`பி.ஜே.பி ஒன்மேன் ஷோ; லாலுவின் ரெகமண்ட்!’ - காங்கிரஸில் இணைந்த பின்னணி சொல்லும் சத்ருகன் சின்ஹா | BJP is one man show says shatrughan sinha

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (31/03/2019)

கடைசி தொடர்பு:09:50 (01/04/2019)

`பி.ஜே.பி ஒன்மேன் ஷோ; லாலுவின் ரெகமண்ட்!’ - காங்கிரஸில் இணைந்த பின்னணி சொல்லும் சத்ருகன் சின்ஹா

காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் யோசனை தெரிவித்ததாக பா.ஜ.கவிலிருந்து விலகிய சத்ருகன் சின்ஹா தெரிவித்திருக்கிறார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் சத்ருகன் சின்ஹா

பா.ஜ.க எம்.பியும் நடிகருமான சத்ருகன் சின்ஹா, அக்கட்சித் தலைமைக்கு எதிராகப் பல்வேறு கருத்துகளைத் தொடர்ந்து தெரிவித்து வந்தார். இதனால், அக்கட்சியிலிருந்து அவர் விலகிவிடுவார் என கடந்த சில ஆண்டுகளாகவே பேசப்பட்டு வந்தது. ஆனால், பா.ஜ.க-வில் இருந்து விலகுவது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் மௌனம் காத்துவந்த சத்ருகன் சின்ஹா, தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்தார். தான் நேரு - காந்தி குடும்பங்களின் ஆதரவாளர் என்று கூறிய அவர், விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாகவும் குறிப்பிட்டார். 

இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியில் இணைவது குறித்து பேசியுள்ள அவர், `உண்மையான அக்கறையுடன் செயல்படும் தேசியக் கட்சி காங்கிரஸ் என்பதால்தான் அக்கட்சியில் இணைய முடிவெடுத்தேன். குடும்ப நண்பரான லாலுபிரசாத் யாதவும் இதே யோசனையைத்தான் தெரிவித்தார்’’ என்றார். 

சத்ருகன் சின்ஹா

மேலும், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதிக் கட்சியின் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் தன்னை அவர்களது கட்சியில் இணையுமாறு அறிவுறுத்தியதாக சத்ருகன் சின்ஹா கூறியிருக்கிறார். ஆனால், எந்தக் கட்சியில் சேர்ந்தாலும் தான் போட்டியிடப் போடும் தொகுதி பாட்னா சாஹிப்தான் என்பதைத் தெளிவாக அவர்களிடம் கூறிவிட்டதாகவும் சின்ஹா தெரிவித்தார்.

பா.ஜ.க-வில் நீண்டநாள்களாக இணைந்திருந்த தாம், அக்கட்சியிலிருந்து விலகுவது கடினமான காரியமாக இருந்ததாகவும், ஆனால், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட மூத்த தலைவர்களைக் கட்சி நடத்தும் விதம் தன்னைப் பாதித்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாட்னா சாஹிப் தொகுதியில் கட்சியின் எந்த ஆதரவும் இல்லாமல் தனது சொந்த முயற்சியால் வென்றதாகவும் சத்ருகன் சின்ஹா கூறியிருக்கிறார். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் மட்டுமே பா.ஜ.க-வில் தன்னிச்சையாக முடிவெடுப்பதாகவும் அவர் விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், `பா.ஜ.கவில் ஜனநாயகம் இருந்தது. ஆனால், தற்போது சர்வாதிகாரம் மட்டுமே எஞ்சியிருக்கிறது’ என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார். 

பிரதமர் மோடியுடன் சத்ருகன் சின்ஹா

காங்கிரஸ் தலைவராகக் கடந்த ஓராண்டில் ராகுல் காந்தி சாதித்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், `பிரச்னைகளை அவர் தைரியமாக எதிர்கொள்கிறார். வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற்றும் மூன்று மாநிலங்களில் வெற்றிபெற்று கடந்த ஓராண்டில் காங்கிரஸ் தலைவராகத் தனக்குத் தகுதி இருப்பதாக ராகுல் நிரூபித்திருக்கிறார்’ என்று பாராட்டியிருக்கிறார்.