கோவையில் ஸ்டாலின் மீது இரண்டு காவல்நிலையங்களில் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு! | case filed against DMK leader M.k.Stalin

வெளியிடப்பட்ட நேரம்: 10:05 (05/04/2019)

கடைசி தொடர்பு:08:53 (06/04/2019)

கோவையில் ஸ்டாலின் மீது இரண்டு காவல்நிலையங்களில் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு!

உள்ளட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி குறித்து அவதூறாகப் பேசியதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் மீது மூன்று  பிரிவுகளின் கீழ் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின்

பொள்ளாச்சி நாடாளுமன்ற தி.மு.க வேட்பாளரான சண்முகசுந்தரத்தை ஆதரித்து  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டாமுத்தூர் பகுதியில் நேற்று காலை பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, ``கொள்ளையடிப்பதில் எடப்பாடியைவிட  நம்பர் ஒன் எஸ்.பி.வேலுமணி. அரசு டெண்டர்கள் அனைத்தும் அமைச்சர் வேலுமணியின் குடும்பத்துக்கும் அவருக்கு வேண்டப்பட்டவர்களுக்கும்தான் கொடுக்கப்பட்டு உள்ளது. இதை பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டுள்ளன. முதலமைச்சர் எடப்பாடியும் இப்படிதான். ஆனால், அவரையே மிஞ்சுகிறார் வேலுமணி. ஊழல் செய்வதில் கில்லாடியான வேலுமணி ஊழல் பணத்தைக் குவித்து வைத்துக்கொண்டு முதல்வரையே மிரட்டுகிறார்.

மு.க.ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு

வேலுமணியுடன் இருப்பவர்களே அவர் ஊழல் செய்ததற்கான தகவல்களை எங்களிடம் கொடுத்துள்ளனர். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறையை வைத்து நடவடிக்கை எடுப்போம். சிறையில் அடைப்போம். அதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளது. சட்டமன்றத்தில் ஒரு கேள்வி கேட்டால், ஒரு மணி நேரத்துக்கு மேலாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளிப்பார். ஆனால், அவர் சொல்வது ஒன்றுமே புரியாது. பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அமைச்சர்  எஸ்.பி வேலுமணியின் ஆதரவிலே செயல்பட்டுள்ளனர். பார் நாகராஜன், அமைச்சரின் ஆதரவாளர். பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்றும் பணியில் வேலுமணி ஈடுபட்டுள்ளார்" என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில், எவ்வித ஆதாரமும் இல்லாமல், உண்மைக்குப் புறம்பான தகவல்களை மு.க.ஸ்டாலின் அவதூறாகப் பேசியுள்ளார். இது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாகவும் கூறி அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவினர் நேற்றைய தினம் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர். அந்தப் புகாரின் பேரில் கோவை தொண்டாமுத்தூர் காவல் நிலைய போலீஸார் 153A, 504, 125 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல் குனியமுத்தூர் பகுதியில் அவதூறு பேசியதாக குனியமுத்தூர் காவல் நிலையத்திலும் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க