`கரூர் தொகுதிக்கு என்ன செய்தார் எம்.பி தம்பிதுரை; ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா?’ - தகிக்கும் செந்தில்பாலாஜி | DMK's Senthil Balaji slams ADMK karur Candidate Thambidurai

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (31/03/2019)

கடைசி தொடர்பு:09:49 (01/04/2019)

`கரூர் தொகுதிக்கு என்ன செய்தார் எம்.பி தம்பிதுரை; ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா?’ - தகிக்கும் செந்தில்பாலாஜி

ஜோதிமணி பிரசாரம்

``தம்பிதுரை பிரசாரத்தில் பேசுவதெல்லாம் பொய். கரூர் தொகுதிக்கு மத்திய அரசிடமிருந்து என்ன திட்டத்தை கேட்டுப் பெற்றார் என ஒரே மேடையில் தம்பிதுரை என்னோடு விவாதிக்க தயாரா?" என்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் தேர்தல் களம் விறுவிறுப்பாகி இருக்கிறது. கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் மீண்டும் தம்பிதுரையே போட்டியிடுகிறார். தி.மு.க கூட்டணியில் கரூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கிறார். அ.ம.மு.க சார்பில் அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர் தங்கவேல், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மருத்துவர் ஹரிஹரன் ஆகியோர் களமிறங்கி இருக்கிறார்கள். கரூர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் டாப் கியரில் கிளம்பி இருக்கிறது.

செந்தில்பாலாஜி

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான காங்கிரஸ் கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜோதிமணி கடம்பன்குறிச்சி, செவ்வந்திபாளையம், வாங்கல் கடைவீதி, குப்பிச்சிப்பாளையம், ஓடையூர், நெரூர், அச்சமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதற்கு, முன்னதாக வாங்கல் கடைவீதியில் திறந்தவெளி வாகனத்தில் வேட்பாளருக்கு வாக்குகள் சேகரித்தார்.

முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி. கைச்சின்னத்துக்கு வாக்குக் கேட்டு பொதுமக்களிடம் பேசிய அவர், ``கடந்த பத்தாண்டுகள் தொடர்ந்து கரூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக பதவி வகித்த தம்பிதுரை, கடந்த ஐந்தாண்டுகள் துணை சபாநாயகராகவும் பதவி வகித்துள்ளார். அந்தக் காலங்களில் மத்திய அரசிடம் அவர் கேட்டுப் பெற்று, இப்பகுதிக்கு என்ன வளர்ச்சித் திட்டத்தைச் செய்துள்ளார் என்பதை மக்களிடம் சொல்லி வாக்கு கேட்க முடியுமா?. என்ன என்ன திட்டங்களை இத்தொகுதியில் செய்தார் என்பதை ஒரே மேடையில் விவாதிக்க பொதுமக்கள் முன்னிலையில் முன்வர வேண்டும். நாங்கள் அவரோடு விவாதிக்கத் தயாராக இருக்கிறோம். நிறைய திட்டங்களை விடுங்கள். 'ஏதாவது ஒரே ஒரு நல்ல திட்டத்தை இப்பகுதியில் தம்பிதுரை செய்திருக்கிறார்' என அ.தி.மு.க கட்சியில் இருப்பவர்கள் கூறினால், தற்போது பிரசாரத்தை கைவிட்டு விலகிக் கொள்கிறோம். அ.தி.மு.கவினரே ஓட்டு கேட்டுக் கொள்ளட்டும்.

தம்பிதுரை

தம்பிதுரை எம்.பியாக இருந்துகொண்டு, தொகுதியில் ஒரு அரசுக் கல்லூரியைகூட கொண்டுவரவில்லை. ஆனால், பதவிகளை வைத்துக்கொண்டு எண்ணற்ற கல்லூரிகளை சொந்தமாக கட்டிக் கொண்டிருக்கிறார். அவர் கல்லூரியில் கரூர் தொகுதியில் உள்ள யாராவது ஒரு மாணவன் இலவசமாக படிக்கிறானா. கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை மோடியை விமர்சித்து பேசிவிட்டு, தற்பொழுது அவரோடு கூட்டணி வைத்து, இப்போது, 'மோடியை விட சிறந்த பிரதமர் யாரும் இல்லை' எனக் கூறுகிறார். தம்பிதுரை பேசுவது எல்லாம் பொய். பொழுது விடிஞ்சு பொழுது போனா, அவருக்கு பொய் சொல்றதே பொழப்பா போச்சு!" என்று அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரையை தாக்கி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கடுமையாகப் பேசினார்.