ஒரு விரல் புரட்சிக்குத் தெரியாத ஜனநாயக ரகசியங்கள்! புதிய குடவோலை முறையின் நிபந்தனைகள்! - பகுதி - 6 | Democratic secrets unknown to a finger revolution! The recovery of the new ivory system! - Part - 6

வெளியிடப்பட்ட நேரம்: 11:39 (06/04/2019)

கடைசி தொடர்பு:11:39 (06/04/2019)

ஒரு விரல் புரட்சிக்குத் தெரியாத ஜனநாயக ரகசியங்கள்! புதிய குடவோலை முறையின் நிபந்தனைகள்! - பகுதி - 6

இவ்வமைப்பு முறையின் செயல்பாடுகள் அதிகரிப்பதைப் பொறுத்தும், மக்கள் இவற்றின் பால் ஆர்வம் செலுத்தி, பங்கேற்க முன்வருவதைப் பொறுத்தும், இவற்றின் செயல்பாடுகள் நிலவும் அதிகார அமைப்பின் மீது அழுத்தங்கள் செலுத்தலாம்.

ஒரு விரல் புரட்சிக்குத் தெரியாத ஜனநாயக ரகசியங்கள்! புதிய குடவோலை முறையின் நிபந்தனைகள்! - பகுதி - 6

லகில் உள்ள எல்லா நாடுகளிலும் `ஜனநாயகம்’ என்று அழைக்கப்படும் பிரதிநிதித்துவ அரசாங்கங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். தேர்தல்கள் மூலம் (ஒரு விரல் புரட்சி) தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளும் கட்சிகளும் தாம் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை என்பதை மீண்டும் மீண்டும் அனுபவித்து சலிப்படைந்திருக்கிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் நெருக்கமான உறவு இருப்பதை நன்கு அறிந்திருக்கிறார்கள். அதுமட்டுமன்றி, தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் பெரும் தொழில்களில் முதலீடு செய்து தொழிலதிபர்களாகவும் பெரும் பணக்காரர்களாகவும் உருவாகியிருக்கிறார்கள் என்பதையும் கண்ணாறக் கண்டுகொண்டே இருக்கிறார்கள்

ஒரு விரல் புரட்சி

இந்தத் தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்...

தேர்தல் என்பதே ஐந்தாண்டுகள் தம்மை யார் கொள்ளையடிக்கப்போகிறார்கள் என்பதற்கு எழுதிக்கொடுக்கும் பிரமாணப் பத்திரம் என்று உணர்ந்திருக்கிறார்கள். நிர்வாகச் சீர்கேடுகளும், லஞ்சமும் ஊழலும், கொலையும் கொள்ளையும் நிறைந்ததுதான் அரசியல் என்ற முடிவுக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். புதிய நேர்மையான தலைவர்கள், அதிகாரிகள், படித்தவர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள், சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் எவராவது இந்தச் சீரழிவுகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க முன்வரமாட்டார்களா என்று ஏங்கித் தவித்துக்கிடக்கிறார்கள். ஆனால், தேர்தல்கள் மூலம் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையைத் தவிர, வேறு மாற்றுகள் எதுவும் இருக்கிறதா என்பது தெரியாமல் விழித்திருக்கிறார்கள். 

தேர்தல் முறையால் உருவாகும் பிரதிநிதித்துவ ஆட்சிமுறை ஜனநாயகமும் அல்ல, மக்களாட்சியும் அல்ல, புதிய மேட்டுக்குடியினரின் ஆட்சிமுறைதான் என்பதை வரலாற்றிலிருந்து சுருக்கமான எடுத்துக்காட்டுகளோடு இக்குறுந்தொடர் விளக்க முயற்சி செய்திருக்கிறது. தமிழக வரலாற்றில் சோழர் காலத்தில், குலுக்கல் முறையும் சுழற்சி முறையும் இணைந்த குடவோலை முறை என்று அழைக்கப்பட்ட ஆட்சிமுறையே உண்மையான ஜனநாயகம் - மக்களாட்சி என்பதையும் இத்தொடரில் விளக்க முயற்சிசெய்யப்பட்டுள்ளது. அத்தகைய ஆட்சிமுறை 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஏதென்ஸ் நகரத்தில் எவ்வாறு சிறப்புடன் செறிவாகச் செயல்பட்டது என்பதும் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. 

