நீட் ரத்து..’நியாய்’ அறிவிப்பு.. - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை எப்படி இருக்கிறது? | 2019 election manifesto by congress and who's and who's opiinion

வெளியிடப்பட்ட நேரம்: 13:14 (04/04/2019)

கடைசி தொடர்பு:13:14 (04/04/2019)

நீட் ரத்து..’நியாய்’ அறிவிப்பு.. - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை எப்படி இருக்கிறது?

"முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அறிவித்து சரிவரச் செயல்படாமல் போனதைத்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் மீண்டும் அறிவித்திருக்கிறார். மற்றபடி ராகுல் தலைமையிலான காங்கிரஸ் கட்சி வெளியிடும் அறிக்கை என்பதால் ஒட்டுமொத்தமாக யூத்ஃபுல் அறிக்கையாகவே இருக்கிறது."  

நீட் ரத்து..’நியாய்’ அறிவிப்பு.. - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை எப்படி இருக்கிறது?

தொழில்துறை வேலைவாய்ப்புக்காகத் தனி அமைச்சகம் (Ministry of Industry, Services and employment), வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு `நியாய்’ திட்டத்தின்கீழ் வருடாந்தர வருமானம் ரூ. 72,000, பாகுபாடு எதிர்ப்புச் சட்டம் (Anti discrimination law), நீட் ரத்து, பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு, மத்திய அரசு காலிப்பணியிடங்களை வருகிற மார்ச் 2020-க்குள் நிரப்புவது, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, விவசாயக் கடன் தள்ளுபடி, பெண்களுக்கான சம ஊதியக் கொள்கை என கலர்ஃபுல்லான தேர்தல் அறிக்கையைக் களமிறக்கியிருக்கிறது காங்கிரஸ். அதுகுறித்த பிரமுகர்களின் விமர்சனம் ஒரு பார்வை! 


ராகுல் காந்தி தேர்தல் அறிக்கை

கோபண்ணா, தமிழக காங்கிரஸ் செய்தித் தொடர்புத் தலைவர்:

"இந்தியா முழுவதும் 24 மாநிலங்களுக்குப் பயணப்பட்டு அங்குள்ள அறிஞர்கள், விவசாய மக்களிடம் பேசி 54 பக்கங்களில் காங்கிரசின் தேர்தல் தேர்தல் கோபண்ணாஅறிக்கை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 200 லட்சம் கோடி மொத்த உள்நாட்டு உற்பத்தி 400 லட்சம் கோடியாக எதிர்காலத்தில் வளரும். இந்தச் சூழலில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கும் மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த தேர்தலுக்கான அறிக்கையில் வருடாந்தரக் குறைந்தபட்ச வருமானமாக ரூ.72,000 நிர்ணயித்துள்ளோம். இது, நமது மொத்த நிதிநிலையில் 13 சதவிகிதம் மட்டுமே ஆகும் என்பதால், நிறைவேற்ற முடியும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. மாநில உரிமைகளை மதிக்கும் நோக்கத்தில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுகிறோம். நீட் தேர்வு அத்தனை இந்திய மாநிலங்களில் இருந்தாலும் அதை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்கிற உரிமையையும் நாங்கள் மாநிலங்களுக்கே கொடுக்க முடிவுசெய்துள்ளோம். எங்களின் 2019 தேர்தல் அறிக்கையைக் காங்கிரஸின் குரலாகப் பார்க்காமல் மக்களின் குரலாகவே பார்க்கலாம்." 

 

ஷ்யாம், பத்திரிகையாளர்: 

ஷ்யாம் பத்திரிகையாளர்"தேர்தல் அறிக்கையின் முதல் பக்கத்தில் 'நாங்கள் செய்வோம்' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். செய்வார்கள் என்றே நம்புவோம். வேலை மற்றும் விலைவாசிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். கடந்த பி.ஜே.பி ஆட்சியைப் போல கார்ப்பரேட் பொருளாதாரமாக இல்லாமல் எல்லோருக்குமான பொருளாதார அடிப்படையிலேயே இந்த அறிக்கை இருக்கிறது. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மாநிலங்கள் அந்தத் தேர்வை நடத்தலாம் எனக் கூறியிருக்கிறார்கள். மாநிலங்கள் ஏற்கெனவே நடத்திய போட்டித் தேர்வு முறைகள் தோல்வி அடைந்துவிட்ட நிலையில், நீங்கள் நடத்திக்கொள்ளலாம் என்று அறிவித்திருப்பது மாநில உரிமைகளில் தலையிடும் அம்சமாகவே தெரிகிறது. அறிக்கையில் சொல்லியிருப்பது ஒவ்வொன்றையும் நிறைவேற்றுவது தொடர்பான வருடாந்தர சமூகத் தணிக்கை அறிக்கையும் வெளியிடப்படும் என்று சொல்லியிருப்பதும் வரவேற்கத்தக்கது. ஆனால், ஏற்கெனவே மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அறிவித்து சரிவரச் செயல்படாமல் போனதைத்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் மீண்டும் அறிவித்திருக்கிறார். மற்றபடி ராகுல் தலைமையிலான காங்கிரஸ் கட்சி வெளியிடும் அறிக்கை என்பதால் ஒட்டுமொத்தமாக யூத்ஃபுல் அறிக்கையாகவே இருக்கிறது."  

