`அங்கு ஒரு பிரயோஜனமும் இல்லை; மத்திய சென்னைக்குப் போவோம்!’ - தூபம்போட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் | chennai admk cadres in happiest mood

வெளியிடப்பட்ட நேரம்: 12:47 (02/04/2019)

கடைசி தொடர்பு:13:20 (02/04/2019)

`அங்கு ஒரு பிரயோஜனமும் இல்லை; மத்திய சென்னைக்குப் போவோம்!’ - தூபம்போட்ட அ.தி.மு.க நிர்வாகிகள்

அலிபாபா குகைக்குள் புகுந்த ‘எபெக்ட்டில்’ இருக்கிறது சென்னை அ.தி.மு.க. ஒருபுறம் மத்திய சென்னை பா.ம.க வேட்பாளர் சாம்பால், மறுபுறம் தென்சென்னை அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தன் என இருவரும் பணத்தை வாரி இறைப்பதால், அள்ளுவதற்குக் கைகள் போதாமல் சென்னை அ.தி.மு.க-வினர் குஷியில் திளைக்கிறார்கள்.

சாம்பால்

சென்னையில் மொத்தம் 37.92 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். சென்னை மாநகராட்சிக்குள் வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை என மூன்று தொகுதிகள் வருகின்றன. இதில், அ.தி.மு.க கூட்டணி சார்பாக வடசென்னையில் தே.மு.தி.க வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், மத்திய சென்னையில் பா.ம.க வேட்பாளர் சாம்பால், தென்சென்னையில் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அழகாபுரம் மோகன்ராஜிடம் பணமில்லை. அவரது கட்சியிலும் செலவுக்காக பணம் ஒதுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அவருக்கு தேர்தல் வேலை பார்ப்பதால் ஒரு பிரயோஜனமும் இல்லை என யூகித்த அ.தி.மு.க கட்சி நிர்வாகிகள் பலரும், மத்திய சென்னை வேட்பாளர் சாம்பாலிடம் அடைக்கலமாகிவிட்டனர். பலராமன், ஜே.சி.டி.பிரபாகர், ஆதிராஜாராம் என வடசென்னையின் பெருந்தலைகள் பலரும் சாம்பாலுக்காக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தலைமையில் மத்திய சென்னையில் ஓட்டு வேட்டையாடுகிறது. தனக்கு ஆதரவாக ஒருவரும் களமிறங்காததால், மோகன்ராஜ் தரப்பு கடும் அப்செட்.

ஜெயவர்தன்

``2014 தேர்தலில் தயாநிதி மாறனை எஸ்.ஆர்.விஜயகுமார் தோற்கடிக்கும்போது, என்னால் முடியாதா? எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஒரு கை பார்த்துவிடுகிறேன்'’ என சாம்பாலும் முஷ்டியை முறுக்குகிறாராம். மத்திய சென்னை தொகுதியில் பா.ம.க.வுக்கு போதிய ஆள்பலம் இல்லை. வாக்கு சேகரிப்பதில் தொடங்கி, பணப்பட்டுவாடா வரையில் அ.தி.மு.க.வை தான் நம்பியிருக்க வேண்டும். இதைப் பயன்படுத்திக்கொள்ளும் அ.தி.மு.க. நிர்வாகிகள், சாம்பாலுக்கு தூபம் போட்டு ‘லம்ப்’பாக பணத்தைக் கறந்துவருகிறது. தேர்தல் முடிந்தவுடன் டெலிவரி எடுக்க வசதியாக பல அ.தி.மு.க. நிர்வாகிகள் இப்போதே இனோவா, பார்ச்யூனர் என சொகுசு கார்களுக்கு புக் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

தென்சென்னையில் ஜெயவர்தனுக்கு தேர்தல் வேலை பார்ப்பதற்காக, மத்திய சென்னையில் உள்ள அ.தி.மு.க-வினரும் களத்தில் குதித்துள்ளனர். பா.ஜ.க., பா.ம.க-வின் வாக்கு வங்கியுடன், அ.தி.மு.க.வுக்கு சாதகமாக உள்ள தொகுதி என்பதால் ஜெயவர்தன் தாராளமாக பணத்தை வாரி இறைக்கிறாராம்.

இதுவரையில் சென்னையில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் என எவரும் ‘கல்லா’வை திறக்கவில்லை. ஒரு டீ குடிக்கக்கூட அ.தி.மு.க-வினர் 2000 ரூபாய் நோட்டை நீட்டுவதால், வயிற்றேறிச்சலில் காதில் புகை விடுகிறது தி.மு.க. தரப்பு.