அத்தகைய ஆட்சிமுறையைத் தற்காலத்தைய நிலைமைகளுக்கு ஏற்ப மீண்டும் உருவாக்க முடியுமா? நிலவும் ஆட்சிமுறையை அகற்றுவதற்குப் பெரும் பிரயத்தனங்கள் எதையும் செய்யாமல், அவற்றுக்கு அருகிலேயே - அக்கம்பக்கமாக மக்களே நேரடியாக ஆட்சியில் பங்கேற்க வழிவகை செய்யும் புதிய நிறுவனங்களை உருவாக்க முடியுமா. அத்தகைய நிறுவனங்கள் எவ்வகையில் இருக்கும்? அவற்றில் மக்களைப் பங்குபெறச் செய்வது எப்படி. அவற்றின் பணிகள் எவ்வாறு இருக்கும்? இவ்வாறான கேள்விகள் பலவும் எழுவது இயல்பே. 

தேர்தல்

இக்கேள்விகளுக்குத் தீர்மானகரமான விடைகள் இன்னும் உருவாகவில்லை. என்றாலும், பல நாடுகளில் பலவிதமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் அனுபவங்களைத் தொகுத்துக்கொண்டு, மேலும் செறிவான பல புதிய மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில், மிகச் சிறந்ததும், நடைமுறையில் செயல்படுத்த சற்று எளிமையானதுமான ஒரு மாதிரியை அறிமுகம் செய்வதோடு இக்குறுந்தொடர் நிறைவுபெறுகிறது. இந்த மாதிரியை, சிறிய அளவுகளில் - கல்லூரி மாணவர் மன்றங்கள், தொழிற்சங்கங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், கிராம நிர்வாகச் சபைகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், குடியிருப்புப் பகுதிகள் போன்றவற்றில் முதற்கட்டமாகப் பரிசோதனை செய்து பார்க்கலாம். அனுபவங்களைச் சேகரித்துக்கொண்டு, படிப்படியாகப் பரந்த அளவுகளில் முன்னெடுக்க முயற்சி செய்யலாம். பல் அடுக்கு குடவோலை முறை என்று இதை அழைக்கலாம்.  

முதலாவதாக, இவ்வாறு உருவாக்கப்படும் அமைப்புகளின் அடிப்படைப் பண்புகள், நிபந்தனைகள், தேர்ந்தெடுக்கும் முறைகள் ஆகியவற்றைப் பார்த்துவிடுவது நலம். 

இந்த அமைப்புகள் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கானவை அல்ல. சாதனை புரிய வேண்டும், புகழ் பெற வேண்டும் என்ற விருப்பம் உள்ள துடிப்பானவர்களுக்கானதும் அல்ல. பல்துறை சார்ந்த வல்லுநர்களுக்கானதோ, அறிவுத்துறையினருக்கானதோ, தீவிர அரசியல் களப்பணியாளர்களுக்கானதோ அல்ல. 

சாதாரண மக்களுக்கானது. எளிய மக்கள் தமது பிரச்னைகளைத் தாமே முன்வந்து தீர்த்துக்கொள்வதற்கான அரசியல் - பொது நிர்வாகக் கட்டுமானங்களை உருவாக்குவதே இவற்றின் நோக்கம். அந்நோக்கில் முடிவுகளை எடுக்கவும் அவற்றைச் செயல்படுத்துவதற்குமான வழிமுறைகளை உருவாக்குவது. இவற்றில் வல்லுநர்கள், அறிவுத்துறையினர், தீவிர அரசியல் களப்பணியாளர்களின் பாத்திரம் தமது துறை சார்ந்த நுட்பமான அறிவு, அனுபவம், திறன்கள் ஆகியவற்றைச் சாதாரண மக்களுடன் பலாபலன்களை எதிர்பாராமல் பகிர்ந்துகொள்வது மட்டுமே. இறுதி முடிவுகள் எதுவானாலும் அவற்றை எடுக்கும் அதிகாரம் சாதாரணர்களுக்கு மட்டுமே உரியது.

