`நீங்கள் சசிகலாவின் காலுக்கு அடியில் அல்லவா தவழ்ந்தீர்கள்!'- முதல்வரை வசைபாடிய மு.க.ஸ்டாலின் | Stalin slams edappadi palanisamy in election campaign at tirupur

வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (03/04/2019)

கடைசி தொடர்பு:11:26 (04/04/2019)

`நீங்கள் சசிகலாவின் காலுக்கு அடியில் அல்லவா தவழ்ந்தீர்கள்!'- முதல்வரை வசைபாடிய மு.க.ஸ்டாலின்

தி.மு.க கூட்டணி ஆட்சிக்கு வந்தால், சிறு விவசாயிகள் தங்களின் தேவைக்காக கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் வைத்திருந்த 1 கிராம் முதல் 5 பவுன் வரையிலான அடமானக் கடன் முழுவதும் தள்ளுபடிசெய்யப்படும் என திருப்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

ஸ்டாலின் பிரசாரம்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கே.சுப்பராயனை ஆதரித்து, இன்று திருப்பூரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. பெருமாநல்லூர் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, "வரும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்காக நடைபெறுகின்ற தேர்தல். இந்தத் தேர்தலில், தி.மு.க அங்கம் வகிக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால், சிறு விவசாயிகள் தங்களின் தேவைக்காக கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் வைத்திருந்த 1 கிராம் முதல் 5 பவுன் வரையிலான அடமானக் கடன் முழுவதும் தள்ளுபடிசெய்யப்படும். இந்த அறிவிப்பு, தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையிலும் இணைத்துக்கொள்ளப்படும்.

தற்போதைய தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்படுகிறதா என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுகிறது. தேர்தல் ஆணையம் உட்பட, நாட்டில் உள்ள பல தன்னாட்சி அமைப்புகளை மோடி தன்னுடைய வேலையாட்களைப் போல நடத்திக்கொண்டிருக்கிறார். சமீபத்தில், தி.மு.க-வின் பொருளாளர் துரைமுருகனின் வீடு, அலுவலகம், கல்லூரி என அனைத்து இடங்களிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். ஆனால், அந்தச் சோதனையில் அதிகாரிகள் எதையுமே கண்டுபிடிக்கவில்லை. ஆனால், அதன்பிறகு ஒருநாள் இடைவெளிவிட்டு பிறகு, எங்கேயோ இருந்து பணத்தைக் கொண்டுவந்து, அதிகாரிகளே வைத்துவிட்டு நாடகம் ஆடுகிறார்கள். தேர்தல் ஆணையம் இப்படியே மோடிக்கு ஆதரவாகப் போய்க்கொண்டிருந்தால்,  பின்விளைவுகளை அவர்கள் நிச்சயமாகச் சந்திக்க நேரிடும். நான் மிரட்டுவதற்காக இதைச் சொல்லவில்லை. ஜனநாயகத்தின் அடிப்படையிலேயே சொல்கிறேன். ஜாடிக்கு ஏற்ற மூடி என்பது போலவே, மோடிக்கு ஏற்ற பாடியாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அவர் விவசாயிகளைக் காக்கும் மண்புழு என்று அவரே சொல்கிறார். நீங்களா மண்புழு. விவசாயத்தை நாசமாக்கும் விஷப்புழு. மண்புழு என்றால் மண்ணுக்கு அடியில்தானே செல்ல வேண்டும். ஆனால் நீங்கள், சசிகலாவின் காலுக்கு அடியில் அல்லவா தவழ்ந்தீர்கள்'' என்றார் காட்டமாக.