`பிரதமரைப் பற்றி பேசும் அளவுக்கு பெரிய ஆள் ஆகிவிட்டார்' - ஸ்டாலினை கலாய்த்த எடப்பாடி பழனிசாமி! | edappadi palanisamy slams stalin in kanyakumari campaign

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (04/04/2019)

கடைசி தொடர்பு:11:29 (04/04/2019)

`பிரதமரைப் பற்றி பேசும் அளவுக்கு பெரிய ஆள் ஆகிவிட்டார்' - ஸ்டாலினை கலாய்த்த எடப்பாடி பழனிசாமி!

``ஸ்டாலின் ஏதோதோ பேசுகிறார். பிரதமரைப் பற்றியும் பேசுகிறார். பிரதமரைப் பற்றி பேசும் அளவுக்கு பெரிய ஆள் ஆகிவிட்டார் ஸ்டாலின்'' என குமரி மாவட்டம் தோவாளையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

முதல்வர் குமரி பிரசாரம்


கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் மேற்கொண்டார். தோவாளை பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ``மத்தியில் நிலையான ஆட்சி வழங்க பிரதமராக மோடி வரவேண்டும். பிரதமர் மோடியால் நாடு செழிக்கும், மக்கள் நன்றாக வாழ்வார்கள். குமரி மாவட்டம் கல்வியில் சிறந்த மாவட்டம். எனவே, யார்  வந்தால் சிறந்த ஆட்சி நடக்கும், யார் திறமையான பிரதமர் என சிந்தித்து வாக்களியுங்கள். நம்மை பாதுகாக்கும் பிரதமர் மோடி ஆட்சிக்குவர தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள்.

முதல்வர்

பொன்.ராதாகிருஷ்ணன் எப்போதும் என்னை சந்தித்தாலும் கன்னியாகுமரி மக்களுக்கான பல்வேறு திட்டங்களைக் கேட்டு பெறுபவர். அவரை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் வேறு மாவட்டத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர். ஏற்கெனவே எம்.எல்.ஏ.வாக இருப்பருக்கு எம்.பி.பதவி எதற்கு. மாவட்ட மக்களைப் பற்றி தெரியாதவர், எந்த ஊரில் என்ன பிரச்னை என தெரியாதவர் எப்படி மக்கள் பணி செய்ய முடியும். பொன்.ராதாகிருஷ்ணன் கிராமங்கள்தோறும் சென்று மக்கள் வாக்குறுதியை நிறைவேற்றக்கூடியவர். மத்தியில் செல்வாக்கு உள்ள பொன்.ராதாகிருஷ்ணன் நாடாளுமன்ற உறுப்பினராக வந்தால் நல்ல பணிகளைச் செய்வார். பொன்.ராதாகிருஷ்ணன் எவ்வளவு பாலம், ரோடு போட்டிருக்கிறார் என உங்களுக்குத் தெரியும். 2014-க்கு முன்பு அதற்கு பின்பு என குமரி மாவட்ட வளர்ச்சியை கணக்கிட்டுப் பாருங்கள். வளர்ச்சியை கருத்தில்கொண்டு மறுபடியும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்புகொடுத்து மீண்டும் மத்திய அமைச்சராக ஆக்குங்கள்.

முதல்வர்

ஸ்டாலின் ஏதோதோ பேசுகிறார். பிரதமரைப் பற்றியும் பேசுகிறார். பிரதமரைப் பற்றி பேசும் அளவுக்கு பெரிய ஆள் ஆகிவிட்டார். 130 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை நிர்ணையிக்கக்கூடிய தலைவர் மோடி. நாடுகள்தோறும் சென்று நாட்டின் பாதுகாப்பை பிரதமர் பலப்படுத்துகிறார். அண்மையில் பெருமைகொள்ளும் விதமாக அந்நிய நாட்டில் கைது செய்யப்பட்டவரை முழுமையாக மீட்டுத்தந்து இந்தியர்களுக்கு பெருமை தேடிக் கொடுத்தவர் மோடி. பிற நாட்டுத் தலைவர்களின் அன்பைப் பெற்று இந்தியாவை திரும்பிப்பார்க்க வைத்தவர். அண்டை நாட்டு தீய சக்திகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகளை என்ன செய்தார் என்பது உங்களுக்குத் தெரியும்.

பா.ஜ.க. கூட்டணி வைத்திருக்கும் இடங்களில் எல்லாம் எங்காவது எதிர்ப்பு இருக்கிறதா. ஒரே ஒரு ராசியான ஆளான ஸ்டாலின் மட்டும் ராகுல் பிரதமர் ஆவார் என்கிறார். மேற்குவங்கத்துக்குச் சென்ற ஸ்டாலின் தேர்தலுக்குப் பிறகு பிரதமரை முடிவு செய்யலாம் என்றார். இப்போது பிரதமர் யார் எனச் சொல்லமுடியாது என்றால் நிலையான ஆட்சியை எப்படி தரமுடியும். சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, அகிலேஷ் என ஒவ்வொரு மாநிலத்துக்கு ஒருவருக்கு பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அவர்களிடம் நாட்டைக் கொடுத்தால் நாடு தாங்குமா. குரங்கின் கையில் பூமாலை கொடுத்ததுபோல் ஆகும். நம் பாதுகாப்பு முக்கியம், அப்போதுதான் குமரியில், தோவாளையில் வாழ முடியும். விஞ்ஞான உலகில் விஞ்ஞான முறையில் எதிர்க்கக்கூடியவர் பிரதமர் மோடி" என்றார்.