``இப்போ பிரசாரம் மட்டும் செய்றேன்; என் இலக்கு என்ன தெரியுமா?!" - சி.ஆர்.சரஸ்வதி | C.R.Saraswathi talks about her political stand

வெளியிடப்பட்ட நேரம்: 17:17 (01/04/2019)

கடைசி தொடர்பு:17:17 (01/04/2019)

``இப்போ பிரசாரம் மட்டும் செய்றேன்; என் இலக்கு என்ன தெரியுமா?!" - சி.ஆர்.சரஸ்வதி

"'மோடியா? இந்த லேடியா'னு பா.ஜ.க-வை தைரியமாக எதிர்த்தார், ஜெயலலிதா அம்மா. ஆனால், அவர் பெயரைச் சொல்லி ஆட்சி நடந்துற எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ.க-வுடன் வெட்கமே இல்லாம கூட்டணி வெச்சிருக்காங்க. `மோடி எங்க டாடி'னு சொல்ற அளவுக்குச் சுயநலத்துடன் செயல்படுறாங்க."

``இப்போ பிரசாரம் மட்டும் செய்றேன்; என் இலக்கு என்ன தெரியுமா?!

தேர்தல் களம் பரபரப்பாகியுள்ள நிலையில், கட்சிகளுக்குச் சின்னம் ஒதுக்கீடு, பிரசாரம், வாக்குறுதிகள் என ஒவ்வொரு நிகழ்வும் விவாதமாகவே மாறிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில், டி.டி.வி தினகரனின் அ.ம.மு.க கட்சிக்கு, குக்கர் சின்னம் ஒதுக்கமுடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியிருந்தது. மேலும், அந்தக் கட்சிக்குப் பரிசுப்பெட்டி சின்னம் வழங்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அ.ம.மு.க கட்சியின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதியிடம் பேசினோம்.

சி.ஆர்.சரஸ்வதி

``குக்கர் சின்னம் வழங்கப்படாததை எப்படிப் பார்க்கிறீங்க?"

``நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் என எல்லாத் தொகுதிகளிலும் நாங்க தனித்துப் போட்டியிடுறோம். குக்கர் சின்னத்தை எந்தக் கட்சிக்கும் கொடுக்காம முடக்கி வெச்சிருந்த தேர்தல் ஆணையம், அதை எங்களுக்குக் கொடுக்கிறதில் என்ன பிரச்னை? இரட்டை இலைச் சின்னம் எங்களுக்குக் கிடைக்காத நிலையில, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வென்றோம். இரட்டை இலைச் சின்னம் வழக்கு இன்னும் நீதிமன்றத்துலதான் இருக்கு. ஆனா, இரட்டை இலைச் சின்னம் மற்றும் அ.தி.மு.க கட்சியை ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி அணிக்குத் தேர்தல் ஆணையம் கொடுத்துடுச்சு. அதுக்கு டெல்லி மேலிடத் தயவுதான் காரணம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைப்போல, இந்தத் தேர்தலிலும் நாங்க வெற்றி பெற்றிடுவோம்னு அ.தி.மு.க-வினருக்கு பயம். அதனால்தான் மத்திய மேலிடத் தயவால் எங்களுக்குக் குக்கர் சின்னத்தைக் கிடைக்கவிடாமல் செய்திருக்காங்க. இது மக்களுக்கு நல்லாவே தெரியும்."  

``உங்க கட்சிக்கு பரிசுப்பெட்டி சின்னம் வழங்கப்பட்டிருப்பது பற்றி..." 

``குக்கர் சின்னம் போனால் என்ன? சின்னத்தைவிட ஒரு கட்சியின் தலைமைதான் ரொம்ப முக்கியம். எங்க கட்சியும், தலைவரும் மக்கள் மத்தியில் நல்லாவே பிரபலமாகிட்டதால எங்களுக்குக் கவலையில்லை. உச்ச நீதிமன்றம் எங்களுக்குத் தனிச்சின்னம் கொடுக்கச் சொல்லியிருந்துச்சு. அதன்படி பரிசுப்பெட்டி சின்னம் வழங்கப்பட்டிருக்கு. இது எங்களுக்கு மிகப் பொருத்தமான சின்னம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலேயே கடைசி நேரத்துலதான் எங்களுக்குக் குக்கர் சின்னம் அறிவிக்கப்பட்டுச்சு. ஆனா, களப்பணியால அந்தச் சின்னத்தை மக்கள்கிட்ட சரியா கொண்டுபோய் சேர்த்தோம். அதுபோல பரிசுப்பெட்டி சின்னத்தையும் மக்கள்கிட்ட விரைவாகக் கொண்டுபோய் சேர்ப்போம். வெற்றி பெறுவோம்."

