துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு எடப்பாடியின் முதல் விசிட் - பி.பி. எகிறும் தூத்துக்குடி | Edappadi palanisamy's first visit to thoothukudi after the tragic sterlite incident #GoBackEdappadi

வெளியிடப்பட்ட நேரம்: 22:34 (01/04/2019)

கடைசி தொடர்பு:11:13 (02/04/2019)

துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு எடப்பாடியின் முதல் விசிட் - பி.பி. எகிறும் தூத்துக்குடி

தேர்தல் எடப்பாடி பழனிச்சாமி

ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் ஓராண்டினை நெருங்க இருக்கிறது. இதற்கிடையே 2019 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி செல்ல இருக்கின்றார். 13 பேர் உயிரிழந்த கொடுந்துயர துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு தமிழக முதல்வர் தூத்துக்குடி செல்வது இதுவே முதல் முறை.

இதுகுறித்து தூத்துக்குடியில் மக்களிடையே சூழல் எப்படி இருக்கிறது என்று அறிய தொடர்பு கொண்டு பேசினோம். அவர்கள் கூறுகையில்,``ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் 145 பேர் வரை துப்பாக்கித் தாக்குதலில் அடிபட்டு மருத்துவமனையில் கிடந்தனர். 13 பேர் துப்பாக்கிச் சூட்டினால் இறந்தார்கள். அப்போது வராத முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிட்டத்தட்ட ஒரு வருடம் நெருங்கும் சூழலில் தேர்தலுக்காக வாக்குச் சேகரிக்கத் தற்போது இங்கே வருகிறார். ஏற்கெனவே இரண்டு முறை வந்திருந்தாலும் திருநெல்வேலி பைபாஸ் வழியாகவே சென்றுவிடுவார். மாவட்டத்துக்குள்ளும் வந்து சென்றுள்ளார். ஆனால் தூத்துக்குடிக்குள் வரவில்லை.

ஆனால், தூத்துக்குடிக்குள் நுழைவது இதுதான் முதல்முறை. #GoBackEdappadi  என வாட்ஸ் அப்புகளிலும் முகநூலிலும் நாங்கள் ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்துவருகிறோம். ஆனால் அதைக் கடந்து எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. காரணம் எங்களை அவர்கள் சுவர்கள் இல்லாத சிறைக்குள் அடைத்துவைத்துள்ளார்கள். நாங்கள் கொஞ்சம் அசைந்தாலும் எங்களது நகர்வுகள் காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுவிடும். ஆனால் ஸ்டெர்லைட் வேதாந்தா ஆலையைச் சேர்ந்தவர்கள் சுதந்திரமாக உலாவலாம். அவர்களைக் காவல்துறை ஒன்றும் கண்டுகொள்வதில்லை. ஆனால் இறந்தவர்களின் குடும்பம் உட்பட அனைவரையும் இன்றுவரை காவல்துறை கண்காணித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி வருவது எங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அதற்கு எந்த வகையிலும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாமல் நாங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளோம்” என்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க