``ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு அனுமதி அளித்ததே தி.மு.க தான்”- மே-22க்கு பிறகு முதல்முறையாக தூத்துக்குடி வந்த எடப்பாடி! | "DMK was given permission to extend the sterile plant" says Edappadi Palanisamy

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (02/04/2019)

கடைசி தொடர்பு:10:40 (03/04/2019)

``ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு அனுமதி அளித்ததே தி.மு.க தான்”- மே-22க்கு பிறகு முதல்முறையாக தூத்துக்குடி வந்த எடப்பாடி!

``தூத்துக்குடி சம்பவத்தைக் மையமாக வைத்துக்கொண்டு தி.மு.க வேட்பாளர் கனிமொழி பரப்புரை செய்து வருகிறார். ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு அனுமதி அளித்ததே தி.மு.க.,தான்” என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பிரசார பொதுக்கூட்டம்  

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க., வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜனை ஆதரத்து வாக்கு சேகரிக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அ.தி.மு.க., தெற்குமாவட்டச் செயலாளர், ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ., சண்முகநாதன் தலைமை வகித்தார். இதில், பா.ஜ.க., தேசிய தலைவர் அமித் ஷா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் கடம்பூர் ராஜூ, பிற கட்சித் தலைவர்கள் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன், என்.ஆர்.தனபாலன், நடிகர் கார்த்திக் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில், முதலில் பேசிய மனித உரிமை காக்கும் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக், ``அவை நாகரிகம், சபை நாகரிகம் என்றால் என்ன என்பதை மறந்து தரம் இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நாகரிகம் தெரிந்து பேசுங்கள்” என தி.மு.க., தலைவர் ஸ்டாலினை குற்றம்சாட்டிப் பேசியவர், இறுதியாக, ``இது வீரமும் விவேகமும் இணைந்த கூட்டணி. இப்படை தோற்றால் எந்தப் படைதான் வெல்லும்?” எனச் சொல்லி முடித்தார்.

கார்த்திக்

அடுத்ததாகப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், தகுதியான தலைவர் ஆள வேண்டும். வலிமையான பாரதம், நிலையான ஆட்சியை கொடுப்பவர் பிரதமர் மோடிதான். மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும்” எனக் கூறி தொடங்கிய  அவர், ``அ.தி.மு.க., பா.ஜ.க., உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து உருவாக்கியுள்ள இந்தக் கூட்டணி மெகா கூட்டணி.  

இந்தக் கூட்டணியைக் கண்டு அரண்டு மிரண்டு போனதால், மேடைகளில் என்ன பேசுவதென்று தெரியாமல் பேசுகிறார் தி.மு.க., தலைவர் ஸ்டாலின். தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுகின்ற கூட்டணிதான் இது. ஏழைகளுக்கு கொண்டு வருகின்ற திட்டங்களை தடுக்கும் கட்சிதான் தி.மு.க., நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள ஏழைக் குடும்பத்திற்கு ரூ.2,000 வழங்கப்படும்.” என்றார்.

எடப்பாடி பழனிசாமி

ஸ்டெர்லைட் விவகாரத்தைப் பற்றிப் பேச மட்டாரா என எதிர்பார்த்த நிலையில் ஸ்டெர்லைட் பற்றிப் பேச ஆரம்பித்தார். ``தூத்துக்குடி சம்பவத்தைக் மையமாக வைத்துக்கொண்டு தி.மு.க., வேட்பாளர் கனிமொழி பரப்புரை செய்து வருகிறார். ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு 243 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்து கொடுத்ததே தி.மு.க ஆட்சிதான். அப்போது, தொழில்துறை அமைச்சராக இருந்தவர் ஸ்டாலின்தான்.

உண்மை இவ்வாறு இருக்க, அ.தி.மு.க அரசு மீது தி.மு.க பழி போடுவது சரியல்ல. ஸ்டெர்லைட் விவகாரத்தில் தி.மு.க., வேடம் போடுகிறது. முந்தைய தி.மு.க., ஆட்சியில் ஆலையை மூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கனிமொழியை வெல்லக்கூடிய சக்தி தமிழிசைக்கு உண்டு. பொய்ப் பிரசாரம் செய்து வரும் கனிமொழிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்றார். தூத்துக்குடியில் கடந்த மே-22ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பிறகு முதல்முறையாக தூத்துக்குடி ஊருக்குள் இன்றுதான் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க