சி.ஆர்.சரஸ்வதி

``பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்துள்ளதை எப்படிப் பார்க்கிறீங்க?"

```மோடியா? இந்த லேடியா'னு பா.ஜ.க-வை தைரியமாக எதிர்த்தார், ஜெயலலிதா அம்மா. ஆனால், அவர் பெயரைச் சொல்லி ஆட்சி நடந்துற எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ.க-வுடன் வெட்கமே இல்லாம கூட்டணி வெச்சிருக்காங்க. `மோடி எங்க டாடி'னு சொல்ற அளவுக்குச் சுயநலத்துடன் செயல்படுறாங்க. `ஒரு கவுன்சிலராக இருக்கக்கூட லாயக்கற்றவர்'னு பழனிசாமியை, அன்புமணி சொல்லியிருக்கார். இதையெல்லாம் புறந்தள்ளி, வெட்கம், மானம் இல்லாம செயல்படுற எடப்பாடி பழனிசாமி அமைத்திருக்கிற கூட்டணிக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவாங்க. இவங்க ஜெயலலிதாவின் பெயரைப் பயன்படுத்த எந்த அருகதையும் இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஜெயலலிதா அம்மா 39 தொகுதியிலயும் தனித்துப் போட்டியிட்டு, 37 தொகுதியில் வெற்றி பெற்றாங்க. ஆனா, இன்றைய அடிமை அரசை நடத்துற பழனிசாமி-பன்னீர்செல்வம் அணி, 20 தொகுதியிலதான் போட்டியிடுறாங்க. தோல்வி பயத்தால்தான், பல கட்சிகளுடன் கூட்டணி வெச்சிருக்காங்க என்பது நல்லா தெரியுது."

``பி.ஜே.பி-க்கு ஆதரவாகக் குடியரசுத்தலைவர் தேர்தலில் உங்கள் அணியினர் வாக்களிச்சாங்களே..."

``அரசியலுக்கு அப்பாற்பட்டது, குடியரசுத்தலைவர் தேர்தல். அதில் ஏதாவதொரு கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிச்சுதான் ஆகணும். எந்தச் சூழல்லயும் தி.மு.க கூட்டணி அமைத்திருக்கிற காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவா நாங்க வாக்களிக்க மாட்டோம். அதனாலதான், பா.ஜ.க வேட்பாளருக்கு வாக்களிச்சோம். அதில் எந்தத் தவறும் இல்லையே!"

சரஸ்வதி

``தற்போது நடைபெறும் தேர்தலில் நீங்க வேட்பாளரா நிற்கலையே. ஏன்?"

``எனக்கு எப்போதும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில்தான் ஈடுபாடு; இலக்கு. தற்போது நடைபெறும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தங்கள் எம்.எல்.ஏ பதவியை இழந்த எங்க கட்சியினர் பலருக்கும் கட்டாயம் வாய்ப்புக் கொடுக்கணும். அதன்படி அவர்களில் பலரையும் எங்க தலைவர் வேட்பாளராக்கியிருக்கிறார். எனவே, இந்தத் தேர்தலில் எங்க கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்குப் பிரசாரம் செய்யவே ஆசைப்படறேன்."

``அ.ம.மு.க-வில்தான் இறுதி வரை இருப்பீர்களா?"

(சிரிக்கிறார்) ``ஆளுங்கட்சியினர் அணியில் சேர்ந்திருந்தால் பணமோ, பதவியோ கிடைச்சிருக்கும். எனக்கு அது முக்கியமல்ல. எடுத்த கொள்கையில் உண்மையா இருப்பதுடன், எந்த எதிர்பார்ப்பும் இல்லாம நியாயமான அணியின் பக்கம் இருப்பதுதான் மனசாட்சி உள்ளவங்களுக்கு அழகு. நான் மனசாட்சியுடன் செயல்பட ஆசைப்படறேன். எனவே, நான் அரசியலில் இருக்கிறவரை அ.ம.மு.க-வில்தான் இருப்பேன்."

``நீண்டகாலமா சினிமாவில் நடிக்காம இருக்கீங்களே..."

``ஜெயலலிதா அம்மா எனக்குச் சமூகநல வாரிய தலைவர் பொறுப்பு கொடுத்தாங்க. அரசுப் பொறுப்பில் இருந்ததால, நடிக்கிறதைத் தவிர்த்தேன். தொடர்ந்து அரசியல் என் முழுநேர கரியர் என்பதால, இனி நான் நடிக்க மாட்டேன்."  


டிரெண்டிங் @ விகடன்