`எதிர்க்கும் மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து!'- காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் | NEET exam will cancel in tamilnadu - congress manifesto highlights

வெளியிடப்பட்ட நேரம்: 14:48 (02/04/2019)

கடைசி தொடர்பு:07:43 (03/04/2019)

`எதிர்க்கும் மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து!'- காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை, அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்டார். தமிழகத்துக்கு நீட் தேர்வு ரத்து, ஜி.எஸ்.டி முறைப்படுத்தப்படும், ரஃபேல் போர் விமானம் முறைகேடு குறித்து விசாரணை, இலங்கை மீனவப் பிரச்னை உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்து விரிவாகப் பேசி இருக்கிறது இந்தத் தேர்தல் அறிக்கை. முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான பத்தொன்பது பேர் கொண்ட குழு, இந்தத் தேர்தல் அறிக்கையைத் தயாரித்துள்ளது. இதையடுத்து காங்கிரஸ் காரிய கமிட்டியில் தேர்தல் அறிக்கை முன்வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

                                                                   காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தல், ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறவிருக்கிறது. ஆளும் பா.ஜ.க அரசை வீட்டுக்கு அனுப்ப, இந்தியாவில் உள்ள முக்கிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது காங்கிரஸ் கட்சி. தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அமேதி தொகுதியில் ராகுல் போட்டி இடுவார் என்ற நிலையில், தென்னிந்திய மாநிலங்களில், ஏதாவது ஒரு தொகுதியில், ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியினரின் கோரிக்கையை ஏற்று, கேரள மாநிலம் வயநாட்டிலும் போட்டியிடுகிறார். தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மத்தியில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. 

                                                                                 

``ஒரு வருடத்துக்கு முன்பு, இந்தத் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கத் தொடங்கும் முன் சிதம்பரம் மற்றும் கெளடா ஆகியோரிடம் நான் இரண்டு விஷயங்களைக் கூறினேன். இந்தத் தேர்தல் அறிக்கை மக்களின் விருப்பமாக இருக்க வேண்டும் மற்றும் தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதி ஒன்றுகூடப் பொய்யாக இருக்கக் கூடாது என்றேன். அதுதான் எங்கள் நோக்கம். தேர்தல் அறிக்கையானது வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருப்பது மிக மிக அவசியம்'' என்று ராகுல் பேசினார்.

காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள். ``நியாய் (NYAY) திட்டத்தின் கீழ் ஏழைக்குடும்பங்களுக்கு மாதந்தோறும் ஆறாயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். விவசாயத்துக்குத் தனி பட்ஜெட். விவசாயிகள் கடனைத் திரும்பச் செலுத்தாவிட்டால், கிரிமினல் குற்றமாகக் கருதாமல் சிவில் குற்றமாகக் கருதப்படும். வரும் 2030-ம் ஆண்டுக்குள் வறுமை ஒழிப்பு. தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து. தமிழகத்தில் மட்டுமல்லாமல் எந்தெந்த மாநிலங்களில் நீட் தேர்வு எதிர்க்கப்படுகிறதோ அந்த மாநிலங்களில் நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும். அதற்கு மாற்றாக மாநில அளவில் தேர்தல் நடத்தப்படும். தொழில் தொடங்க விரும்பினால் முதல் 3 வருடங்களுக்கு, எந்த ஓர் அனுமதியும் அரசிடம் பெற அவசியம் இல்லை.

                                                                            காங்கிரஸ்

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை நாள்கள் 100 லிருந்து 150 நாள்களாக உயர்த்தப்படும். பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை. ஜி.எஸ்.டி முறைப்படுத்தப்பட்டு, வரி விகிதம் ஒரே அளவில் இருக்கும். ரஃபேல் போர் விமானம் முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்படும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும். பெட்ரோல், டீசல் வரம்பிற்குக் கொண்டுவரப்படும். இலங்கையுடனான மீனவர் பிரச்னை முற்றிலும் தீர்க்கப்படும். அரசுப் பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. கிராம இளைஞர்களுக்கு பத்து லட்சம் வேலை வாய்ப்பு. பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு'' என இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்தத் தேர்தல் அறிக்கையைத் தயாரித்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.

இந்தத் தேர்தல் அறிக்கையைத் தயாரித்த ப.சிதம்பரம் பேசுகையில், ``வேலைவாய்ப்பின்மை, விவசாயம், தலித் மக்களின் பிரச்னை, சிறுபான்மையினர் பிரச்னையில் நாங்கள் அதிக கவனம் செலுத்துவோம். முக்கியமாக விவசாயிகளின் கடன் குறித்துத் தேர்தல் அறிக்கை முக்கிய ஒன்றாக இருக்கும். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை விவசாயிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும்'' என்று தெரிவித்துள்ளார்.