Published:Updated:

`60 பெண்களைக் காப்பாற்றியிருக்க முடியும்!'- பொள்ளாச்சி விவகாரத்தில் போலீஸை சாடும் ஸ்டாலின்

`60 பெண்களைக் காப்பாற்றியிருக்க முடியும்!'- பொள்ளாச்சி விவகாரத்தில் போலீஸை சாடும் ஸ்டாலின்
`60 பெண்களைக் காப்பாற்றியிருக்க முடியும்!'- பொள்ளாச்சி விவகாரத்தில் போலீஸை சாடும் ஸ்டாலின்

``வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலையும், ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தலையும் நிறுத்த முயல்கின்றனர். இது தொடரும் என்றால் அனைத்து அரசியல் கட்சிகளும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது" என்று கோவையில் ஸ்டாலின் சீறியுள்ளார்.

தி.மு.க கூட்டணியின் கோவை நாடாளுமன்ற வேட்பாளரான சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த பி.ஆர்.நடராஜனை ஆதரித்து நேற்று கோவை கொடிசியாவில் பிரசார பொதுக் கூட்டம் நடந்தது. தி.மு.க தலைவர் ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணிக் கட்சித்தலைவர்கள் கலந்துகொண்டு பேசினர்.

அதில் ஸ்டாலின் பேசும்போது, `இந்தத் தேர்தலில் 40-க்கு 40 தொகுதியிலும் வெற்றியைப் பெறப்போகின்றோம். இடைத்தேர்தலிலும் 18 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். 21 தொகுதிகளில் நடத்தப்பட வேண்டிய இடைத்தேர்தல் 3 தொகுதிகளில் நடத்தப்படவில்லை. அதற்கு பின்னால் சதி இருக்கிறது. சூலூர் எம்.எல்.ஏ இறந்துபோனதால் 22 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். தி.மு.க வெற்றி பெற்றுவிட்டால் அ.தி.மு.க ஆட்சியில் இருந்து அகன்றுவிடும் என்பதால், தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி இடைதேர்தல் நடத்தாமல் இருக்கிறார்கள். துரைமுருகன் வீட்டில் வேண்டும் என்றே திட்டமிட்டு வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது. எங்கிருந்து பணம் எடுக்கப்பட்டது. யாருடைய வீட்டில் இருந்தோ எடுத்துவிட்டு துரைமுருகனுக்குத் தொடர்பு இருக்கிறது என்று சொல்லி தேர்தலை நிறுத்த திட்டமிடுகின்றனர். வேலூர் நாடாளுமன்றத் தொகுதியிலும், ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிகளிலும் இதைக் காரணம் காட்டி இடைத்தேர்தலை நிறுத்த முயல்கின்றனர். இது தொடரும் என்றால் அனைத்துக்கட்சிகளும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. தேர்தல் கமிஷன் சோதனை குறித்து முறையாக தாக்கீது அனுப்பினீர்களா? காவல் துறையிலிருந்து புகார் வந்ததால் சோதனை என்கின்றனர்.

மோடியின் வீட்டில் கோடி கோடியாகப் பணம் இருக்கிறது என நான் செல்கிறேன். வருமான வரித்துறை சோதனை நடத்துமா.
எடப்பாடி பழனிசாமி வீட்டிலும், ஓ.பன்னீர்செல்வம் வீட்டிலும் வருமான வரித்துறையும், தேர்தல் ஆணையமும் சோதனை நடத்துமா.
சபேசன் என்ற ஒப்பந்ததாரர் வேலுமணியின் நெருங்கிய நண்பர். அவரது வீட்டிலிருந்து 15 கோடி பணம் எடுக்கப்பட்டுள்ளது. அது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு வழங்க வைத்திருந்த பணம் என நான் சொல்கிறேன். தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்குமா. மக்களை திசை திருப்பி, கலவரத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். தமிழகத்தில் தாமரை தலை கீழாக நின்னாலும் மலரவே மலராது. "Go back modi" தமிழகத்திலிருந்துதான் மற்ற மாநிலங்களுக்கு பரவியது. சிவகங்கையில் அமித் ஷா பேசும்போது, ஓட்டு யாருக்கு எனக் கேட்டு இருக்கின்றார். ஆனால், யாரும் பதில் சொல்லவில்லை. வளர்ச்சியைப் பற்றி இப்போது பா.ஜ.க-வினர் பேசுவதே இல்லை.

அரசியலில் நிரந்தரமான எதிரி என யாரும் இல்லை என்பார்கள். ஆனால், நமக்கு நரேந்திர மோடியும் அவருடைய கொள்கையும்தான் எதிரி. கோவை பா.ஜ.க வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், இந்தியாவில் மதக்கலவரம் நடக்கவே இல்லை என்று சமீபத்தில் ஒரு அரிய கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்துள்ளார் என்ற ஸ்டாலின், நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் மதக்கலவரம் தொடர்பாக  தாக்கல் செய்த அறிக்கையைப் பட்டியலிட்டார். தொடர்ந்து பேசிய அவர், ``தமிழகத்தில் மட்டும்தான் கலவரத்தில் ஒரே ஒருவர் மட்டும் உயிரிழந்து இருக்கின்றார். அதற்கு காரணம் இது பெரியார் மண். அதிக பாதிப்பு உத்தரப்பிரதேசத்தில் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கோவையிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு பிரசாரத்துக்கு கிளம்பியபோது இரண்டு பெண் போலீஸார் என்னோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள  ஆசைப்படுவதாக கூறினார்கள். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அப்போது எந்த ஊர் எனக் கேட்டேன். வெட்கப்பட்டுத் திரும்பிக்கொண்டனர். பின்னர்  சங்கடத்தோடு பொள்ளாச்சி எனச் சொன்னார்கள். பொள்ளாச்சி என்ற ஊர் பெயரை பெண் போலீஸாரே சொல்லவே வெட்கப்படுகின்றனர். 7 ஆண்டுகளாக 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னணியில்  பொள்ளாச்சி ஜெயராமன், அவரின் மகன்கள் இருக்கின்றனர். ஒரு பெண்ணை காரில் தூக்கிப் போட்டுச் சென்றபோது, அந்தப் பெண் காரிலிருந்து குதித்து இறந்துள்ளார். காரில் இருந்தவர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன்

பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் புகார் கொடுத்திருக்கின்றார். ஆனால், போலீஸ் சரியாக விசாரிக்கவில்லை.  முறையாக விசாரித்திருந்தால் ஐம்பது அறுபது பெண்களைக் காப்பாற்றி இருக்க முடியும். எடப்பாடி பழனிசாமி தன்னை எம்.ஜி.ஆர் மாதிரி நினைத்துக்கொண்டு பிரசாரத்துக்கு போய் ஒவ்வொருவராக பார்த்துக் கும்பிடுகின்றார். என் நண்பர் அண்ணா நகர் ரமேஷ் 2001-ல் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டார். இப்போது அந்த விவகாரத்தை கையில் எடுப்பேன் என எடப்பாடி  பழனிசாமி சொல்கின்றார்.  கடந்த 8 வருடமா என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்? இப்போதுகூட வழக்கு போடுங்கள் . நான் சந்திக்கத் தயார். நான் பனங்காட்டு நரி. அவர்கள் மீதான குற்றசாட்டுகளை திசைதிரும்ப இதுபோன்ற குற்றசாட்டுகளை முன் வைக்கின்றனர். இந்தத் தேர்தலில் மக்கள் நல்ல முடிவை கொடுக்க காத்திருக்கின்றார்கள்" என்றார்.