`2016-ல், நானும் எனது தந்தையும் சத்தமில்லாமல் செய்த பிரசாரம்!'- அ.தி.மு.க வெற்றிகுறித்து ஜெய் ஆனந்த் | Dhivakaran Son Jayanandh Facebook get more Attention

வெளியிடப்பட்ட நேரம்: 16:52 (03/04/2019)

கடைசி தொடர்பு:11:26 (04/04/2019)

`2016-ல், நானும் எனது தந்தையும் சத்தமில்லாமல் செய்த பிரசாரம்!'- அ.தி.மு.க வெற்றிகுறித்து ஜெய் ஆனந்த்

ஜெய் ஆனந்த்

'தேர்தல் நினைவுகள்' என்ற பெயரில் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் சமூக வலைதளத்தில் பதிவிட்ட பதிவு, இந்த பரபரப்பான அரசியல் சூழலில் கவனம்பெற்றுள்ளது. ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு, அ.தி.மு.க-வில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. ஜெயலலிதாவின் நிழல்போல செயல்பட்டுவந்த சசிகலாவின் மன்னார்குடி குடும்பத்தினர், தற்போது ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ளனர். கட்சியை மீட்பேன் என்ற சபதத்துடன் டி.டி.வி.தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பைத் தொடங்கினார். ஆர்.கே.நகர் தேர்தலிலும் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் நின்று வெற்றிபெற்றார். சசிகலாவின் சகோதரரான திவாகரன், அண்ணா திராவிடர் கழகம் என்ற அமைப்பைத் தொடங்கினர். அவரும் அரசியலில் தனித்து இயங்கிவருகிறார். 

இந்த நிலையில்தான், திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த், தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,  #தேர்தல் நினைவுகள் என்ற ஹேஸ்டேக்கில் பதிவிட்டுள்ளார். அதில், “தபால் வாக்குகள் பெரும்பாலும் தி.மு.க-விற்கு செல்வது வழக்கம். இதை மாற்றும்பொருட்டு நானும் என் தந்தையும் மற்றும் ஒரு குழுவினர் அரசிடம் ஊதியம் பெறுவோர் மத்தியில் சென்று சத்தமில்லாமல் நடந்த பிரசாரம் மூலம் 82,000 வாக்குகள் வரை உறுதிசெய்தோம். 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், அ.இ.அ.தி.மு.க தபால் வாக்குகளால் வெற்றிபெற்ற தொகுதிகள் 1. குன்னூர் 2. ராதாபுரம் 3. காட்டுமன்னார்கோயில் 4. ஆவடி 5. திருத்தணி 6.பர்கூர் 7.சாத்தூர் 8. விளாத்திகுளம் 9.ஓமலூர் 10.மானாமதுரை என்று பட்டியலிட்டுள்ளார். இதன் காரணமாக  தி.மு.க கூட்டணி இந்த ஒருசில தொகுதிகளில், தபால் வாக்குகளில் சந்தேகம் இருப்பதாக வழக்குத் தொடர்ந்துள்ளார்கள்'' எனப்  பதிவிட்டுள்ளார்.

தேர்தல் பணிகளில் இருக்கும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், தபால் ஓட்டு மூலம் தங்களது வாக்குகளைச் செலுத்துவார்கள். வாக்கு எண்ணிக்கையின்போது இழுபறியில் உள்ள தொகுதிகளில் தபால் ஓட்டுகள் ஒவ்வொன்றும் முக்கியமாகக் கருதப்படும். தி.மு.க ஆட்சியில் ஆசிரியர்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படும். இதன்காரணமாக, தி.மு.க-வுக்கு கணிசமான தபால் வாக்குகள் கிடைக்கும். சில தொகுதிகளில் விதிவிலக்காக அமையும். 2016 சட்டமன்றத் தேர்தலில், பல தொகுதிகளில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி இருந்தது. 2016 தேர்தலில், 10 தொகுதிகளில் 600-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர்களின் வெற்றி இருந்தது. அதில், 7 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.