Published:Updated:

`என்னைவிட அவர்கள் சிறந்த நடிகர்கள்!'- தி.மு.க-வை விமர்சித்த கமல்ஹாசன்

`என்னைவிட அவர்கள் சிறந்த நடிகர்கள்!'- தி.மு.க-வை விமர்சித்த கமல்ஹாசன்
`என்னைவிட அவர்கள் சிறந்த நடிகர்கள்!'- தி.மு.க-வை விமர்சித்த கமல்ஹாசன்

வடசென்னை தொகுதியின் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளரும் ஐ.பி.எஸ். அதிகாரியுமான ஏ.ஜி.மவுரியாவை ஆதரித்து நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன்  பிரசாரம் செய்தார். அப்போது, `ஐ.டி.ரெய்டுக்குப்பிறகுதான் தெரிந்தது, அவர்கள் என்னைவிட சிறந்த நடிகர்கள்' என்று தி.மு.க.வை மறைமுகமாக கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்தார். 

வடசென்னை தொகுதியின் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளரும் ஐ.பி.எஸ். அதிகாரியுமான ஏ.ஜி.மவுரியாவை ஆதரித்து ராயபுரம், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய பகுதியில் டார்ச் லைட் சின்னத்துக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன்  வாக்குகளைச் சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ``திருவொற்றியூர் எனக்குப் புதிதல்ல. என்னுடைய நடன ஆசான் ஒத்திகை கொடுக்கும்போது இங்குள்ள கோயிலில் என்னை ஒருவாரம் தினமும் ஆட வைத்துள்ளார். அப்போது எனக்கு வயது 14, 15 இருக்கும். இங்கே என்னுடைய கால்கள் உறுதியானது. இங்கு மீண்டும் நடமாட வந்திருக்கிறது மக்கள் நீதி மய்யம்.  

இவர் (ஏ.ஜி மவுரியா) காவல்துறை அதிகாரியாக வலம் வந்தவர். மக்கள் பிரதிநிதியாக மீண்டும் வலம் வர உள்ளார். இந்தத் தொகுதியை நன்கு அறிந்தவர். என்னைப் போல ஆதங்கம், கோபம் வேட்பாளருக்கு உள்ளது. இதனால்தான் வடசென்னையில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளோம். தமிழகத்தில் பல பகுதிகளில் பணிபுரிந்த ஏ.ஜி மவுரியா, கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இந்தத் தொகுதியில் பணிபுரிந்துள்ளார். இதனால் அவருக்குத் தொகுதி குறித்து நன்றாகத் தெரியும். 

எதிர்க்கட்சியினர், மக்களின் மனதைக் குழப்புவார்கள். எங்களைப் புதிய கட்சி என்று சொல்வார்கள். பிரதமர் மட்டும் தேர்வு செய்யும் தேர்தல் என்று சொல்வார்கள். அதை நம்பாதீர்கள். தமிழகத்தின் நிலை என்ன என்பதை நாடாளுமன்றத்தில் தமிழ் குரல்கள் கொடுக்கும் அற்புதமான தேர்தல். இதை கைநழுவ விட்டுவிடாதீர்கள். செய்வதறியாது குழம்பிப் போய் இருந்ததைப் பயன்படுத்தி அரைநூற்றாண்டைக் கடத்திவிட்டார்கள். அது, நடக்கக்கூடாது. விழித்திருங்கள். பொறுத்திருக்காதீர்கள். பசித்திருங்கள். அறிவுப் பசி இருக்க வேண்டும்.

ஏழ்மையைக் காட்டி காட்டிதான் அரசியல்வாதிகள் தங்களின் பணப்பையின் வீக்கத்தை அதிகப்படுத்த முடியும். அவர்களுக்கு வெட்கமே இல்லை. என்னைப்பார்த்து நீ அரசியல்வாதி அல்ல. நீ நடிகன் என்று கூறினார்கள். ஐ.டி ரெய்டுக்கு முன் சவால் விட்டார்கள். இதனால் அவர்களை நேர்மையானவர்கள் என்று கருதினேன். எங்களிடம் ரெய்டு நடத்துங்கள் என்று தைரியமாக சொன்னவர்களிடம் சோதனை நடந்தபிறகுதான் என்னைவிட அவர்கள் சிறந்த நடிகர்கள் என்று தெரிந்தது. 

உண்மையைப் பிரதிபலிக்கும் வேட்பாளர்கள் எங்கள் கட்சியில் உள்ளனர். எங்களுக்கு வேலை செய்யும் வாய்ப்பைக் கொடுங்கள். நாற்காலி எங்களுக்குத் தேவையில்லை. நடந்துகொண்டே இருப்போம். நடத்திக் காட்டும் வரை நடந்துகொண்டே இருப்போம். நாற்காலி அங்கேயே இருக்கட்டும். அதன்மீது எங்கள் உடல் சாயாது. எங்களுக்குக் கொடுக்கப்பட்ட 5 வருடங்களுக்குள் ஒவ்வொரு வீட்டிலும் குடிநீர் கொண்டு வருவோம். எங்கள் கரத்தை வலுப்படுத்துங்கள். நாளை நமதே. . 

பகுதி, தொகுதி நிர்வாகிகள் என எல்லோரும் உழைத்துக்கொண்டு இருங்கள். உங்களிடமும் எதிர்க்கட்சிகள் விலைபேசுவார்கள். சில சகோதரர்களை விலை கொடுத்து வாங்கிவிட்டனர். அது இங்கே நடக்கக்கூடாது. மக்கள் முன் நான் விடுத்துள்ள சவால். தயவுசெய்து உங்கள் ஓட்டுகளை விலைபேச விடாதீர்கள். கணக்குப் போட்டுப் பாருங்கள். உங்களிடம் திருடிய பணத்தை மூட்டையாக வைத்துக்கொண்டு வைத்திருக்கிறார்கள். அதைத்தான் நீங்கள் பார்த்தீர்களே. அந்தப் பணத்தில் திரும்ப உங்களுக்குக் கொடுக்கும் தொகை சில்லறைதான். நான் உங்களின் தெய்வம் அல்ல. உங்களின் ஊழியன். அவர்கள் கொடுக்கும் பணம் ஒருநாள் சாப்பாட்டுக்குக்கூட போதாது. உங்கள் வாழ்க்கையை 5 வருடங்களுக்கு விற்க வேண்டுமா. சிந்தியுங்கள், மக்கள் நீதி மய்ய வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுங்கள். நீங்கள் நலமாக வாழலாம். அதற்கான வாய்ப்பை எங்களுக்கு ஏற்படுத்திக் கொடுங்கள்" என்று பேசினார். 

அடுத்த கட்டுரைக்கு