`இதுவரை 30 கோடி ரூபாய் பறிமுதல்!’ - துரைமுருகன் மகன் போட்டியிடுவதில் சிக்கல் | So far Rs.30 crore is seized from Duraimurugan's relatives house

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (02/04/2019)

கடைசி தொடர்பு:10:29 (03/04/2019)

`இதுவரை 30 கோடி ரூபாய் பறிமுதல்!’ - துரைமுருகன் மகன் போட்டியிடுவதில் சிக்கல்

துரைமுருகனுக்கு நெருக்கமானவர்களிடம் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில், இதுவரை ரூ.30 கோடிக்கும் அதிகமான பணம் கட்டுக்கட்டாக சிக்கியுள்ளன. இந்த விவகாரத்தால் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகப் பரபரப்பு தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த்

காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரான துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் நிர்வகிக்கும் கிங்க்ஸ்டன் கல்லூரியில் கடந்த 29-ம் தேதி இரவு முதல் 30-ம் இரவு வரை வருமானவரித் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, துரைமுருகன் வீட்டிலிருந்து 10 லட்சம் ரூபாய் கைப்பற்றினர். இந்த நிலையில், 1-ம் தேதி வருமானவரித் துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை பாதுகாப்புடன் மீண்டும் சோதனை நடத்தினர். காட்பாடி பள்ளிக்குப்பத்தில் உள்ள துரைமுருகனுக்கு நெருக்கமான தி.மு.க பிரமுகர் சீனிவாசன் வீடு மற்றும் அவரின் சிமென்ட் குடோனுக்குள் மூட்டையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் பணம் கட்டுக்கட்டாக சிக்கின. வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்வதற்காகப் பணத்துடன் இணைக்கப்பட்டிருந்த பட்டியலும் கைப்பற்றப்பட்டன.

இதேபோல், சீனிவாசனின் அக்காள் விஜயா வீடு, தி.மு.க பிரமுகர்களான வஞ்சூர் பகுதி பெருமாள், கல்புதூரைச் சேர்ந்த தாமோதரன் மற்றும் துரைமுருகன் உதவியாளர் அஸ்கர் அலி வீடுகள் உட்பட மொத்தம் ஏழு இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இவற்றில், மொத்தம் ரூ.30 கோடிக்கும் அதிகமான பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கின்றன. பணத்தைக் கணக்கிடும் பணியில் வருமானவரித் துறையினர் ஈடுபட்டுள்ளனர். துரைமுருகனின் வீடு, கல்லூரியில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்களை வருமானவரித் துறையினர் கைப்பற்றியுள்ளனர். இரவு 9 மணிக்குப்பிறகு துரைமுருகன் வீட்டில் சோதனை நிறைவடைந்தது.

அதன்பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், ``தி.மு.க-வின் வெற்றியைத் தடுப்பதற்காக முட்டாள்கள் தப்புக்கணக்குப் போடுகிறார்கள். வாக்கு கேட்பதை தடுத்துள்ளார்கள். வருமானவரித் துறையில் முழுக்க முழுக்க அரசியல் கலந்திருக்கிறது. மத்திய-மாநில அரசுகளும், அவர்களுக்குத் துணை நிற்கின்ற அரசியல் கட்சிகளும் செய்யும் வேலைதான். அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. வருமானவரித் துறையினர் வந்தார்கள், என்னிடம் எதுவும் இல்லையென்றேன், அவர்களும் சென்றுவிட்டார்கள். வருமானவரித் துறை சோதனையால் மக்கள் மனநிலை எப்படியிருக்கும் என்ற அரசியல் அரிச்சுவடி இல்லாதவர்கள் செய்யும் வேலைதான் இது’’ என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

இதனிடையே, ‘‘பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது தொடர்பாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிக்க உள்ளோம். அதன்பிறகு, வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தலை ரத்து செய்வதுபற்றி தேர்தல் ஆணையம் ஆலோசித்து முடிவுசெய்யும்’’ என்று தமிழக தேர்தல் ஆணையர் சத்திய பிரதா சாகு தெரிவித்திருக்கிறார். கைப்பற்றப்பட்ட பணம் துரைமுருகனுக்கு சொந்தமானது என்று உறுதிசெய்யப்பட்டால், வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அவரின் மகன் கதிர்ஆனந்த் தகுதி நீக்கம் செய்யப்படலாம் அல்லது இந்த ஒரு தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்துசெய்யப்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.