Published:Updated:

`கையில் கட்டைப்பையுடன் வாக்கு சேகரிக்கும் நீதிபதி!' - நாகை மக்கள் வியப்பு

`கையில் கட்டைப்பையுடன் வாக்கு சேகரிக்கும் நீதிபதி!' - நாகை மக்கள் வியப்பு
`கையில் கட்டைப்பையுடன் வாக்கு சேகரிக்கும் நீதிபதி!' - நாகை மக்கள் வியப்பு

எந்த ஒரு படாடோபமும் இல்லை. கையில் கட்டைப் பையுடன், சுட்டெரிக்கும் வெயிலில் வீடு வீடாக நடந்து சென்று வாக்கு கேட்கிறார் ஓய்வுபெற்ற நீதிபதி குருவைய்யா. இவரின் எளிமையான அணுகுமுறை இப்பகுதி வாக்காளர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடுகிறார் குருவைய்யா.

மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றியவர் நீதிபதி குருவைய்யா. பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கியவர். நீதித்துறையில் மிகவும் நேர்மையானவர் என பெயரெடுத்த இவர், எந்த ஓர் அதிகார மமதையும் இல்லாமல் நீதிமன்றத்தில் பொதுமக்களை எளிமையாக அணுகியவர் என்கிறார்கள் இவரை பற்றி அறிந்தவர்கள். சட்ட உதவி மையத்தில் செயலாளராக இவர் பதவி வகித்தபோது, உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இரு கிராமங்களுக்கு இடையே 70 ஆண்டுகளாக நிலவி வந்த சாதி மோதலை தீர்த்து வைத்த சம்பவம் இவரை மேலும் பிரபலப்படுத்தியது.

.

பணி ஓய்வுக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். தற்பொழுது நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இவர், ``வீடு வீடாகச் சென்று `நான் முன்னாள் நீதிபதி குருவைய்யா. மக்கள் நீதி மய்யத்தின் சார்பா, இங்க வேட்பாளராக போட்டியிடுறேன். டார்ச் லைட் சின்னத்துல ஓட்டு போடுங்க” என நோட்டீஸ் கொடுக்கிறார். இவரைப் பற்றி ஏற்கெனவே அறிந்தவர்கள் ``உங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கோம். மதுரை மகிளா நீதிமன்றத்துல நீதிபதியாக இருந்தவர்தானே நீங்க. உங்களோட ஜட்ஜ்மெண்ட்டுகளை பேப்பர்ல படிச்சிருக்கோம். ரொம்பவே எளிமையா இருக்கீங்க சார்” என வியப்புடன் தெரிவிக்கிறார்கள்.

மக்கள் நீதி மய்யத்தின் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளான ஸ்டாலின் மற்றும் கார்த்திகேயனிடம் நாம் பேசியபோது ``இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, எங்களுக்கே கொஞ்சம் யோசனையாதான் இருந்துச்சு. நீதிபதியாக இருந்தவர் எப்படி எங்களோட வந்து எலெக்‌ஷன்ல ஓட்டுக் கேட்க வருவார்னு நினைச்சோம். கண்டிப்பாக கர்வமாகதான் நடந்துக்குவார்னு பயந்தோம். ஆனால் ஆச்சர்யம்... எங்களை எல்லாம் விட, இவர் ரொம்பவே எளிமையாக இருக்கார். எங்களோட சகஜமாக பழகுறார். `நாமெல்லாம் நண்பர்கள். நமக்குள்ள எந்த ஒரு தயக்கமும் வேண்டியதில்லை. ஓட்டுக் கேட்க, எங்க போகணும், எப்ப போகணும்னு எல்லாமே நிங்க சொல்றதுதான் முடிவு'னு சொல்லிட்டார். அடிக்குற வெயில்ல நாங்க எல்லாம் கூட, சோர்ந்து போயிடுறோம். ஆனால், இவர் சளைக்குறதே இல்லை. காலையிலயே எங்களுக்கு போன் பண்ணி, எப்ப கிளம்பறோம்’னு கேட்டுக்குவார்” என நெகிழ்ச்சியோடு பேசினார்கள்.

நீதிபதி குருவைய்யாவிடம் நாம் பேசியபோது ``மக்களுக்குப் பணி செய்றதுக்குதான் நீதிபதி பதவி. இதுல எளிமையாக நடந்துக்குறது எல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. நான் பதவியில் இருந்தப்ப கிராமம் கிரமமாக போயி, சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்தியிருக்கேன். இந்தத் தொகுதியை பொறுத்தவரைக்கும், நிலக்கரி இறக்குமதியால், நாகூர் பகுதி மக்கள் பாதிக்கப்படுறாங்க. இதை சரி செய்யணும். நாகப்பட்டினம் துறைமுகத்தை நவீனப்படுத்தணும். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தடுத்து நிறுத்தணும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பான வாழ்வு கொடுக்கணும். இதெல்லாம் என்னோட கனவு. நான் வெற்றி பெற்றால், கண்டிப்பாக இதெல்லாம் நடக்கும்” என நம்பிக்கையுடம் பேசினார் நீதிபதி குருவைய்யா.

பின் செல்ல