``ஆப்பிள் சின்னத்துக்கு ஓட்டுப் போடுங்க..!’’ உளறும் தலைவர்கள் | Top political leaders make mistakes while doing election campaigns

வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (30/03/2019)

கடைசி தொடர்பு:19:45 (30/03/2019)

``ஆப்பிள் சின்னத்துக்கு ஓட்டுப் போடுங்க..!’’ உளறும் தலைவர்கள்

தமிழகத்தில் களமிறங்கியிருக்கும் வேட்பாளர்களும், அவர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் தலைவர்களும் நாள்தோறும் உளறிக் கொட்டி வருகின்றனர்.  

``ஆப்பிள் சின்னத்துக்கு ஓட்டுப் போடுங்க..!’’ உளறும் தலைவர்கள்

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல்களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகத்திலோ நாடாளுமன்றத் தேர்தலுடன், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டு, அதற்கான  வேட்புமனுத்தாக்கலும் முடிந்து இறுதி வேட்பாளர்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் களமிறங்கியிருக்கும் வேட்பாளர்களும், அவர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் தலைவர்களும் நாள்தோறும் உளறிக் கொட்டி வருகின்றனர்.  

தமிழகத்தில் தி.மு.க தலைமையில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகளும், அ.தி.மு.க தலைமையில் பி.ஜே.பி, தே.மு.தி.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இதுதவிர அ.ம.மு.க, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடுகின்றன.
இந்த நிலையில், தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின்

இதையடுத்து சில நாள்களுக்கு முன், நாமக்கல் தி.மு.க அலுவலகத்தில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க முன்னாள் அமைச்சர் காந்திச்செல்வன், கூட்டணிக் கட்சியின் பெயரைத் தவறுதலாக உச்சரித்தார். அதாவது, `கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி’ என்று சொல்வதற்குப் பதிலாக, `கொங்குநாடு மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்று உளறிக்கொட்டினார். பின்னர் சுதாரித்துக்கொண்டு மீண்டும் அக்கட்சியின் பெயரை ஒழுங்காக உச்சரித்தார். அதேபோல், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், தென் சென்னை தொகுதி தி.மு.க வேட்பாளரான தமிழச்சி தங்கப்பாண்டியனை ஆதரித்து பிரசாரம் செய்தபோது, ``தமிழச்சி தங்கப்பாண்டியன் ஓர் அழகான வேட்பாளர்’’ என்றார். இதனால் சலசலப்பு நிலவ... சுதாரித்துக்கொண்ட உதயநிதி ஸ்டாலின், ``நான் அழகு என்று குறிப்பிட்டது அவர் தமிழின்மீது கொண்ட பற்றையும், கழகத்தின்மீது கொண்ட அன்பையும்தான்’’ என்றார். அதேபோல், வேலூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் ஆனந்த்தை ஆதரித்து பிரசாரம் செய்தபோது, ``பிரதமர் மோடி காவலாளி அல்ல... கோமாளி’’ என்று குறிப்பிட்டார். 

தி.மு.க-வில்தான் இந்த நிலை என்றால், அ.தி.மு.க-வில் அதற்கு மேல். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் சட்டசபைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு, அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பன், பிரசாரத்தின்போது தனக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டினார். பின்னர், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அ.தி.மு.க கூட்டணிக்கட்சி வேட்பாளரான மாநில பி.ஜே.பி தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கு வாக்கு கேட்காமல் தி.மு.க வேட்பாளரான கனிமொழி எம்.பி-க்கு வாக்கு கேட்டார். அதாவது, ``பிரதமர் மோடியின் ஆசிபெற்ற அருமை சகோதரி கனிமொழி’’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி வாக்கு கேட்டார். இதனால் சலசலப்பு நிலவ... மீண்டும் தமிழிசை பெயரைச் சொல்லி வாக்கு கேட்டார்.

பிரேமலதா

அதுபோல் எப்போதும் ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்லி வம்பில் சிக்கிக்கொள்ளும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல்லில் பிரசாரம் செய்தபோது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மோடியின் பேரன் என்று உளறிக்கொட்டினார். அதேபோல் மற்றொரு பிரசாரத்தின்போது பா.ம.க வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், ``ஜோதிமுத்துவுக்கு ஆப்பிள் சின்னத்தில் வாக்களியுங்கள்’’ என்றார். பின்னர், பின்னால் இருந்தவர்கள் `மாம்பழம்’ என்று கூச்சலிட, பிறகு சுதாரித்துக்கொண்டு அச்சின்னத்தைச் சொன்னார். 

அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் தே.மு.தி.க-வும் இந்த விஷயத்தில் சோடை போகவில்லை. அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கோவையில் பி.ஜே.பி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்தபோது, ``சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற முரசு சின்னத்துக்கு வாக்களியுங்கள்’’ என்று உளறிக்கொட்டினார். பின்னர் சுதாரித்த அவர், ``தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள்’’ என்றார். தொடர்ந்து பேசிய அவர், ``புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்தவர் பிரதமர் மோடி’’ என்று கூறுவதற்குப் பதிலாக, ``புல்வாமா தாக்குதலை நடத்தியவர் மோடி’’ என்று உளறினார். 

திராவிடக் கட்சிகள்தான் இப்படியென்றால், புதிதாகத் தொடங்கப்பட்ட அ.ம.மு.க-வும் அதேபோல் உளறிக் கொட்டியிருக்கிறது. அக்கட்சியின் திருப்பூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வம், `வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்பதற்குப் பதில் `வள்ளுவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்று உளறினார். அதேபோல் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அ.மு.மு.க சார்பில் போட்டியிடும் எஸ்.ஜி.சுப்பிரமணியன், ``தமிழகத்தின் முதல்வர் அண்ணன் எடப்பாடியை முதல்வராக்க வேண்டும் என்பதற்காக நடக்கும் தேர்தல் இது’’ என்று உளறினார். 

ராமதாஸ் தலைவர்

இவற்றை எல்லாம் விஞ்சியிருக்கிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். அவர், ஆரணி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் செஞ்சி சேவல் ஏழுமலைக்கு ஆதரவாகப் பேசியபோது, ``தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள்’’ என்பதற்குப் பதிலாக, ``தி.மு.க - அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள்’’ என்று மாற்றிப் பேசினார். பின்னர் சுதாரித்துக்கொண்ட ராமதாஸ், ``தி.மு.க - காங்கிரஸுக்கு மறந்தும் வாக்களிக்காதீர்கள்’’ என்றார். 

``தாம் எந்தக் கூட்டணியில் நிற்கிறோம்; எந்தச் சின்னத்தில் நிற்கிறோம்; தம் கூட்டணி வேட்பாளர்கள் யார் என்பது தெரியாமலேயே இன்றைய வேட்பாளர்களும், அவர்களை ஆதரித்துப் பேசும் தலைவர்களும் இருக்கின்றனர். இதுகூடச் சரியாகத் தெரிந்து வைத்திருக்க முடியாத இவர்களால், நாளை மக்களின் பிரச்னைகளை எப்படி தீர்க்க முடியும்? இவர்களெல்லாம் அரசியலுக்கு வந்து என்ன செய்யப்போகிறார்கள்’’ என்று சத்தமாகக் கேட்கிறார்கள், சமூக ஆர்வலர்கள்.

இந்த உளறல்கள் தமிழகத்தில் மட்டுமல்லாது, வேறு பல மாநிலங்களிலும் இருக்கிறது என்பதுதான் உச்சக்கட்ட வேதனை. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்