Published:Updated:

`ஜெயலலிதா மர்ம மரணத்தைக் கண்டுபிடிப்பதுதான் என்னுடைய முதல் வேலை!’ - மு.க.ஸ்டாலின்

`ஜெயலலிதா மர்ம மரணத்தைக் கண்டுபிடிப்பதுதான் என்னுடைய முதல் வேலை!’ - மு.க.ஸ்டாலின்
`ஜெயலலிதா மர்ம மரணத்தைக் கண்டுபிடிப்பதுதான் என்னுடைய முதல் வேலை!’ - மு.க.ஸ்டாலின்

``தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதாவின் மர்ம மரணத்தைக் கண்டுபிடித்து, அதில் தொடர்புடைய குற்றவாளிகளைச் சிறையில் தள்ளுவதுதான் என்னுடைய முதல் வேலை’’ என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளரான துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் மற்றும் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் வில்வநாதன், குடியாத்தம் சட்டமன்ற (தனி) தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் காத்தவராயனை ஆதரித்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் 31-ம் தேதி மாலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து, வேலூர் மாங்காய் மண்டியில் இரவு நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ``மத்தியில் சர்வாதிகாரி மோடி ஆட்சியும், தமிழகத்தில் எடப்பாடியின் எடுபிடி ஆட்சியும் நடக்கிறது. கலைஞர் இருந்திருந்தால், வேலூர் கோட்டையில் அவரின் கரகர குரல் ஒளித்திருக்கும். என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என்று சொல்லியிருப்பார். கலைஞரின் மகனாக இருப்பதற்குப் பெருமை கொள்கிறேன். கலைஞர் இருக்கும்போதே தி.மு.க ஆட்சியை மலரச் செய்து, அவரிடத்தில் ஒப்படைக்க பணியாற்றினோம். இயற்கை முந்திக்கொண்டது. கலைஞரின் மகன் சாதிப்பான். அவரின் நினைவிடத்தில் வெற்றியை ஒப்படைக்க வேண்டும். மிகத் தவறான மனிதர்களின் கையில் மத்திய, மாநில அரசுகள் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. வானத்தைக் கிழிப்பேன், வைகுண்டத்தைக் காட்டுவேன், மணலைக் கூட கயிறாகத் திரிப்பேன் என்று மக்களிடம் வாக்குறுதிகளை அள்ளிவீசினார் மோடி.

இந்திய அரசியலைப்புச் சட்டத்தை புனிதநூல் என்று கூறினார். பிரதமர் பதவி ஏற்ற நாளிலிருந்து, அரசியலைப்புச் சட்டத்துக்கு எதிராகச் செயல்படுவதுதான் மோடியின் வேலையாகத் தொடர்கிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகளே மிரளுகிறார்கள். சி.பி.ஐ. அலுவலகத்தைப் பூட்டுகிறார்கள். காவிரி பிரச்னையில் தீர்ப்பை அமல்படுத்தவில்லை. பத்திரிகையாளர்களைச் சந்திப்பதில்லை. நாடாளுமன்றத்துக்குச் செல்வதில்லை. இந்திய வரலாற்றிலேயே, இப்படி ஒரு பிரதமரை பார்த்ததில்லை. இனிமேலும் நிச்சயமாகப் பார்க்க முடியாது. இப்படிப்பட்ட பிரதமரை அகற்ற வேண்டும் என்பதற்காகவே இந்தத் தேர்தல். நாட்டையும், மக்களையும் எப்போதும் பதற்றத்திலேயே வைத்திருக்கிறார் மோடி. ஒரு நாள் நடு இரவில் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி அமல்படுத்தினார். மோடி ஓர் இருள் மயமான பிரதமர். காவிரி பிரச்னையில் தி.மு.க துரோகம் செய்திருப்பதாக இ.பி.எஸ், ஓ.பி.எஸ் பிரசாரம் செய்கிறார்கள். காவிரி குறுக்கே மேக்கேதாட்டூ அணையைக் கட்ட அனுமதி கொடுத்த பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைத்திருப்பவர்கள் யார்? காவிரி பிரச்னையில் வரலாறு தெரியாத முட்டாள்களின் பேச்சாக பார்க்கிறேன். ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தொழிலே துரோகம் செய்வதுதான். ஜெயலலிதா, சசிகலாவுக்கே துரோகம் இழைத்தவர்கள்.

