`மக்களின் பணத்தை யாரும் கொள்ளையடிக்க முடியாது!’ - `சௌகிதார்’ மோடி | I will not let anybody paw at your money under my guard, says Modi

வெளியிடப்பட்ட நேரம்: 20:53 (31/03/2019)

கடைசி தொடர்பு:14:25 (01/04/2019)

`மக்களின் பணத்தை யாரும் கொள்ளையடிக்க முடியாது!’ - `சௌகிதார்’ மோடி

``மக்களின் பணத்தை யாரும் கொள்ளையடிக்கவிட மாட்டேன்'' என பிரதமர் மோடி பேசினார். 

மோடி

டெல்லி டல்கோட்ரா மைதானத்திலிருந்து நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க தொண்டர்களுடன் `நானும் காவலாளிதான்’ என்ற தலைப்பில் பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். இதற்காக நாடு முழுவதும் 500 இடங்களில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பா.ஜ.க-வின் பல்வேறு தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு இடங்களில் இருந்து பங்கேற்றனர்.  தொண்டர்களிடையே பேசிய பிரதமர் மோடி, ``நாட்டு மக்களின் பணத்தை யாரும் கொள்ளையடிக்க விட மாட்டேன். ஒரு பாதுகாவலனாக (சௌகிதார்) நாட்டின் சொத்துகளைப் பாதுகாப்பது என்னுடைய கடமை. நான் மட்டுமல்ல ஒவ்வோர் இந்தியரும், அவர் உள்நாட்டில் இருந்தாலும் வெளிநாட்டில் இருந்தாலும் அவர் கல்வியறிவு பெற்றிருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரும் பாதுகாவலரே. நாட்டில் வசிக்கும், வரிசெலுத்தும் ஒவ்வொரு குடிமகனுக்கும் இதில் பங்கிருக்கிறது. 

மோடி

பிரதமர் வேட்பாளராக வேண்டும் என கடந்த 2014ல் நான் முடிவெடுத்த கணத்திலிருந்து பலர் என்னை விமர்சித்து வருகிறார்கள். இருப்பினும், அவ்வாறு என்னை விமர்சிப்பவர்கள், எனது ஒவ்வொரு முடிவையும் விமர்சித்து என்னை புகழடையச் செய்துவிட்டனர்’’ என்றார். காங்கிரஸை விமர்சித்த மோடி, ``காங்கிரஸ் காலத்துக்கு ஏற்றவாறு தங்களின் பொய்களை மாற்றிக் கொள்ளுவார்கள். டெல்லியில் தேர்தல் வந்தபோது அவர்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பொய்ப் பிரசாரம் செய்தனர். சகிப்புத்தன்மை இல்லை, சகிப்புத்தன்மை இல்லை என அவர்கள் கூவினார்கள். ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகள் தேர்தலோடு நின்றுபோயின’’ என்றார்.

மோடி

பாலகோட் தாக்குதல் குறித்து பேசிய அவர், ``இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டிருக்கிறது. அதனால்தான், அங்குள்ள பிரச்னைகளைச் சரிசெய்யும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அதேபோல், அங்கு தீவிரவாத முகாம்கள் இருப்பதையும் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டிருக்கிறது’’என்றார்.