இந்த அமைப்புகள் ஏற்கெனவே இருக்கும் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்புகளுக்கு உடனடியான மாற்றுகள் அல்ல. நிலவும் அமைப்புகளால் பலன் பெறும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இவற்றை உடனே அங்கீகரிக்கப்போவதில்லை. ஒருவேளை அங்கீகரிக்க முன்வந்தால், அவற்றைத் தம் செல்வாக்குக்கு உட்பட்ட அமைப்புகளாக மாற்றும் முயற்சியில் தீவிரம் காட்டுவார்கள். ஆகையால், இவ்வமைப்புகளை நிலவும் அமைப்புகளுக்கு எதிரானவையாக நிறுத்திக்காட்டுவதையும் தவிர்க்க வேண்டும். அவற்றுக்குக் கீழ்ப்பட்டவையாக மாறிவிடாமலும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். நிலவும் அதிகார அமைப்புகளுக்கு இணையாக - அக்கம்பக்கமாக (parallel) இயங்கும் அமைப்புகளாகவே இவை தொடக்கத்தில் செயல்பட முடியும்.  
இவ்வமைப்புகள் அனைத்தும் குடவோலை முறையை ஒத்த குலுக்கல் முறையிலேயே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கருத்தொருமிப்பை எட்டுவதற்காகவும் முடிவுகளை எடுப்பதற்காகவும் தேவைகளுக்கேற்ப ரகசிய வாக்கெடுப்பு, வெளிப்படையான வாக்கெடுப்பு ஆகிய இரண்டு முறைகளையும் கையாளலாம். குலுக்கல் முறையோடு சுழற்சி முறையும் இணைந்திருப்பது கட்டாயம். 

பாகுபாடுகள் நிறைந்துள்ள நமது சமூகத்தில், ஒடுக்கப்பட்ட பிரிவினரான தலித்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளிகள், இன்ன பிறருக்கு உரிய பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில் தேர்வு செய்யப்படுவது கட்டாயமாக இருக்க வேண்டும். மொத்த உறுப்பினர்களில் 50 விழுக்காடு பெண்களாக இருப்பதையும் கட்டாயம் உறுதிசெய்துகொள்ள வேண்டும். 

பொது நிர்வாகத்துக்கு வாக்காளர் பட்டியல், தொழிற்சங்கம் போன்ற குறிப்பான நிறுவனங்களுக்கு உறுப்பினர்/பதிவுப் பெயர் பட்டியல் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, சீர்வாய்ப்பு தேர்வு முறையில் (random selection process) நபர்களைத் தேர்வு செய்வதிலிருந்து தொடங்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புகளின் பணிச்சுமைகளுக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்படும் எளியோர்க்கு ஊதியம் வழங்குவது சாலச் சிறந்தது. அவர்களது தனிப்பட்ட வாழ்வுக்கான வருமானத்தை ஈடுசெய்யும் வகையில் அத்தகைய ஊதியங்கள் இருப்பது நல்லது.  

இந்த அடிப்படைகளை மனதில் கொண்டு இனி விரித்துச் சொல்லப்படும் `பல் அடுக்கு குடவோலை முறை’ தமிழகம் என்ற பரந்த அளவில் செயல்படத் தேவையான உறுப்பினர் எண்ணிக்கையை மனதில் கொண்டு விவரிக்கப்பட்டுள்ளது. கிராம அளவிலான, குடியிருப்புகள் அளவிலான, பிற சிறிய அளவிலான அமைப்புகளுக்கு அவற்றுக்கே உரிய வகையில் உறுப்பினர் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளலாம். சூழல்கள், நிறுவனங்களின் செயல்பாட்டு எல்லைகளுக்கு ஏற்ப ஒரு சில அமைப்புகள் அவசியமில்லாமலும் போகலாம். 

