Published:Updated:

`தம்பிதுரைக்கு கிருஷ்ணகிரி; ஜோதிமணி நம்ம ஊரு பொண்ணு!'- மக்களிடம் வாக்குகேட்ட செந்தில் பாலாஜி

`தம்பிதுரைக்கு கிருஷ்ணகிரி; ஜோதிமணி நம்ம ஊரு பொண்ணு!'- மக்களிடம் வாக்குகேட்ட செந்தில் பாலாஜி
`தம்பிதுரைக்கு கிருஷ்ணகிரி; ஜோதிமணி நம்ம ஊரு பொண்ணு!'- மக்களிடம் வாக்குகேட்ட செந்தில் பாலாஜி

``காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி நம்ம ஊரு பொண்ணு. தம்பிதுரையைப் போல கிருஷ்ணகிரியிலிருந்து வந்து ஓட்டு கேட்கவில்லை" என்று செந்தில் பாலாஜி குற்றம்சாட்டிப் பேசினார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. அந்த வகையில், கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் தம்பிதுரையும், தி.மு.க கூட்டணியில் கங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணியும் தீவிர பிரசாரத்தில் இருக்கிறார்கள். தேசிய முற்போக்கு மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, கரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட, தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, புஞ்சை புகளூர் உள்ளிட்ட பகுதிகளில் கைச் சின்னத்துக்கு வாக்கு கேட்டு, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். இப்பிரசாரத்தில், தி.மு.க கரூர் மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, ஜோதிமணிக்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், ``நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், வாக்காளர்கள் இந்த முறை சிந்தித்து வாக்களிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி நம்ம ஊரு பொண்ணு. தம்பிதுரையைப்போல கிருஷ்ணகிரியிலிருந்து வந்து ஓட்டு கேட்கவில்லை. 45 கல்லூரிகளுக்குச் சொந்தமானவர் தம்பிதுரை. தற்போதுகூட ஒரு மருத்துவக் கல்லூரி கட்டி வருகிறார். அக்கல்லூரியில் இப்பகுதியைச் சேர்ந்த ஏழை மாணவர் யாராவது ஒருவர் இலவசமாக படிக்க அவர் வாய்ப்பு கொடுத்ததுண்டா. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்கு கேட்க மட்டுமே வரும் தம்பிதுரை, இந்த முறை அ.தி.மு.க கட்சி நிர்வாகிகளுக்கு 2 பவுன் தங்கம் வழங்கியுள்ளார். 

அதுபோல, வாக்காளர்களுக்கு ஒரு பவுன் தங்கம் வழங்குவார் என நினைக்கிறேன். கரூர் ஒன்றியத்துக்குட்பட்ட மண்மங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியில் விரைவில் ஒரு அரசுக் கலைக்கல்லூரி அமைத்து தர கண்டிப்பாக முயற்சி மேற்கொள்ளப்படும். தம்பிதுரை போல போகிற போக்கில் பொய் சொல்லிவிட்டு செல்ல மாட்டோம். தம்பிதுரைக்குப் பொய் சொல்லுவதே வாடிக்கை. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, 'மோடி அரசால் தமிழகத்துகு எந்த நன்மையும் இல்லை' என்று தம்பிதுரை கூறினார். ஆனா, இப்போது, 'மோடி அரசாங்கம் சிறந்த அரசாங்கம்' என்று கூறுகிறார். அதேபோல, 'மோடி அரசாங்கம், எடப்பாடி அரசாங்கம் சரியில்லை' என்று கூறிய அன்புமணி ராமதாஸ், தற்பொழுது 'சிறந்த அரசாங்கம்' என்று கூறுகிறார். காரணம், தேர்தலுக்காக திடீரென கொள்கை இல்லாத கூட்டணி அமைத்திருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் அமைத்துள்ள கூட்டணி, கடந்த இரண்டு மூன்று ஆண்டுகள் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து, மக்களுக்காகப் போராடி அமைத்துள்ள கொள்கைக்கான கூட்டணி" என்றார்.