மகனுக்காக காங்கிரஸில் ஜெயித்துவிட்டார் ப.சிதம்பரம்! சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் ஜெயிப்பாரா? - கள நிலவரம் | Star Candidate of Sivagangai - Karti Chidambaram

வெளியிடப்பட்ட நேரம்: 21:11 (04/04/2019)

கடைசி தொடர்பு:07:50 (05/04/2019)

மகனுக்காக காங்கிரஸில் ஜெயித்துவிட்டார் ப.சிதம்பரம்! சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் ஜெயிப்பாரா? - கள நிலவரம்

தொகுதியில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் இடத்தில் இருக்கும் சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின வாக்குகளை முழுதாக நம்பிக் கொண்டிருக்கிறார் கார்த்தி சிதம்பரம். இதில், வெற்றி பெறப் போவது கார்த்தியா... ராஜாவா என்பதற்கான விடை, இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும். 

மகனுக்காக காங்கிரஸில் ஜெயித்துவிட்டார் ப.சிதம்பரம்! சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் ஜெயிப்பாரா? - கள நிலவரம்

நட்சத்திர வேட்பாளர்: கார்த்தி ப.சிதம்பரம்

தொகுதி: சிவகங்கை

சுருக்கமான அறிமுகம்:

காரைக்குடியை அடுத்த கண்டனூர் கிராமத்தில் 1971-ம் ஆண்டு பிறந்தவர். வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அப்பா சிதம்பரம் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர். பொருளாதார நிபுணர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். அம்மா நளினி சிதம்பரம் பிரபல வழக்கறிஞர். தன்னுடைய ஆறு வயதிலேயே தேர்தல் பூத் கமிட்டியில் சிலிப் எழுதிக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டவர். இளைஞர் காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர், தமிழக காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் எனப் படிப்படியாக உயர்ந்தார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கைத் தொகுதியில் போட்டியிட்டு நான்காம் இடத்தைப் பிடித்தார். ‘கட்சியின் கொள்கை முடிவின்படி பதவியில் உள்ளவர்கள் யாரும் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சீட் கேட்கக் கூடாது' என அறிவித்திருந்தார் ராகுல்காந்தி. இந்த முடிவையே மாற்றி, தன்னுடைய மகனுக்கு மீண்டும் சீட் வாங்கிக் கொடுத்திருக்கிறார் சிதம்பரம்.  

கார்த்தி சிதம்பரம் அரசியல் வாழ்க்கை!

தொகுதியின் அரசியல் வரலாறு: 

சிவகங்கைத் தொகுதியில் 7 முறை வெற்றி பெற்றிருக்கிறார் சிதம்பரம். அதில், இரண்டு முறை த.மா.கா சார்பில் போட்டியிட்டார். தி.மு.க சார்பில் தா.கிருட்டிணன் இரண்டு முறையும் அ.தி.மு.க இரண்டு முறையும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 2009 மக்களவைத் தேர்தலில் 4,000 வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளர் ராஜகண்ணப்பனை வென்றார் சிதம்பரம். இந்த வெற்றி செல்லாது என நீதிமன்றம் சென்று இறுதிவரையில் போராடினார் கண்ணப்பன். இன்றளவும் சிதம்பரத்தின் கண்ணசைவில்தான் சிவகங்கை மாவட்டக் காங்கிரஸ் இயங்குகிறது. சோனியா காந்தியிடமும் ராகுல் காந்தியிடமும் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கிறார். 

தொகுதி நிலவரம்: 