 

வெங்கடேஷ் ஆத்ரேயா, பொருளாதார நிபுணர்:

"பிரதமர் மோடி அரசு, இந்திய மக்களுக்கு உருவாக்கிய ஆகப்பெறும் துயரங்களோடு ஒப்பிடும்போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெங்கடேஷ் ஆத்ரேயாகொஞ்சம் மூச்சுவிட வைக்கிறது. ரூ. 72,000 அளிக்கும் நியாய் திட்டம் வரவேற்க வேண்டியது. ஆனால், அரசின் விவசாயம் உள்ளிட்ட முதலீட்டுத் திட்டங்களுக்கு மாற்றாக இந்தத் திட்டம் இருக்கக் கூடாது. மேலும், விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒருமுறை கடன் தள்ளுபடி என்பது அரசுக்கு அத்தனை பெரிய சுமையில்லை. அதோடு நின்றுவிடாமல் இடுபொருள்கள் விலை குறைப்பு, உற்பத்தித் திறன் உயர்த்துதல், விவசாயிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள், கிராமப்புற ஊடகச் சாலைகள் எனப் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். கிராமப்புற உடல் உழைப்புத் தொழிலாளர்கள், விவசாயக் கூலிகள் பல ஆண்டுகளாக மிக அதிகமாக நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான தீர்வு கிடைக்க வேண்டும். அதற்கான அம்சங்களையும் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கலாம்."

 

செந்தில் ஆறுமுகம், சட்டப்பஞ்சாயத்து இயக்கம்:

செந்தில் ஆறுமுகம்"மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, கல்வியைப் பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை, ராகுல்காந்தி மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவருவதாக அறிவித்திருக்கிறார். மேலும், கல்வி தொடர்பான 6 சதவிகித மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது 1966-லிருந்து தேர்தல் அறிக்கைகள்மூலம் கூறப்பட்டு வருகிறது. இனிவரும் ஆட்சியிலாவது அது நிறைவேற்றப்பட வேண்டும். குறிப்பாக, 9-வது முதல் 12-வது வரையிலான மாணவர்களுக்குத் தொழில் முறைக்குக் கல்வி கற்றுத் தரப்படும் என்று அறிவித்திருப்பதும் வரவேற்கப்பட வேண்டியது. படித்து முடித்து வெளியேறும் மாணவர்கள் அவர்களது குறைந்தபட்சத் தேவைகளை அவர்களே பார்த்துக்கொள்வதற்கு இந்தக் கல்வித் திட்டம் உதவும்." 

 

பாலபாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்:

"காங்கிரஸின் பழைய தேர்தல் அறிக்கையுடன் ஒப்பிடுகையில் இந்தத் தேர்தல் அறிக்கை முக்கியமானதாகவே இருக்கிறது. பொதுவாகத் தேர்தல் அறிக்கை என்றால், 'பெண்கள், குழந்தைகள் நலனை எங்கள் அரசு கவனிக்கும்' என்று பொத்தாம்பொதுவாக முடித்துவிடுவார்கள். ஆனால், அப்படியாக இல்லாமல் பரந்துபட்ட பல அம்சங்களை இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். முதல் வாக்குறுதியே 33 சதவிகித இடஒதிக்கீடு தொடர்பாக இருக்கிறது. இவர்கள் ஆட்சிக் காலத்தில்தான் இது மசோதாவாகக் கொண்டுவரப்பட்டது. அது நிறைவேற்றப்படவில்லையென்றாலும் இந்த அறிக்கையில் அது முதன்மையில் இடம்பெற்றிருப்பது நிச்சயம் நிறைவேறும் என்கிற நம்பிக்கையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமைக்கு எதிராக இன்னும் வலுவான சட்டங்கள் கொண்டுவரப்படும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே தேங்கிக் கிடக்கும் எண்ணற்ற பாலியல் வழக்குகளுக்கும் சேர்த்து விரைந்து தீர்வுகாணும் வகையிலாக அவர்கள் அறிவிக்கும் சட்டங்கள் இருக்க வேண்டும் என்பது கோரிக்கை. அறிக்கையின் மற்றோர் அம்சமான  சம ஊதியக் கொள்கை அரசு நிறுவனங்களில் அமலுக்கு வரும்போது தனியார் நிறுவனங்களையும் அதற்கு நிர்பந்திக்க முடியும். அதனால் அந்த அறிவிப்பும் வரவேற்கத்தக்கது. அதே சமயம், பெண்களின் உழைப்புக்கான குறைந்தபட்ச ஊதியம் என்பது நிர்ணயிக்கப்பட வேண்டும். மேலும், தாங்கள் குறிப்பிட்டுள்ள அறிக்கையில் எது நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்று சமூகத் தணிக்கை செய்வோம் என்று அவர்கள் அறிவித்திருப்பது அந்த ஆட்சி தன்னைத்தானே விமர்சனத்துக்கு உட்படுத்திக் கொள்கிறது என்று பொருள். அதுவும் வரவேற்கப்பட வேண்டியது." 

எல்லோரையும் கவரும்படிச் செய்திருக்கிறது காங்கிரஸாரின் தேர்தல் அறிக்கை.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்