Published:Updated:

``பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என அறிவிப்பாரா?" - குமரியில் ஸ்டாலினுக்கு தினகரன் சவால்!

``பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என அறிவிப்பாரா?" - குமரியில் ஸ்டாலினுக்கு தினகரன் சவால்!
``பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என அறிவிப்பாரா?" - குமரியில் ஸ்டாலினுக்கு தினகரன் சவால்!

``தமிழகத்தைப் புறக்கணித்த மோடியை ஆதரிக்க மாட்டோம். பா.ஜ.க-வுடன் கூட்டணி வாழ்நாளில் கிடையாது  என நாங்கள் கூறுகிறோம். இதை ஸ்டாலினால் கூற முடியுமா” என அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகன கேள்வி எழுப்பினார்.

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் இன்ஜினீயர் லட்சுமணனை ஆதரித்து, நாகர்கோவிலில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசுகையில், ``நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 18 அன்று நடக்க இருக்கிறது. அத்துடன், தமிழகத்தில் மினி சட்டமன்றத் தேர்தலும் நடக்கிறது. மோடியை டாடி எனச் சொல்கின்ற அளவிற்கு எடப்பாடி பழனிசாமியும், பன்னீர் செல்வமும் கூட்டணி வைத்துள்ளார்கள். மற்றொரு கூட்டணியான மதசார்பற்ற கூட்டணி, ராகுல் காந்தியைப் பிரதமர் ஆக்குவோம் என்கிறது. அந்த கூட்டணிக் கட்சியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியே அதை ஏற்றுக்கொள்ளவில்லை. கேரளத்தில் கம்யூனிஸ்டை எதுர்த்து ராகுல் போட்டியிடுகிறார். அவரை தோற்கடிக்காமல் விடமாட்டேன் என்று கம்யூனிஸ்ட் முதல்வர் பினராயி விஜயன் கூறுகிறார்.

காங்கிரஸ் கட்சியே ராகுலைப் பிரதமராக அறிவித்ததாகத் தெரியவில்லை. 1996 -ம் ஆண்டு முதல் 2014 வரை மத்திய ஆட்சியில் தி.மு.க இருந்தது. மத்தியில் வாஜ்பாய் வெற்றிபெற்றபோது காங்கிரஸ் கூட்டணியில் வெற்றிபெற்ற தி.மு.க பல்டியடித்து, பா.ஜ.க-விற்கு ஆதரவாக வாக்களித்தார்கள். அடுத்து, காங்கிரஸ் கூட்டணியில் அமைச்சரவையில் இருந்தார்கள். 2011 தேர்தலில் தி.மு.க எதிர்க்கட்சியாகக் கூட வரமுடியவில்லை. ஆர்.கே.நகரில் டெப்பாசிட் இழந்தது. எதையாவது செய்து ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிட வேண்டும் என தி.மு.க நினைக்கிறது. மத்தியில் முக்கிய துறைகளை வைத்திருந்த தி.மு.க, அப்போது சொந்த மக்களை மட்டுமே பார்த்துக்கொண்டது. சிறுபான்மை மக்களின் பாதுகாவலர்கள் எனக் கூறியவர்களை சிறுபான்மையினர் புறக்கணித்ததால், ஆர்.கே.நகரில் தி.மு.க-விற்கு டெப்பாசிட் போனது.

தமிழகத்தைப் புறக்கணித்த மோடியை ஆதரிக்க மாட்டோம். பா.ஜ.க-வுடன் கூட்டணி வாழ்நாளில் கிடையாது  என நாங்கள் கூறுகிறோம். இதை ஸ்டாலினால் கூற முடியுமா. பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என ஸ்டாலின் அறிவிப்பாரா? தேசியக் கட்சிகளை நம்பி ஏமாற வேண்டாம். தமிழர்கள் தலைநிமிர, சிறுபான்மை மக்கள் நலனுக்காக, எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் அவர்களின் நலனில் அக்கறைகொண்டுள்ள கட்சி அ.ம.மு.க. நாங்கள் அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தியுள்ளோம். அ.ம.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் இந்தியப் பிரதமரைத் தேர்ந்தெடுக்கப்போகிறார்கள். உங்களை சிலர் குழப்புவார்கள் நீங்கள் குழம்ப வேண்டாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் பொறியாளர்களுக்கு வேலை வழங்குதல், ரப்பர் பூங்கா அமைத்தல், மீனவர்களை மீட்க ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும். பெட்டக துறைமுகத்தைத் தேர்தல் அறிக்கையிலேயே எதிர்க்கிறோம். வரவிடாமல் தடுக்க நாங்கள் போராடுவோம். சென்னை முதல் குமரி வரை அ.ம.மு.க கிளைகள் இல்லாத ஊர்களே இல்லை. எங்களுக்கு சின்னம் கொடுக்க மோடி அரசு இடைஞ்சல் கொடுத்தார்கள். நீதிமன்றம்மூலம் பரிசுப் பெட்டகம் பெற்றோம்.

நாங்கள் சமரசம் செய்துகொண்டால் எத்தனையோ நன்மைகள் கிடைத்திருக்கும். அம்மாவிற்கும் மக்களுக்கும்தான் நாங்கள் தலைவணங்குவோம் வேறு எந்த சக்திக்கும் தலை வணங்க மாட்டோம்.

2 கோடி பேருக்கு வேலை, 15 லட்சம் போடுவதாகச் சொன்னதை மோடி செய்தாரா... நீட் தேர்வு, விவசாயிகளை, தமிழகத்தைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் அம்மா அனுமதிக்கவில்லை. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் விதமாக எந்தத் திட்டமும் செயல்படுத்தவில்லை. கஜா, ஓகி சமயத்தில் மக்களை சந்திக்காத மோடி, இன்று ஓடி ஓடி வருகிறார். அம்மாவின் உண்மையான தொண்டர்கள் 95 சதவிகிதம்பேர் என்னிடம் உள்ளார்கள்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு