Published:Updated:

"எல்லா பிரச்னைகளுக்கும் தி.மு.க தான் காரணம்" - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

"எல்லா பிரச்னைகளுக்கும் தி.மு.க தான் காரணம்" - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
"எல்லா பிரச்னைகளுக்கும் தி.மு.க தான் காரணம்" - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

கடலூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில், பா.ம.க வேட்பாளராக டாக்டர் கோவிந்தசாமி போட்டியிடுகிறார். கடலூரில், பா.ம.க சார்பில் கூட்டணிக் கட்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில், கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார்.

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், ‘நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ,அ.தி.மு.க. கூட்டணி வெற்றி நிச்சயம் ஆகிவிட்டது.  அதனால், எதிர்க்கட்சியினருக்கு குறிப்பாக தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால், கோபத்தில் உள்ள ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர், தேர்தல் பிரசாரத்தில்  கொச்சையாக ஏளனப் பேச்சு பேசிவருகின்றனர்.

அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து தமிழ்நாட்டின் உரிமைகளைப்  பாதுகாக்கவும்,  மாநில சுயாட்சிக்காகவும் இந்தக் கூட்டணி அமைந்துள்ளது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்கள், எந்த ஒரு திட்டத்தைப் பற்றியும் பேசுவது கிடையாது. பா.ம.க-வை திட்டிப் பேசுவதை வழக்கமாகச் செய்துவருகிறார். மேலும், அவர் தேர்தல் பிரசாரத்தின்போது பொய்யான பிரசாரங்களைச் செய்துவருகிறார்.

நீட் தேர்வை ரத்துசெய்வதாகக் கூறுகிறார். ஆனால், நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க, காங்கிரஸ் கட்சிகள் தான்.  அதேபோல,  ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்குக் கையெழுத்துப் போட்டதும் தி.மு.க, காங்கிரஸ் கட்சிகள் தான்.  தற்போது தடைசெய்ய வேண்டும் என நாடகம் நடத்துகின்றனர்.  ஸ்டெரிலைட் ஆலைக்கு அனுமதி கொடுத்து திறந்துவைத்ததே கலைஞர் கருணாநிதிதான். ஆலை விரிவாக்கத்திற்கு இடம் கொடுத்ததும் தி.மு.க-தான். ஆனால் இன்று, அவற்றை எதிர்த்துப் போராடுகின்றனர். இது, மக்களை ஏமாற்றும் செயல். மேலும், காவிரிப் பிரச்னை தொடர்பாக ஸ்டாலின் பேசுவதற்கு அருகதை கிடையாது'' என்று கூறினார்.