சசிகலாவின் காலில் மண்புழு போன்று தவழ்ந்து, முதல்வர் பதவியை வாங்கியவர் எடப்பாடி பழனிசாமி. மக்களைக் கொல்லும் புழுவாக அவரைப் பார்க்கிறேன். ஜெயலலிதா மர்ம மரணத்தைப் பற்றி நான் பேசக்கூடாது என்று நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறார் எடப்பாடி. கொள்கையில் வேறுபாடு இருக்கலாம். முதல்வராக இருந்தவர் மர்மமாக இறந்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் கேட்க உரிமை இருக்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், ஜெயலலிதா மரணத்தைக் கண்டுபிடித்து குற்றவாளிகளைச் சிறையில் தள்ளுவதுதான் என்னுடைய முதல் வேலை. என்னைக் கூலிப்படைத் தலைவர் என்று சொல்கிறார் எடப்பாடி. ஜெயலலிதாவுக்கு ஓட்டுநராக இருந்த கனகராஜை பயன்படுத்தி கொடநாடு காவலாளியைக் கொலை செய்து, கொள்ளையடித்தவர்கள் யார்? உண்மையைச் சொல்லுங்கள். ஜெயலலிதா இறந்தபிறகு, ஓ.பி.எஸ் முதல்வர் பதவி ஏற்றுக்கொண்டு சட்டமன்றத்துக்கு வந்தார். திடீரென்று என்னையும், துரைமுருகனையும் பார்த்துச் சிரித்தார். அவ்வளவுதான், ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து முதல்வர் பதவியை பறித்துக்கொண்ட சசிகலா, அந்தப் பதவியில் அமர நினைத்தார். எம்.எல்.ஏ-க்களை கூவத்தூரில் அடைத்துவைத்தனர். ஜெயலலிதா சமாதியில் ஓ.பி.எஸ் அமர்ந்து ஆவியுடன் பேசினார். பின்னர், அம்மா இயற்கையாக மரணமடையவில்லை. சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று முதலில் சொன்னவரும் ஓ.பி.எஸ் தான். துணை முதல்வர் பதவி கொடுத்த பிறகு, சி.பி.ஐ. விசாரணை பற்றி அவர் பேசவில்லை.

துரைமுருகன் வீட்டில் 29-ம் தேதி இரவு முதல் 30-ம் தேதி இரவு வரை வருமானவரித் துறை சோதனை நடைபெற்றது. இதைப்பார்த்து, தி.மு.க பயந்துவிடும் என்று நினைக்கிறார்கள். நாங்கள் பனங்காட்டு நரி, எந்த சலசலப்புக்கும் அஞ்சமாட்டோம். மடியில் கனமில்லை. அதனால் வழியில் பயமில்லை. அ.தி.மு.க-வை மிரட்டி அச்சுறுத்தி கூட்டணியில் சேர்ந்துள்ள பா.ஜ.க, தமிழகத்தில் கால்பதிக்கப் பார்க்கிறது. உங்களை மக்கள் மிரட்டக்கூடிய காலம், 18-ம் தேதி வந்துவிட்டது. மிகவும் ஏழ்மையில் இருக்கும் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று ராகுல்காந்தி அறிவித்திருக்கிறார். அவருக்கு நன்றியும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். வறுமையில் உள்ளவர்களுக்கு மூன்று தவணையாக ரூ.6,000 தருவதாக மோடியும் அறிவித்தார். அந்தப் பணம் வரும், ஆனால் வராது. தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பாலாற்றின் குறுக்கே 10 தடுப்பணைகள் கட்டப்படும். மழைக்கால வெள்ளநீர் கடலில் கலப்பதைத் தடுத்து, வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி உட்பட 20 பகுதிகளில் விவசாயம், குடிநீர்த் தேவைக்குப் பயன்படுத்தப்படும். தென்பெண்ணை நதியிலும் பல்வேறு தடுப்பணைகள் கட்டப்படும். தோல் பதனிடும் கழிவுகளை அகற்ற பொதுவான திட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். 10-ம் வகுப்பு வரை படித்த ஒரு கோடி இளைஞர்களுக்குச் சாலைப் பணியாளர்கள் பணி வழங்கப்படும். நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும். கேபிள் கட்டணம் முந்தைய அளவு குறைக்கப்படும். மகளிருக்குச் சிறுதொழில் தொடங்க வட்டியில்லாமல் ரூ.50,000 கடன் வழங்கப்படும். விவசாயத் தொழிலாளர்களுக்கான 100 நாள் வேலைத் திட்டம், 150 நாள்களாக உயர்த்தப்படும். விவசாயக் கடன் மற்றும் மாணவர்களின் கல்விக்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். கலைஞரின் வழியில் சொன்னதைச் செய்வோம். செய்வதைத்தான் சொல்வோம்’’ என்றார்.

பின் செல்ல