``அன்று, தம்பிதுரைக்கு சீட் கொடுத்ததே ராஜிவ் காந்திதான்!'' - விளக்கம் தரும் கரூர் தொகுதி காங்கிரஸார்! | Karur constituency Congress cadres explains how Thambidurai got the seat in the past

வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (08/04/2019)

கடைசி தொடர்பு:12:45 (08/04/2019)

``அன்று, தம்பிதுரைக்கு சீட் கொடுத்ததே ராஜிவ் காந்திதான்!'' - விளக்கம் தரும் கரூர் தொகுதி காங்கிரஸார்!

"கரூர் தொகுதியை வெல்லப்போவது மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கையால் சீட் பெற்ற தம்பிதுரையா... இல்லை, தற்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் சீட் பெற்ற ஜோதிமணியா?"

``அன்று, தம்பிதுரைக்கு சீட் கொடுத்ததே ராஜிவ் காந்திதான்!'' - விளக்கம் தரும் கரூர் தொகுதி காங்கிரஸார்!

 "கரூர் தொகுதியை வெல்லப்போவது மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கையால் சீட் பெற்ற தம்பிதுரையா, தற்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் சீட் பெற்ற ஜோதிமணியா?" - இதுதான் கரூர் நாடாளுமன்றத் தொகுதி முழுக்க ஒலிக்கும் குரலாக இருக்கிறது. 

"அது சரி... ஜோதிமணி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அதனால், அவருக்கு ராகுல் காந்தி சீட் கொடுத்திருக்கலாம். ஆனால், தம்பிதுரை அ.தி.மு.க. வேட்பாளர். அவருக்கு எப்படி ராஜீவ் காந்தி சீட் வாங்கித் தர முடியும்? அதுவும் தவிர, இப்போது ராஜீவ் காந்திதான் உயிருடனே இல்லையே" என்றுதானே உங்கள் மூளைக்குள் குழப்பம் சூழ்கிறது. பொறுங்கள், அதைப்பற்றி முழுதாகத் தெரிந்துகொள்வோம்.

கரூர் தொகுதி வேட்பாளர் தம்பிதுரை

இதுகுறித்து, கரூர் தொகுதி காங்கிரஸ் முக்கியப் புள்ளிகள் சிலரிடம் பேசினோம். "கரூர் தொகுதியைப் பொறுத்தமட்டில் தம்பிதுரைக்கும் ஜோதிமணிக்கும் ஒரு வகையில் சீட் பெற்றதில் ஒரு சுவாரஸ்ய ஒற்றுமை இருக்கிறது. கரூர் அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரை ஆறாவது முறையாக இப்போது கரூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராகி இருக்கிறார். இதுவரை நான்கு முறை வெற்றிபெற்றிருக்கிறார். பொருளாதாரத்தில் எம்.ஏ, எம்.பில், பிஹெச்.டி வரை படித்தவர். 1980-ம் ஆண்டு வாக்கில் வேலூர் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியக் கல்லூரியில் பேராசிரியராக தம்பிதுரை வேலை பார்த்தார். அ.தி.மு.க-வை ஆரம்பித்த மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், 1984-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, தர்மபுரி தொகுதிக்கு படித்த வேட்பாளர் ஒருவரைத் தேடி இருக்கிறார். அப்போது, அ.தி.மு.க.-வினரால் எம்.ஜி.ஆர். முன்பு கொண்டுவந்து நிறுத்தப்பட்டவர்தான் தம்பிதுரை. அந்தத் தேர்தலில் ஜெயித்து, அப்போதைய ராஜீவ் காந்தியின் மத்திய ஆட்சியில் துணை சபாநாயகராக ஆக்கப்பட்டார்.  தம்பிதுரை

தம்பிதுரையின் பேச்சும் செயல்பாடுகளும் ராஜீவ் காந்திக்குப் பிடித்துப்போக, அவரை நண்பராக ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், 1989-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தனது அரசியல் எதிரி கே.பி.முனுசாமியின் உள்ளடியால் தம்பிதுரைக்கு சீட் கிடைக்கவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் எவ்வளவோ முயன்றும், அவருக்கு சீட் கிடைக்கலை. அப்போது, இதைக் கேள்விப்பட்ட ராஜீவ் காந்தி ஜெயலலிதாவிடம் தம்பிதுரைக்கு சீட் தரும்படி பேசினார். அதற்கு ஜெயலலிதா, 'எல்லாத் தொகுதிகளிலும் அ.தி.மு.க வேட்பாளர்களை இறுதி செய்தாகிவிட்டது. தற்போது ஒன்றும் செய்ய முடியாது' எனச் சொல்லியிருக்கிறார். உடனே, ராஜீவ் காந்தி அ.தி.மு.க. கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கரூர் நாடாளுமன்றத் தொகுதிச் சீட்டை தம்பிதுரைக்காக விட்டுக்கொடுப்பதாக அறிவித்து, அவரை நெகிழவைத்தார். அப்படி சீட் கிடைத்து, கரூரில் முதன்முறையாக தம்பிதுரை வென்றார். அதே வரலாறுதான், இப்போது ராகுல் காந்தி மூலமாகக் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணிக்கும் ஏற்பட்டிருக்கிறது.