நிகழ்ச்சி நிரல் தயாரிப்பு மன்றம்

தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள், தேவைகளின் பொருட்டு உருவாக்கப்பட வேண்டிய திட்டங்கள், அவை குறித்து இயற்றப்பட வேண்டிய சட்டங்கள் அல்லது தீர்மானங்கள் குறித்த பட்டியலை நிகழ்ச்சி நிரலாகத் தயாரிக்கும் மன்றம். 150 - 400 உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும். தேவைக்கேற்ப உபகுழுக்கள் அமைத்து செயல்படலாம். செயல்படுவதற்குத் தாமாக முன்வரும் குடிமக்களிலிருந்து குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட வேண்டும். செயல்படும் காலம் 3 வருடங்கள். ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் மூன்றில் ஒரு பகுதியினரின் பொறுப்புக் காலத்தை முடித்து புதியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இம்மன்றத்துக்கு ஒருமுறை தேர்வு செய்யப்பட்டவர் மீண்டும் தேர்வு செய்யப்படக் கூடாது. முழுநேரப் பணி. ஊதியம் வழங்கப்பட வேண்டும். 
இம்மன்றம் தயாரிக்கும் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்ட அம்சம் சேர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்த விரும்புவோர், குறிப்பிட்ட எண்ணிக்கையில் கையெழுத்துகள் சேகரித்து மனுக்களைச் சமர்ப்பிப்பதற்கான சாத்தியத்தையும் அனுமதிக்கலாம். 
நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பது மட்டுமே இம்மன்றத்தின் பணி. அவற்றை நிறைவேற்றவோ, நிறைவேற்றும்படி கட்டாயப்படுத்தவோ இம்மன்றத்துக்கு அதிகாரம் இல்லை. 

துறைசார் குழுக்கள்

நிகழ்ச்சி நிரல் மன்றம் தயாரித்து அனுப்பும் பிரச்னைகளைப் பரிசீலித்து அவற்றுக்குச் சட்ட முன்வரைவு வடிவம் கொடுக்கும் குழுக்கள். ஒவ்வொரு துறை சார்ந்த பிரச்னைக்கும் தனிக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். தேவைக்கேற்ப குழுக்களை அமைத்துக்கொள்ளலாம். தமது துறை சார்ந்த குழுக்களில் செயல்பட விரும்புவோர் முன்வரலாம். ஒவ்வொரு குழுவிலும் 12 உறுப்பினர்கள் அவசியம். தாமாக முன்வருவோரிலிருந்து குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட வேண்டும். தேவைக்கேற்ப இக்குழுக்கள் அடிக்கடி கூடி விவாதித்துக் கொள்ளலாம். கால வரம்பை நிர்ணயித்து, குறித்த காலத்துக்குள் தமது பணியை முடிக்க வேண்டும். துறை வல்லுநர்கள், குறிப்பிட்ட பிரச்னை சார்ந்து செயல்படும் களப்பணியாளர்களைக் கொண்டதாக இருக்கலாம். சட்ட முன்வரைவைச் சமர்ப்பிப்பதோடு இக்குழுக்களின் பதவிக்காலம் நிறைவுபெற்றுவிடும். ஊதியம் வழங்க வேண்டிய அவசியமில்லை. இம்மன்றத்துக்கு அதிகாரம் எதுவும் இல்லை.