சிவகங்கைத் தொகுதியில் வேட்பாளரின் வெற்றியை நிர்ணயிப்பது சாதி ஓட்டுக்கள்தான். மத்திய அரசின் மீதான எதிர்ப்பின் காரணமாக, சிறுபான்மையினர் ஓட்டுக்கள் பா.ஜ.க வேட்பாளருக்குக் கிடைக்கப்போவதில்லை. பிரதானக் கட்சிகளின் வேட்பாளர்கள் இருவருமே மைனாரிட்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதைப் பயன்படுத்தி தொகுதியில் உள்ள சொந்த சமூக வாக்குகளைக் கைப்பற்றப் போராடி வருகிறார் அ.ம.மு.க வேட்பாளர் தேர்போகி.பாண்டி. முக்குலத்தோர் வாக்குகளும் அரசு ஊழியர்கள் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகளும் சிந்தாமல் சிதறாமல் ஹெச்.ராஜாவுக்கு கிடைத்தால்தான் அவரால் வெற்றி பெறமுடியும். ஆனால், கள நிலவரம் அப்படிச் சாதகமாக இல்லை. தி.மு.க கூட்டணியில் போட்டியிடுவது கார்த்தியின் மிகப் பெரிய ப்ளஸ். காங்கிரஸ் மீது சிறுபான்மையின மக்களுக்கு இருக்கும் பாசமும் அரசு ஊழியர்களின் வாக்குகளும் கூடுதல் ப்ளஸ். ப.சி-யின் மீது அதிருப்தியில் இருந்த சுதர்சன நாச்சியப்பனும் தற்போது ராசியாகிவிட்டார். தொகுதிக்குள் எதிர்ப்பு அலை இல்லாமல் இருப்பதைப் பலமாகப் பார்க்கிறார் கார்த்தி. 

கார்த்தி சிதம்பரம்

டாப் 5 சுவாரஸ்ய தகவல்கள்: 

1. ஒளிவுமறைவின்றி மனதுக்குத் தோன்றுவதை வெளிப்படையாகப் பேசுவது.

2. `எப்படி அரசியல் செய்வது என்பதை தி.மு.க-விடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்' எனக் கட்சிக்காரர்களிடம் வெளிப்படையாகவே பேசுவார். 

3. `ப.சிதம்பரத்துக்குப் பிள்ளையாகப் பிறந்ததில் பெருமைப்படுகிறேன்' என அடிக்கடி சொல்வார். 

4. தன்னைத் தேடி வரும் சாதாரண மனிதர்களின் நிலைமையைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு உதவி செய்வது.

5. எத்தனை கோபம் இருந்தாலும், அடுத்த நொடியே சம்பந்தப்பட்டவர்கள் மீது அன்பைக் காட்டுவது. வெளிநாட்டு பயணத்தில் இருந்தாலும் ஆதரவாளர்களின் இல்ல நிகழ்ச்சிகளில் தவறாமல் ஆஜராவது.

டாப் 3 சர்ச்சைகள்: 

1. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு, 305 கோடி ரூபாய் அந்நிய முதலீட்டு பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் சிக்கியது 

2. சி.பி.ஐ வழக்குப் பதிவால் கார்த்தி சிதம்பரத்தின் 76 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கி வைக்கப்பட்டன. ஆனால், `தன்மீது புகார் மட்டுமே பதிவாகியுள்ளது' எனக் கூறி சர்ச்சையில் சிக்கினார். 

3. தேர்தல் நேரம் மட்டுமே காரைக்குடி அருகில் இருக்கும் பண்ணைவீடான மானகிரி வீட்டில் முகாமிடுவது வழக்கம். அந்த நேரம் மட்டுமே மாவட்டம் முழுவதும் இருக்கும் கட்சி நிர்வாகிகளைச் சந்திப்பது வழக்கம். 

சக போட்டியாளர்களின் ப்ளஸ், மைனஸ்: 

அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடுவது பா.ஜ.க வேட்பாளர் ஹெச்.ராஜாவுக்குப் ப்ளஸ். சொந்தக் கட்சியின் செல்வாக்கைவிட கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளை மட்டுமே நம்பியிருப்பது பெரிய மைனஸ். சிட்டிங் எம்.பி செந்தில்நாதனுக்கு சீட் கொடுக்காததால், லோக்கல் அ.தி.மு.க-வில் அதிருப்தி மேலோங்கியிருக்கிறது. இரண்டு தேசிய கட்சிகளிலும் வேட்பாளர்கள் முக்குலத்தோர் சமூகத்தினர் இல்லாததால், அ.தி.மு.க-வுக்குச் செல்ல வேண்டிய வாக்குகளை அ.ம.மு.க வேட்பாளர் தேர்போகி.பாண்டி பிரிப்பது ராஜாவுக்கான மைனஸ். தொகுதியில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் இடத்தில் இருக்கும் சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின வாக்குகளை முழுதாக நம்பிக் கொண்டிருக்கிறார் கார்த்தி சிதம்பரம். இதில், வெற்றி பெறப் போவது கார்த்தியா, ராஜாவா என்பதற்கான விடை, இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்