2 சதவிகிதம்தான் வித்தியாசம்... வயநாடு ராகுல்காந்திக்கு பாதுகாப்பானதா? | Wayanad wili be a safe for Rahul Gandhi?

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (02/04/2019)

கடைசி தொடர்பு:10:35 (03/04/2019)

2 சதவிகிதம்தான் வித்தியாசம்... வயநாடு ராகுல்காந்திக்கு பாதுகாப்பானதா?

கேரளாவின் மிகவும் அழகான மாவட்டமான வயநாட்டில் போட்டியிடுகிறார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி. நீலகிரி மாவட்டத்தையொட்டியுள்ள இந்த மாவட்டம் சுற்றுலாத் தலங்களுக்குப் பெயர்பெற்றது. பழசிராஜா மன்னர் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எழுப்பப்பட்டுள்ள நினைவு மண்டபம் முக்கிய சுற்றுலாத்தலம். இந்த மாவட்டத்தில் இஸ்லாமியர்களின் வாக்குகள் அதிகம். அவை, நிச்சயம் காங்கிரஸ் கட்சிக்குத்தான் விழும். கோழிக்கோடு, கன்னூர், வயநாடு மாவட்டங்களில் வயநாடு தொகுதி பரந்து விரிந்துள்ளது. 2009, 2014-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் ஷாநவாஸ் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார். இவர், கடந்த ஆண்டு இறந்துபோனார். 

துஷார் வெல்லப்பள்ளி- ராகுல்காந்தி

2009-ம் ஆண்டு வயநாட்டில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஷாநவாஸ் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2014-ம் ஆண்டு வெறும் 2 சதவிகித வாக்கு வித்தியாசத்தில்தான் ஷாநவாஸால் வெற்றி பெற முடிந்தது. அதாவது, காங்கிரஸ் கட்சிக்கு 41 சதவிகித வாக்குகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 39 சதவிகித வாக்குகளும் கிடைத்தன. பாரதிய ஜனதா கட்சிக்கு 9 சதவிகித வாக்குகள் கிடைத்தன. மற்றவர்கள் 11 சதவிகித வாக்குகள் பெற்றனர். வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் 7 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஆனால், வயநாடு மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் 49.5 சதவிகித இந்துக்களும் 28.8 சதவிகித இஸ்லாமிய மக்களும் 21.5 சதவிகித கிறிஸ்துவர்களும் உள்ளனர். இஸ்லாமியர்கள், கிறிஸ்துவ மக்கள் ஓட்டுகளும் ராகுல்காந்திக்கு கிடைக்க வாய்ப்புள்ளன. 
 
வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் 7 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அதில், மானந்தவாடி, சுல்தான்பத்தேரி, கல்பெட்டா ஆகிய 3 மட்டுமே வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் வருகின்றன. திருவம்பாடி, கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ளது. எரநாட், நிலம்பூர், வாண்டுர் மலப்புரம் மாவட்டத்தில் உள்ளன. மலப்புரம் மாவட்டம் 70 சதவிகித இஸ்லாமிய மக்கள் நிறைந்த மாவட்டம். இங்கு 28 சதவிகித இந்துக்களும் 2 சதவிகித கிறிஸ்துவர்களும் உள்ளனர். மலப்புரம் மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் வாக்குகள் அதிகம் இருப்பதால் இதை நம்பியே ராகுல் காந்தி தைரியமாக வயநாட்டில் களம் இறங்கியுள்ளார். வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள 7 சட்டமன்றத் தொகுதியில் 4 எம்.எல்-ஏ-க்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். இருவர் இஸ்லாமியர்கள். மற்றொருவர் கிறிஸ்துவர். இஸ்லாமிய மக்கள் நிறைந்த மலப்புரம் மாவட்டத்தில் அடங்கியுள்ள 3 தொகுதிகளில் இரண்டில் இஸ்லாமியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மற்றொன்றில், காங்கிரஸைச் சேர்ந்த இந்து ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். 

வயநாடு தொகுதில் ராகுல் காந்தி போட்டி

ஒரு வேளை ராகுல்காந்தி வயநாட்டில் வெற்றி பெற்றால், தன் பதவியை ராஜினாமா செய்துவிடுவார். அமேதியைத் தேர்வு செய்வார் என்கிற கேள்வி எழும் நிலையில் ராகுல்காந்தியின் வெற்றி வாய்ப்பு குறைய வாய்ப்பு உள்ளதாம். ஏனென்றால், கேரள முதல்வர் வேறு ராகுல்காந்தியைத் தோற்கடிப்போம் என்று கூறியுள்ளார். ராகுல்காந்தி வெற்றி பெற்றுவிட்டு தன் எம்.பி பதவியை ராஜினாமா செய்து விடுவார் என்ற பிரசாரத்தை கம்யூனிஸ்ட் கட்சிகள் முன்னெடுக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் 2014-ம் ஆண்டுத் தேர்தலில் வெறும் 2 சதவிகித வாக்கு வித்தியாசத்தில்தான் காங்கிரஸ் வெற்றி பெற்றதையும் கணக்கில் கொள்ள வேண்டும். 

வயநாட்டில் பாரதிய ஜனதா கட்சி ராகுல்காந்தியை நேரடியாக எதிர்க்கவில்லை. கூட்டணி கட்சியைச் சேர்ந்த துஷார் வெல்லப்பள்ளியை களம் இறக்கியுள்ளது. ராகுல் காந்திக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும்தான் நேரடி போட்டி இங்கே இருக்கிறது. 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க