பரிசீலனைக் குழுக்கள்

துறைசார் குழுக்கள் சமர்ப்பிக்கும் சட்ட முன்வரைவுகளைப் பரிசீலித்து அவற்றுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் குழுக்கள். ஒவ்வொரு துறைசார்ந்த பிரச்னைக்கும் தனித் தனிக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 150. தாமாக முன்வருவோரிலிருந்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். துறைசார் குழுக்களைப் போன்று, இவர்கள் தமது விருப்பம் சார்ந்து குழுக்களைத் தேர்வுசெய்ய அனுமதி இல்லை. செயல்படும் காலம் 3 ஆண்டுகள். ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் மூன்றில் ஒரு பகுதியினரின் பொறுப்புக் காலத்தை முடித்து புதியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இம்மன்றத்துக்கு ஒருமுறை தேர்வு செய்யப்பட்டவர் மீண்டும் தேர்வு செய்யப்படக் கூடாது. முழுநேரப் பணி. ஊதியம் வழங்கப்பட வேண்டும். 

குறித்த சட்ட முன்வரைவு குறித்து பொதுமக்களின் கருத்துக்கேட்பு கூட்டங்களைக் கூட்டி கருத்துகளைக் கேட்டறிதல், துறைசார் வல்லுநர்களின் கருத்துகளைக் கேட்டறிதல், பிரச்னை குறித்து கள ஆய்வுகளும், கல்விசார் ஆய்வுகளும் மேற்கொள்ளல், தேவையெனில் அவற்றுக்கு உதவியாளர்கள், பணியாளர்களை நியமித்துக்கொள்ளல், சேகரிக்கப்பட்ட கருத்துகள், கள ஆய்வுகள், கல்வி ஆய்வுகளைக் கொண்டு சட்டமுன்வரைவில் திருத்தங்களோ புதிய அம்சங்களோ சேர்த்தல், உறுப்பினர்களோடு கலந்து விவாதித்தல் ஆகியவற்றின் இறுதியில் சட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுத்தல் ஆகியவையே இக்குழுக்களின் பணிகள். 

சட்ட முன்வரைவுகளுக்கு இறுதி வடிவம் மட்டுமே தர இயலும். சட்டம் இயற்றும் அதிகாரம் இல்லை. 

கொள்கை முடிவெடுக்கும் சான்றாளர் (Jury) குழு

பரிசீலனைக் குழுக்கள் சமர்ப்பிக்கும் சட்டத்தின் இறுதி வடிவின் மீது ரகசிய வாக்கெடுப்பின் மூலம் சட்டத்தை நிறைவேற்றுவது குறித்து முடிவெடுக்கும் குழு. ஒவ்வொரு சட்டத்தை இறுதி செய்வதற்கும் ஒரு தனிக் குழு கூட்டப்பட வேண்டும். அனைத்து குடிமக்களில் இருந்தும் 400 உறுப்பினர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட வேண்டும். முன்மொழியப்பட்டுள்ள சட்டம் குறித்து பல்வேறு தரப்பினரின் வாதப் பிரதிவாதங்களைக் கூட்டப்படும் பொது சபை அமர்வில் கேட்டு, ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தீர்ப்பளிப்பதே இக்குழுவின் பணி. விவாதங்களில் ஈடுபடுவதோ, தமக்குள் கலந்தாலோசிப்பதோ கூடாது. பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் சட்டம் ஏற்கப்படும் அல்லது நிராகரிக்கப்படும். சட்டத்தின் தன்மையைப் பொறுத்து இக்குழுவின் பணிக்காலம், ஒருநாளாகவோ சில நாள்களாகவோ இருக்கலாம். பயணப்படி, பிற படிகள் உட்பட குறித்த நாள்களுக்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும். 

