏழைத் தொழிலாளர்களுக்கு  2000 ரூபாய் வழங்கும் திட்டத்தைத் தொடங்கியதும், தி.மு.க சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தல் ஆணையம் இத்திட்டத்தை நிறுத்திவைத்துள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும். இதேபோல், மக்களுக்கு ஏராளமான திட்டங்களை தமிழக அரசு வழங்கிவருகிறது. மத்தியில் பலமான, நிலையான ஆட்சி மலர வேண்டும். தமிழகத்தில் நல்லாட்சி தொடர நீங்கள் எங்கள் கூட்டணி பா.ம.க வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமிக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன்" என்று பேசினார். அவருடன் பா.ம.க வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி உடனிருந்தார். தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து சேத்தியாதோப்பு, காட்டுமன்னார்கோயில், சிதம்பரம் ஆகிய பகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டார்.