Published:Updated:

`உங்களுக்காக நாடாளுமன்றத்தில் போராடினேன், டி.வி-யில் பார்த்திருப்பீங்க!'- தம்பிதுரை பிரசாரம்

`உங்களுக்காக நாடாளுமன்றத்தில் போராடினேன், டி.வி-யில் பார்த்திருப்பீங்க!'- தம்பிதுரை பிரசாரம்
`உங்களுக்காக நாடாளுமன்றத்தில் போராடினேன், டி.வி-யில் பார்த்திருப்பீங்க!'- தம்பிதுரை பிரசாரம்

"இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட காரணமான சின்னம் கைச்சின்னம். ரத்தக்கறை படிந்த சின்னம் அது. அதற்கு, வாக்களிக்காதீர்கள்" என்று தம்பிதுரை தனது பிரசாரத்தில் கேட்டுக்கொண்டார்.


 கரூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரை, அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பவித்திரம், குப்பம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து, புன்னம் சத்திரம் பேருந்து நிறுத்தம் எதிரே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தம்பிதுரை, பொதுமக்களிடையே உரையாற்றினார்.

அப்போது அவர், "காங்கிரஸ், ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த ராஜபக்ஷேவுக்கு உதவிவிட்டு, தமிழர்களிடம் இப்போது ஓட்டு கேட்பது நியாயமா? கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி, தமிழர்களுக்கு காவிரி நீரை வழங்காமல், தமிழர்களின் ஓட்டுகளை மட்டும் பெற்று, மத்தியில் ஆட்சியமைக்க நினைப்பது எந்த விதத்தில் சரி? தமிழர்கள் என்ன ஏமாளிகளா. காங்கிரஸும் தி.மு.க-வும் நமக்கு எண்ணற்ற துரோகங்களைச் செய்துள்ள கட்சிகள். கைச்சின்னம் என்பது ரத்தம் படிந்த சின்னம். இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களை ராஜபக்ஷே கொல்வதற்குக் காரணமாக இருந்த சின்னம் கைச்சின்னம்.  

காவிரித் தண்ணீரை தமிழக மக்களுக்கு வழங்காத சின்னம். ஆனால், தமிழர்களின் உரிமையைக் காப்பாற்ற இரட்டை இலை சின்னத்தால் மட்டும்தான் முடியும். நான் உங்களுக்காக நாடாளுமன்றத்தில் போராடினேன். அதை நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக முடியும். எனவே, இரட்டை இலை சின்னத்துக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். குடிதண்ணீர் பிரச்னை உங்களுக்குத் தீரணும்னா, கண்டிப்பாக நீங்கள் இரட்டை இல்லைக்கே வாக்களிக்க வேண்டும். தேர்தல் முடிந்ததும், அரசு வழங்கும் உதவித்தொகையான 2000 ரூபாய் உங்கள் ஒவ்வொருவரையும் தேடி உங்கள் இல்லம் வரும்" என்றார்.