விதிகள் உருவாக்கும் மன்றம்

அனைத்து மன்றங்கள், குழுக்களுக்குமான விதிமுறைகள், குலுக்கல் முறை எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதற்கான விதிகள், துறை வல்லுநர்களின் கருத்துகளை அறிவதற்கான வழிமுறைகள், விவாத நெறிமுறைகள், குறைந்தபட்ச உறுப்பினர்/வாக்கு எண்ணிக்கை போன்றவற்றை வடிவமைப்பதற்கான மன்றம். பிற மன்றங்கள், குழுக்களில் செயல்பட்ட அனுபவம் கொண்டவர்களிலிருந்து குலுக்கல் முறையில் இதற்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவது நலம். உறுப்பினர் எண்ணிக்கை 50. செயல்படும் காலம் 3 வருடங்கள். ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் மூன்றில் ஒரு பகுதியினரின் பொறுப்புக் காலத்தை முடித்து புதியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இம்மன்றத்துக்கு ஒருமுறை தேர்வு செய்யப்பட்டவர் மீண்டும் தேர்வு செய்யப்படக் கூடாது. முழுநேரப் பணி. ஊதியம் வழங்கப்பட வேண்டும். 

மேற்பார்வை மன்றம்

அனைத்து மன்றங்கள், குழுக்களின் உறுப்பினர்கள், பரிந்துரை வழங்கிய துறை வல்லுநர்கள், பிற உதவியாளர்கள், பணியாளர்கள் ஆகியோரின் பணிகள் அனைத்தும் நியாயமாகவும் நேர்மையாகவும் செய்யப்பட்டனவா என்பதையும், அவர்கள் குறித்த குற்றச்சாட்டுகள் எழுமானால் அவற்றை ஆராய்ந்து முடிவெடுக்கும் குழு. உறுப்பினர் எண்ணிக்கை 20. தாமாக முன்வருவோரில் இருந்து குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட வேண்டும். செயல்படும் காலம் 3 வருடங்கள். ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் மூன்றில் ஒரு பகுதியினரின் பொறுப்புக் காலத்தை முடித்து புதியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இம்மன்றத்துக்கு ஒருமுறை தேர்வு செய்யப்பட்டவர் மீண்டும் தேர்வு செய்யப்படக் கூடாது. முழுநேரப் பணி. ஊதியம் வழங்கப்பட வேண்டும். 

இவ்வாறான பல் அடுக்கு குடவோலை முறையிலான அமைப்பு முறை, அதிகாரம் ஏதாவதொரு படிநிலையில் குவிந்துவிடாமல், ஒன்றை ஒன்று சரிபார்த்து சீர் செய்யும் (checks and balances) தன்மை கொண்டிருப்பதை மேலே விவரித்திருப்பதிலிருந்து உணரலாம். வெளிப்படைத் தன்மையும், பல தரப்பினரின் பங்களிப்பும், சாதாரண மக்கள் அனைவரது பங்கேற்பையும் படிப்படியாக உறுதி செய்வதாக இருப்பதையும், இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் மக்களுடையதாகவே இருப்பதையும் உணரலாம். பரந்த அளவில் செயல்படுவதற்கு ஏற்றதாகவும், உள்ளூர் அளவிலும் குறிப்பான அமைப்புகளுக்கு ஏற்பவும் இவற்றை வடிவமைத்துக்கொள்வதும் எளிதானது. 

இவ்வமைப்பு முறையின் செயல்பாடுகள் அதிகரிப்பதைப் பொறுத்தும், மக்கள் இவற்றின் பால் ஆர்வம் செலுத்தி, பங்கேற்க முன்வருவதைப் பொறுத்தும், இவற்றின் செயல்பாடுகள் நிலவும் அதிகார அமைப்பின் மீது அழுத்தங்கள் செலுத்தலாம். படிப்படியாக இவற்றின் செல்வாக்கு கூடுவதும், இவற்றின் குரல்களுக்கு நிலவும் ஆட்சியமைப்பும் அதிகார வர்க்கமும் செவிமடுக்க வேண்டிய நிர்பந்தங்கள் உருவாகலாம். அதற்கான சாத்தியங்கள் உண்டு.

பொது வாழ்வில் நேர்மை, அரசியலில் தூய்மை, மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வுகளைக் காணும் கனவு கொண்ட இளம் தலைமுறையினர் இப்பரிசோதனையைச் சிறிய அளவில் மேற்கொண்டு, தாம் பெறும் அனுபவங்களிலிருந்து மேலும் மெருகேற்றலாம். 

முற்றும்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்