ஜோதிமணிஇப்போதைய நாடாளுமன்றத் தேர்தல் தேதி, சமீபத்தில் அறிவிக்கப்பட்டவுடன், தி.மு.க. காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைமை, முதலில் கரூரை எங்கள் கட்சிக்குக் கேட்கவில்லை. திண்டுக்கல் தொகுதியைத்தான் கேட்டார்கள். ராகுல் காந்திக்கும் அதே பட்டியலைத்தான் அனுப்பினார்கள். ஆனால், ராகுல் காந்தி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம், 'ஏன் கரூரை காங்கிரஸுக்குக் கேட்கலை'னு கேட்டிருக்கிறார், 'இல்லை சார், கரூரைவிட நமக்கு திண்டுக்கல் பெட்டர்'னு சொல்லி இருக்கிறார் கே.எஸ்.அழகிரி. ஆனால், ராகுல் காந்தி, 'கரூரைப் பட்டியலில் சேருங்கள். ஜோதிமணிக்கு கரூர் தொகுதியை ஒதுக்க வேண்டும்' என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். அதற்கு அழகிரி, 'ஜோதிமணி சாதாரண விவசாயப் பின்னணியைக் கொண்ட பெண். செலவு செய்ய வழியிருக்காது' என்று சொல்ல, 'அப்ப ஏழையா இருந்தா தேர்தல்ல போட்டியிட முடியாது'னு சொல்ல வர்றீங்களா'னு அழகிரியை மடக்கியிருக்கிறார். 

அதோடு, 'ஸ்டாலினிடம் பேசி, கரூரைக் காங்கிரஸுக்கு ஒதுக்கிவிடுங்கள். ஜோதிமணிதான் வேட்பாளர்'னு உறுதியா சொல்லியிருக்கிறார். இந்தத் தகவலை எல்லாம் மணப்பாறையில் நடைபெற்ற ஜோதிமணிக்கு வாக்குகள் சேகரிக்கும் பிரசார கூட்டத்திலேயே கே.எஸ்.அழகிரி ஓப்பனாகப் பேசி, காங்கிரஸாரை அசர வைத்திருக்கிறார். அதோடு, 'நான் மாநிலத் தலைவரான பிறகுதான் என்னையே ராகுல் காந்திக்குத் தெரியும். ஆனால், ஜோதிமணியை ராகுல் காந்திக்கு 10 வருடங்களுக்கு முன்பிருந்தே நன்றாகத் தெரியும்'னு பேசியிருக்கிறார். ஆனால், இந்த விஷயங்கள் தெரியாமல், கரூர் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதும் ஜோதிமணியின் எதிர்க்கோஷ்டிகள், 'ஜோதிமணிக்குக் கரூரில் சீட் தரக்கூடாது' என்று கலகம் செய்தார்கள்; அவருக்கு எதிராகத் தீர்மானம் போட்டார்கள்; இன்னும் சில நிர்வாகிகள், 'ஜோதிமணிதான் வேட்பாளர் என்பதைத் தெரிந்துகொண்டு கோபத்தோடு அ.தி.மு.க.-வுக்குத் தாவிவிட்டார்கள். 

இது ஒருபுறமிருக்க... மறுபுறம், இந்த விஷயங்களை எல்லாம் அறிந்த ஜோதிமணி தரப்பு, கூலாக வேட்பாளராக ஜோதிமணியை அறிவிப்பதற்கு முன்பே, சமூகவலைதளங்களில், 'வேட்பாளர் ஜோதிமணியை ஆதரிப்பீர்' என்று பதிவுகள் போடத்தொடங்கிவிட்டார்கள்; சுவர் விளம்பரம் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். ஜோதிமணியோ, கரூர் தொகுதி முழுக்க உள்ள கட்சி நிர்வாகிகளையும் தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளையும் மரியாதை நிமித்தமாகச் சந்திக்க ஆரம்பித்துவிட்டார். இப்படி, கரூர் தொகுதி 1989-ல் காங்கிரஸுக்குப் போய், ராஜீவ் காந்தியால் தம்பிதுரைக்குப் பெற்றுத் தரப்பட்டது. இப்போது, தி.மு.க-வுக்குப் போக இருந்த கரூர் தொகுதி ராகுல் காந்தியால் ஜோதிமணிக்கு வாங்கித் தரப்பட்டிருக்கிறது. அதனால்தான், அப்பா ராஜீவ் காந்தியால் சீட் பெற்ற தம்பிதுரை, இப்போது ஜெயிப்பாரா இல்லை அவரின் மகன் ராகுல் காந்தியால் இந்த முறை சீட் பெற்ற ஜோதிமணி ஜெயிப்பாரா என்கிற செய்தி தொகுதி முழுக்க பரபரக்கிறது" என்றார்கள்.

தம்பிதுரையா, ஜோதிமணியா..? வெற்றிபெற வைப்பது மக்களின் கையில்தான் இருக்கிறது. 


டிரெண்டிங் @ விகடன்