`எங்கள எவ்வளவு அசிங்கப்படுத்தினார், இன்றைக்கு என்ன ஆனது!' - துரைமுருகனைச் சாடிய பிரேமலதா | Premalatha vijayakanth slams duraimurugan on IT raid

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (03/04/2019)

கடைசி தொடர்பு:11:25 (04/04/2019)

`எங்கள எவ்வளவு அசிங்கப்படுத்தினார், இன்றைக்கு என்ன ஆனது!' - துரைமுருகனைச் சாடிய பிரேமலதா

"15 நாள்களுக்கு முன்பு, துரைமுருகன் தே.மு.தி.க-வை எவ்வளவு அசிங்கப்படுத்தினார் என்பது இந்த உலகத்திற்கே தெரியும். இன்றைக்கு அவருக்கு என்ன நடந்தது" என்று பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்

கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில், அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கடலூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ``இந்தத் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமியை நமக்கு 2006 முதல் தெரியும். அவர், விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த்தை எதிர்த்துப் போட்டியிட்டவர். தற்போது அவருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய நான் வந்துள்ளேன். இதுவே நமது வளர்ச்சியாகும். பா.ம.க வேட்பாளர் வெற்றிபெற்றால், கடலூர் தொகுதிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பிரதமரை சந்தித்து செய்துதருவார். அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி மெகா கூட்டணி. இந்தக் கூட்டணி, 2011-ம் ஆண்டில் சரித்திர சாதனை வெற்றிபெற்ற கூட்டணி.

ஆனால், எதிரணியினர் ஊழல்வாதிகள். அந்தக் கூட்டணி, மக்களை ஏமாற்றும் கூட்டணியாக அமைந்துள்ளது. தி.மு.க பொருளாளர் துரைமுருகன் வீட்டில் இரு தினங்களுக்கு முன்பு வருமான வரி சோதனை நடந்துள்ளது. அதேபோல, அவர் மகனும் தொகுதி தி.மு.க வேட்பாளருமான கதிர்ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, தி.மு.க நிர்வாகிகள் வீடுகளிலும் சோதனை நடந்துள்ளது. இதில் மூட்டை மூட்டையாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோடி கோடியாக ஊழல் செய்து சம்பாதித்த பணம், பாதாளத்தில் இருந்து தோண்டி எடுத்துக்கொண்டே இருக்கிறார்களாம். 15 நாள்களுக்கு முன்பு, துரைமுருகன் தே.மு.தி.க-வை எவ்வளவு அசிங்கப்படுத்தினார் என்பது இந்த உலகத்திற்கே தெரியும். இன்றைக்கு அவருக்கு என்ன நடந்தது. கடவுள் இருக்கிறார். அவர் உத்தமர் போல பேசிக்கொண்டிருந்தார். இன்றைக்கு என்ன ஆனது. அ.தி.மு.க கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும்'' என்று பேசினார்.