`ஸ்டெர்லைட்தான் அ.தி.மு.க கூட்டணிக்குச் செலவு செய்யுது!'- முத்தரசன் பகீர் | mutharsan says sterlite industry only spending for ADMK alliance

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (05/04/2019)

கடைசி தொடர்பு:08:55 (06/04/2019)

`ஸ்டெர்லைட்தான் அ.தி.மு.க கூட்டணிக்குச் செலவு செய்யுது!'- முத்தரசன் பகீர்

``அ.தி.மு.க-வை உடைத்ததும், இணைத்ததும் பா.ஜ.க.தான். சோதனை என்ற பெயரில் அ.தி.மு.க-வை மிரட்டிதான் கூட்டணிக்குப் பணிய வைத்து, தமிழகத்தில் 5 சீட்டுகளைப் பெற்றுள்ளது பா.ஜ.க.,” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

முத்தரசன்

தூத்துக்குடி நாடாளுமன்ற தி.மு.க., வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக கோவில்பட்டியில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ``ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று 99 நாள் மக்கள் அமைதியாக போராட்டம் நடத்தினர். 100-வது நாள் போராட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக கொடூரத் தாக்குதல் நடத்தியதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது மட்டுமின்றி 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி முகிலன் குறும்படம் தயாரித்து, சென்னையில் வெளியிட்டுச் சென்றவர், அதன் பின்பு அவரைக் காணவில்லை.

அரசின் பல்வேறு திட்டங்களை எதிர்த்து கல்லூரி மாணவி வளர்மதி துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்த காரணத்துக்காக அவர் மீது தேசப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது. ஒரு மாணவியைக் கண்டு பிரதமர் மோடிக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் பயம். மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அரசுக்கு எதிராக கருத்து கூறினால் இதுதான் நிலைமையா? இங்கு கருத்துரிமை மறுக்கப்படுகிறது.

முத்தரசன்

35,000 போராட்டம் நடைபெற்றது என்று பெருமையாகக் கூறும் முதல்வர், அதற்குத் தீர்வு கண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். கல்லா கட்டுவதைத் தவிர வேறு எந்தத் தீர்வையும் முதல்வர் காணவில்லை. சோதனை என்ற பெயரில் கூட்டணிக்கு அ.தி.மு.க.,வைப் பணியை வைத்தது பா.ஜ.க,. அ.தி.மு.க.,வை மிரட்டிதான் தமிழகத்தில் 5 சீட்டுகளை பா.ஜ.க பெற்றுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கும் பா.ஜ.க., அ.தி.மு.க-வுக்கும் என்ன உறவு. அ.தி.மு.க கூட்டணி போட்டியிடும் 40 தொகுதிகளுக்கும் ஸ்டெர்லைட் ஆலைதான் செலவு செய்கிறது.

அ.தி.மு.க-வை உடைத்ததும், இணைத்ததும் பா.ஜ.க-தான். ஒரு அரசியல் கட்சியை 400 கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளது பா.ஜ.க., ஒரு குரங்கிடம் சிக்கிய பூமாலை போல உள்ளது இந்தியா. அதனால்தான் ``இந்தியாவை மீட்போம்” என்கிறோம், ஏலம் முறையில் முதல்வராக வந்தவர் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க கூட்டணி கொள்கைக் கூட்டணியா? இல்லை.., கொள்ளைக் கூட்டணி.., கொலைகாரக் கூட்டணி. இந்த இரு ஆட்சிகளையும் அகற்றிவிட்டு மோடியையும், பாடியையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க