Published:Updated:

திருச்சியில் நள்ளிரவில் கட்டுகட்டாக சிக்கிய பணம் - அரசு கருவூலத்தில் ஒப்படைப்பு

திருச்சியில் நள்ளிரவில் கட்டுகட்டாக சிக்கிய பணம் - அரசு கருவூலத்தில் ஒப்படைப்பு
திருச்சியில் நள்ளிரவில் கட்டுகட்டாக சிக்கிய பணம் - அரசு கருவூலத்தில் ஒப்படைப்பு

திருச்சியில் நள்ளிரவில் கட்டுகட்டாக சிக்கிய பணம் - அரசு கருவூலத்தில் ஒப்படைப்பு

நள்ளிரவில் கொண்டு செல்லப்பட்ட 2 கோடியே 51 லட்சத்தைத் திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்ததால் பெரும்பரபரப்பு நிலவியது.

இந்தியாவில்  நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான கடந்த 10-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. அதனால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தேர்தல் ஆணையம், பறக்கும் படை அமைத்து வாகன சோதனை நடத்தி வருகிறது.

அந்தவகையில் அதிகாரிகள், ஒரு நபர் 50ஆயிரத்துக்கு மேல் பணமும், பத்தாயிரத்திற்கு மேல் பொருட்கள் எடுத்துச் சென்றால் முறையான ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என்றும், வங்கிகள் மாலை 6 மணிக்கு மேல் உரிய ஆவணம் இருந்தாலும் பணம் எடுத்துச் செல்லக்கூடாது எனக் கறார் காட்டிவருவதுடன், அப்படிச் சென்றால் பணத்தையும் பொருளையும் பறிமுதல் செய்யப்படும் என்றும் இதற்குத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என்கிறார்கள்.

இதற்காகத் திருச்சியில் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 9இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 3 பறக்கும் படை அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் முறையில் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று இரவு 9மணி அளவில் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் இளவரசி தலைமையில் போலிஸ் எஸ்.ஐ ராஜேந்திரன் தலைமைக் காவலர் சேனாதிபதி ஆகியோர் அடங்கிய குழு, திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தென்னூர் உக்கிரமா காளியம்மன் கோயில் அருகில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கிக்கு சொந்தமான வேன் ஒன்று வந்தது. அந்த வேனை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தபோது வாகனத்தில் உள்ளே “ட்ரங்க் பெட்டி” ஒன்றில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது.

தேர்தல் அதிகாரிகள் விசாரணையில் திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள வங்கியின் பிரதான அலுவலகத்தில் இருந்து, பணத்தைச் சேகரித்து எடுத்துக்கொண்டு திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் உள்ள பனைங்குறிச்சி வங்கிக்குச் சொந்தமான பண சேமிப்பு கிடங்குக்கு மொத்தப் பணத்தையும் எடுத்துச் செல்வதாக வங்கி அதிகாரிகள் கூறினர்.

வேனில் இருந்த வங்கி காவலாளியான ரஞ்சித்குமார், பிரகாஷ், பிரதீப்குமார், அருண்சிங், ஓட்டுநர் அந்தோணி ராஜ் ஆகியோரிடம் மொத்த பணத்துக்கான ஆவணங்கள் இருந்தாலும் வங்கிகள் பண பரிமாற்றம் மாலை 6 மணிக்குள் முடித்துவிடவேண்டும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பணம் எடுத்துச் சென்றதால் வேனில் இருந்த 2 கோடியே 51 லட்சத்தைத் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தேர்தல் பறக்கும் படை தனி தாசில்தார் இளவரசி, திருச்சி மேற்கு தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்று, தாசில்தார் ராஜவேலுவிடம் ஒப்படைத்தார். தகவலறிந்த மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாபு, துணை தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் விரைந்து வந்து வந்தனர். அதேநேரம் வங்கி அதிகாரிகளும் திருச்சி மேற்கு தாலுகா அலுவலகத்திற்கு வந்ததால் பதற்றம் நிலவியது.

அலுவலத்தில் பிடித்து வைக்கப்பட்ட பணக்கட்டுகளை எண்ணிய அதிகாரிகள்,  முறையே 2000, 500, 200, 100 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளை தனித்தனியாக பிரித்ததில் மொத்தம் 2கோடியே 51 லட்சம் பணம் இருந்தது கணக்கிடப்பட்டது. அதனையடுத்து அந்தப் பணத்தை வங்கி அதிகாரிகள் கொண்டு வந்த பெட்டியில் வைத்துப் பூட்டி சீல் வைத்த அதிகாரிகள், மொத்தப் பணத்தையும் திருச்சி மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

இதேபோல் திருச்சி சட்டக்கல்லூரி அருகில் நேற்று மாலை தேர்தல் பறக்கும் படை தாசில்தார் மோகனா தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த திருச்சி குண்டூர் பகுதியைச் சேர்ந்த அரிசி வியாபாரி அசோக்குமார் என்பவரின் காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அசோக் குமார் காரில் ஆவணங்களின்றி ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் வைத்திருந்தது தெரிய வந்தது. அந்த பணத்தையும் கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கருவூலத்தில் பணத்தைச் சேர்த்தார்கள்.அடுத்தடுத்து கரன்ஸி கட்டுகள் சிக்குவதால் திருச்சியில் பரபரப்பு நிலவுகிறது.

அடுத்த கட்டுரைக்கு