Published:Updated:

`என் படத்தை மார்பிங் செய்திட்டாங்க; நான் அப்படிப்பட்டவன் அல்ல!'- சொல்கிறார் பா.ம.க. வேட்பாளர்

`என் படத்தை மார்பிங் செய்திட்டாங்க; நான் அப்படிப்பட்டவன் அல்ல!'- சொல்கிறார் பா.ம.க. வேட்பாளர்
`என் படத்தை மார்பிங் செய்திட்டாங்க; நான் அப்படிப்பட்டவன் அல்ல!'- சொல்கிறார் பா.ம.க. வேட்பாளர்


மத்திய சென்னையில் அ.தி.மு.க. கூட்டணியின் பா.ம.க. வேட்பாளர் சாம்பால் குறித்து அவதூறான தகவல்கள் பரப்பப்பட்டதாக தகவல் வெளியானது. அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். 

மத்திய சென்னையில் அ.தி.மு.க. கூட்டணியின் பா.ம.க.வேட்பாளராக சாம்பாலும்  தி.மு.க. சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கமீலா நாசரும் போட்டியிடுகின்றனர். வி.ஐ.பி தொகுதி அந்தஸ்து பெற்ற மத்திய சென்னையில் தி.மு.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. 

இந்த நிலையில், பா.ம.க. வேட்பாளர் சாம்பால், தி.மு.க-வினர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்த புகாரில், தன்னைப்பற்றி அவதூறான கருத்துகளை சமூக வலைதளங்களில் தி.மு.க-வினர் பரப்பிவருவதாகத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த சாம்பால், ``பா.ம.க.வின் முக்கிய குறிக்கோளான நாம் விரும்பும் சென்னையை அமல்படுத்த துரிதமாக செயல்பட்டுவருகிறோம். மக்கள் மத்தியில் எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. எக்காரணத்தைக் கொண்டும் யாரையும் நான் விமர்சிக்காமல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறேன். ஆனால், என்னையும் என்கூட இருந்தவர்களையும் என் குடும்பத்தையும் நண்பர்களையும் அவதூறாகப் பேசிவருகின்றனர்.

எனக்கு எந்தக் கெட்டப்பழக்கமும் கிடையாது. 2015-ம் ஆண்டு என்னைப்பற்றி வெளியான செய்தியில் உள்ள புகைப்படத்தை மார்பிங் செய்து அவதூறான தகவல்களை எதிர்க்கட்சியினர் பரப்பி வருகின்றனர். அந்தப் புகைப்படத்தில் இடது கையில் தம்புல்ஸ் வைத்திருப்பேன். அந்த தம்புல்ஸை மார்பிங் செய்துவிட்டு மதுபாட்டிலை வைத்து பா.ம.க-வின் மதுவிலக்கு நாடகம் அம்பலம் என்று பிரசாரம் செய்யப்படுகிறது. தனிப்பட்ட முறையில் அவதூறாகப் பேசுவது செயல்படுவது தேர்தல் நடத்தை விதிக்கு எதிரானது. என்னை அவதூறாக விமர்சித்த நபர் குறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். சம்பந்தப்பட்டவர்கள் மீது மானநஷ்ட வழக்கையும் தொடர உள்ளேன்" என்று கூறினார். 

வேட்பாளர் சாம்பாலிடம் பேசினோம்.  ``என் மீது எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லை. இதனால் மதுபாட்டிலோடு நான் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் புகைப்படத்தை வெளியிட்ட நபரின் பெயர் விஜயகுமார். அவர் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆதாரத்துடன் புகார் கொடுத்துள்ளேன்.. 

மத்திய சென்னையைப் பொறுத்தவரை குடிநீர் பிரச்னை அதிகளவில் உள்ளது. அதற்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் என்று வாக்குறுதி அளித்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுவருகிறேன். அதோடு மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன். பொது போக்குவரத்தை அதிகப்படுத்துவதோடு குறைந்த கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். எலெக்ட்ரிக் பஸ் இயக்கப்படும். மருத்துவம், கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் எம்.பி. அலுவலகம் அமைத்து மக்களின் குறைகளைக் கேட்பேன். செல்போன் ஆப்ஸ் மூலம் தொகுதி மக்கள் குறைகளைத் தெரிவிக்க வசதி ஏற்படுத்தப்படும். 24 மணி நேரத்தில் மக்களின் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் பிரச்னைக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் அணை கட்டப்பட்டுவருகிறது. 

மத்திய சென்னை தொகுதியில் வேலையில்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். பாங்காங் மற்றும் தாய்லாந்து போல சாலை வசதி ஏற்படுத்தி போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன். கூட்டணிக் கட்சியினர் நான் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட சமயத்தில் என்னால் முயன்ற உதவிகளை மக்களுக்குச் செய்தேன். அந்த உதவியை என்றுமே மத்திய சென்னை மக்கள் மறக்க மாட்டார்கள். நிச்சயம் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்" என்றார். 

சாம்பால் புகார் குறித்து மத்திய சென்னை தி.மு.க-வினரிடம் கேட்டதற்கு, ``தி.மு.க. வேட்பாளர் தயாநிதிமாறனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தோல்வி பயத்தில் எதிரணியினர் உள்ளனர். இதனால்தான் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர். சட்டரீதியாக புகாரைச் சந்திக்க தயாராக உள்ளோம்" என்றனர். 

அடுத்த கட்டுரைக்கு