Published:Updated:

`50,000 பேர்; தடபுடலான வரவேற்பு' - ஸ்டாலின் பொதுக்கூட்டத்துக்கு செந்தில் பாலாஜியின் பிரமாண்ட பிளான்!

`50,000 பேர்; தடபுடலான வரவேற்பு' - ஸ்டாலின் பொதுக்கூட்டத்துக்கு செந்தில் பாலாஜியின் பிரமாண்ட பிளான்!
`50,000 பேர்; தடபுடலான வரவேற்பு' - ஸ்டாலின் பொதுக்கூட்டத்துக்கு செந்தில் பாலாஜியின் பிரமாண்ட பிளான்!

ஸ்டாலினை வைத்து இன்று காலை கரூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணிக்கு வாக்குகள் சேகரிக்கும் பொதுக்கூட்டத்தை நடத்த இருக்கிறார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

வரும் 18-ம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்காக, தேர்தலைச் சந்திக்கும் அனைத்துக் கட்சிகளும் தங்களது கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தி, தேர்தல் பிரசாரத்தை முடுக்கிவிட்டிருக்கின்றன. அந்த வகையில், கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் தம்பிதுரையே மறுபடியும் களமிறங்கி இருக்கிறார். தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கரூர் தொகுதி ஒதுக்கப்பட்டு, அந்தக் கட்சியின் வேட்பாளராக ஜோதிமணி அறிவிக்கப்பட்டுள்ளார். அ.ம.மு.க சார்பில் அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.எஸ்.என்.தங்கவேல் களமிறக்கப்பட்டுள்ளார்.


 

இவர்களைத் தவிர, மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மருத்துவர் ஹரிஹரனும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மருத்துவர் கருப்பையாவும் களத்தில் இருக்கிறார்கள். அனைவரும் தீவிர பிரசாரத்தில் குதித்திருக்கிறார்கள். காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி அனல் பறக்கும் பிரசாரத்தில் இறங்கி இருக்கிறார். அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி ஜோதிமணிக்காக வாக்குகள் சேகரித்தார். இந்த நிலையில்தான், ஜோதிமணிக்கு வாக்குகள் சேகரிக்க தி.மு.க தலைவர் ஸ்டாலின் கரூர் வருகை தருகிறார். இன்று காலை  திருமாநிலையூரில் இருந்து ராயனூர் போகும் வழியில் உள்ள இடத்தில் பிரமாண்டமாக பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்கிறார், தி.மு.க-வின் மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி. தமிழகத்தில் யாரும் பிரசார கூட்டத்துக்கு கூட்டாத அளவுக்கு 50,000-க்கும் அதிமானவர்களை அழைத்து வர இருப்பதாக சொல்லப்படுகிறது.



 

இதுபற்றி, நம்மிடம் பேசிய கரூர் மாவட்ட தி.மு.க-வினர் சிலர், ``செந்தில் பாலாஜி எங்க கட்சிக்கு வருவதற்கு முன்பு, கரூர் மாவட்ட தி.மு.க இருந்த இடமே தெரியாம இருந்துச்சு. ஆனா, இப்போ கரூர் மாவட்ட தி.மு.கதான் டாப்பா இருக்கு. அந்த அளவுக்கு கள வேலைகளையும், பிரமாண்டமாக நிகழ்ச்சிகளையும் ஒருசேர நடத்தி, கட்சியைத் தெம்பாக்கி வருகிறார். இவர் ஸ்டாலின் முன்னிலையில் நடத்திய தி.மு.க இணைப்பு விழாவில் 40,000-க்கும் அதிகமானவர்களை திரட்டி, ஸ்டாலினை திகைக்க வைத்தார். அதோடு, அடுத்து திரும்பவும் ஸ்டாலினை அழைத்து வந்து, தி.மு.க பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அதன் நேர்த்தியைப் பார்த்து வியந்துபோன ஸ்டாலின், மறுநாளே கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளராக செந்தில் பாலாஜியை அறிவித்தார். அதேபோல், அதற்கடுத்து நடத்திய கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் லிமிட்டில் வரும் பூத் ஏஜெண்ட்களுக்கான கூட்டத்தையும் பிரமாண்டமாக நடத்தினார். 


 

தொடர்ந்து, கீழ்மட்டம் வரை சென்று, ஒவ்வொரு ஓட்டையும் கண்காணிக்க இரண்டு நபர்களை நியமித்து, தி.மு.கவை கரூரில் வளர்த்து வருகிறார். இந்நிலையில்தான், ஸ்டாலினை வைத்து, ஜோதிமணிக்கு வாக்கு சேகரிக்கும் பிரசார கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த இருக்கிறார் செந்தில் பாலாஜி. ஸ்டாலினுக்கு இன்று தடபுடலான வரவேற்பு கொடுப்பதோடு, அந்தப் பொதுக்கூட்டத்துக்கு 50,000-க்கும் அதிமானவர்களை திரட்டி வந்து பிரமாதப்படுத்தும் முடிவில் இருக்கிறார். தனது அரசியல் எதிரியான அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரையை மண்ணைக் கவ்வ வைக்க, எந்த முயற்சியையும் எடுக்க இருக்கிறார் செந்தில் பாலாஜி. ஆனால், இந்த பிரமாண்டம், பிரமாதமெல்லாம் தேர்தலில் ஓட்டாகுமான்னு தெரியலை. இன்னொருபக்கம், எல்லா மட்டத்திலும் அ.ம.மு.க-வில் இருந்து தன்னோடு வந்த தனது ஆதரவாளர்களையே முக்கியத்துவப்படுத்துகிறார் செந்தில் பாலாஜி. இது தி.மு.கவினரை எரிச்சல்கொள்ள வைக்குது" என்றார்கள்.