பா.ஜ.க.வின் பி டீம் சீமான்; தினகரனுக்கு ஆதரவு ஏன்? - வீரலட்சுமியின் அடடே காரணம்  | veeralakshmi clears about the video she released

வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (05/04/2019)

கடைசி தொடர்பு:08:55 (06/04/2019)

பா.ஜ.க.வின் பி டீம் சீமான்; தினகரனுக்கு ஆதரவு ஏன்? - வீரலட்சுமியின் அடடே காரணம் 

சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவி வருகிறது தமிழர் முன்னேற்றப் படையின் நிறுவனத் தலைவர் கி.வீரலட்சுமி, பா.ஜ.க.வின் பி. டீம் என்று நாம் தமிழர் கட்சியினரை விமர்சிக்கும் வீடியோ. அந்த வீடியோ குறித்து அவரிடம் பேசினோம். 

தினகரனைச் சந்தித்த வீரலட்சுமி

 பா.ஜ.க.வின் பி. டீம் என்று நாம் தமிழர் கட்சியினரைச் சொல்கிறீர்களே ஏன்? 

 ``பா.ஜ.க.வினருக்கு சிறுபான்மையினரின் ஓட்டுக்கள் இந்தத் தேர்தலில் விழ வாய்ப்பு இல்லை. அந்த ஓட்டுக்களைப் பெற நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் ஹெச்.ராஜாவுக்கு ஆதரவான நிலைப்பாடுகளை நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் எடுத்துள்ளனர். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அதை வைத்துத்தான் வீடியோவில் நாம் தமிழர் கட்சியினர் பா.ஜ.க. வின் பி.டீம் என்று சொன்னேன்". 

 தேர்தல் களம் பரபரப்பாக இருக்கும் சமயத்தில் நீங்கள் அமைதியாக இருப்பது ஏன்?

 ``நான் அமைதியாக இருக்கவில்லை. விரைவில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடவுள்ளேன். ஸ்ரீபெரம்புதூர் தொகுதி வேட்பாளரை ஆதரித்து நாளை பிரசாரம் செய்யவுள்ளேன். தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்யத் தயாராகிக் கொண்டிருக்கிறேன்".

வீரலட்சுமி

கடந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு அளித்தீர்கள், இப்போது திடீரெனத் தினகரனுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்ததற்கு என்ன காரணம்? 

 ``பா.ஜ.க.வை சிங்கிளாக டி.டி.வி.தினகரன் விமர்சித்துவருகிறார். அதனால்தான் இந்தத் தேர்தலில் டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவு அளித்துள்ளேன். 40 நாடாளுமன்றத் தேர்தலிலும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்தான் வெற்றிபெறும்". 

 நீங்கள் ஆதரவு தெரிவித்தபோது டி.டி.வி.தினகரன் உங்களிடம் என்ன சொன்னார்? 

 ``அரசியல் கள நிலவரங்களை ஆலோசித்தோம். தமிழர் முன்னேற்றப் படை ஆதரவு அளித்ததற்கு நன்றி கூறினார். டி.டி.வி.தினகரன் தமிழர். இதனால் இந்தத் தமிழச்சி அவருக்கு ஆதரவு அளித்துள்ளார்".


இந்தத் தேர்தலில் சட்டரீதியாகப் போராடி டி.டி.வி.தினகரன் சின்னம் பெற்றுள்ளாரே. அந்தச் சின்னத்துக்கு மக்களிடையே வரவேற்பு கிடைக்குமா? 

 ``கண்டிப்பாக கிடைக்கும். டி.டி.வி.தினகரனுக்கு ஆர்.கே.நகரில் குக்கர் சின்னம் கிடைத்தது. இதனால் அவர் வெற்றி பெற்றார். அதுபோலதான் மக்கள் இதயத்துக்குள் ஆணி அடித்ததுபோன்ற பரிசுப் பெட்டகம் சின்னம் இந்தத் தேர்தலில் கிடைத்துள்ளது. இதனால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரின் வெற்றி உறுதியாகிவிட்டது. 

 அ.தி.மு.க.வுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் துரோகம் செய்துவருகின்றனர். சொந்தக் கட்சிக்கு துரோகம் செய்த அவர்கள் தமிழக மக்களுக்கு நல்லது செய்வார்களா. இந்தக் கேள்வி தமிழக மக்கள் அனைவருக்கும் உள்ளது. இதனால் இந்தத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு அ.தி.மு.க.வினர் அதிகளவில் வாக்களிப்பார்கள்". 

 தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வீரலட்சுமி

மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்? கமலின் அரசியல் வருகையை ஆதரிப்பீர்களா? 

 ``கமல் ஒரு சிறந்த நடிகர். அவரின் ரசிகை நான். நடிகராக அவரை வரவேற்போம். ஆனால், அரசியல் கட்சித் தலைவராக அவரை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் அரசியலுக்கு இளைஞராக இருந்த சமயத்தில் வந்திருக்கலாம்" 

 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்குப் பிரசாரம் செய்ய உள்ளீர்கள். எதை முன்னிறுத்தி உங்களின் பிரசாரம் இருக்கும்?  

 ``பா.ஜ.க. ஆட்சியில் தமிழக மக்களும் விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வால் அனிதா என்ற தங்கையை இழந்துள்ளோம். ஆளுங்கட்சியினர் மணல் கொள்ளையில் ஈடுபட்டுவருகின்றனர். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. தி.மு.க.வும் தமிழகத்துக்கு துரோகம் செய்துள்ளது. அதுதான் என்னுடைய பிரசாரத்தின் மையமாக இருக்கும்". 

பா.ஜ.க.வை தினகரன் மட்டுமல்ல மற்ற கட்சிகளும் விமர்சிக்கத்தான் செய்கிறார்கள். அப்படியிருந்தும் தினகரனுக்கு மட்டும் ஏன் ஆதரவு? 

 ``கூட்டணி கட்சிகளுக்காக தி.மு.க, பா.ஜ.க.வை விமர்சித்துவருகிறது. ஆனால், தனியொருவனாக டி.டி.வி.தினகரன்தான் பா.ஜ.க.வை தைரியமாக விமர்சித்துவருகிறார். இதனால்தான் அந்தக் கட்சிக்கு தமிழர் முன்னேற்றப் படையின் ஆதரவை அளித்துள்ளோம்" 

வைகோ உங்களிடம் பேசினாரா?

 ``அவரின் மகள் நான். அரசியலைத் தவிர்த்து என்னிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்". 

 பா.ஜ.கவின் பி.டீம் நாம் தமிழர் கட்சியினர் என்று வீடியோ வெளியிட்டுள்ளீர்கள். அதுதொடர்பாக மிரட்டல் போன் அழைப்புகள் உங்களுக்கு வந்ததா? 

 ``இல்லை. வந்தாலும் அதை தைரியமாக எதிர்கொள்வேன். ஏனெனில் அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. நான் வெளியிட்டுள்ள வீடியோவில் சில விவரங்களை குறிப்பிட்டுள்ளேன்".