Published:Updated:

``ஐந்துக்கும் மேற்பட்ட கட்சிகளுக்குத் தாவியவர் செந்தில் பாலாஜி!" - ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு

``ஐந்துக்கும் மேற்பட்ட கட்சிகளுக்குத் தாவியவர் செந்தில் பாலாஜி!" - ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு
``ஐந்துக்கும் மேற்பட்ட கட்சிகளுக்குத் தாவியவர் செந்தில் பாலாஜி!" - ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு

``நேற்று ஒரு கட்சி, இன்று ஒரு கட்சி என்று இருக்கும் செந்தில் பாலாஜி, எங்களுக்கு ஒரு பொருட்டு இல்லை. ஐந்து முறைக்கு மேல் கட்சி மாறியவர்தான் செந்தில்பாலாஜி!" என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் மக்களவை பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதையொட்டி, அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் அனல்பறக்கும் தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரத்தில் குதித்திருக்கிறார்கள். வேட்பாளர்களுக்கு வாக்குகள் சேகரிக்க, கூட்டணிக் கட்சித் தலைவர்களும் தமிழகம் முழுக்க சூறாவளியாக பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார்கள். அந்த வகையில், கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மு.தம்பிதுரையை ஆதரித்து, அவருக்கு வாக்குகள் சேகரிக்க அ.தி.மு.க கூட்டணியில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் கரூருக்கு வருகைதந்தார். `நிச்சயம் தம்பிதுரை வெற்றிபெறுவார்' என்று பேட்டியளித்தார். 

கரூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன், கடந்த இரண்டு நாள்களாக கரூரில் தீவிர பிரசாரம் மேற்கொண்டுவருகிறார்.


 

இதனிடையே, கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜான் பாண்டியன், ``கரூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரும், அ.தி.மு.க-வின் முக்கியத் தலைவருமான தம்பிதுரை நிச்சயம் வெற்றிபெறுவார். நேற்று, கரூரில் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று, அவருக்காக வாக்கு சேகரிப்பை மேற்கொண்டேன். அவருக்கு, தொகுதி முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் தம்பிதுரை வெற்றிபெறப்போவது உறுதி என்பது புரிந்தது. கரூரில் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும். 


 

முன்னதாக, தி.மு.க கரூர் மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, ஜோதிமணி வெற்றிக்காக அதிரடியான தேர்தல் வியூகம் பண்ணிக்கொண்டிருப்பதாக சிலர் என்னிடம் சொன்னார்கள். அவர் ஒரு பச்சோந்தி. செல்லாக்காசு. நேற்று ஒரு கட்சி, இன்று ஒரு கட்சி என்று இருக்கும் செந்தில்பாலாஜி, எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. மக்கள் இவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். முதலில் தி.மு.க, அப்புறம் ம.தி.மு.க, பிறகு அ.தி.மு.க என்று மாறினார்.

அ.தி.மு.க-வில் இருந்தபோது, 'என் உயிருள்ளவரை அ.தி.மு.க-வை விட்டுப் போக மாட்டேன்'ன்னு பல மேடைகளில் பேசினார். ஆனால், அ.ம.மு.க-ங்கிற ஜாதிக்கட்சிக்குப் போனவர், அங்கும் தான் போணியாகவில்லை என்ற பயத்தில், இப்போது தி.மு.க-வுக்கு வந்துள்ளார். இப்படி ஐந்துக்கும் மேற்பட்ட கட்சிகளுக்குத் தாவியவர்தான் செந்தில் பாலாஜி. அவரால், தம்பிதுரை வெற்றியைத் துளியளவும் தடுக்கமுடியாது" என்று அதிரடியாக விமர்சித்துப் பேசினார்.