Published:Updated:

``தினகரன் 350, அ.தி.மு.க 300, தி.மு.க 200’’ - தேர்தல் கூட்டங்களுக்குச் செல்லும் பெண் ‘தொண்டர்களின்’ அனுபவம்

``தினகரன் 350, அ.தி.மு.க 300,  தி.மு.க 200’’ - தேர்தல் கூட்டங்களுக்குச் செல்லும் பெண் ‘தொண்டர்களின்’ அனுபவம்
``தினகரன் 350, அ.தி.மு.க 300, தி.மு.க 200’’ - தேர்தல் கூட்டங்களுக்குச் செல்லும் பெண் ‘தொண்டர்களின்’ அனுபவம்

அவங்க கோடி கோடியா சம்பாதிக்கிறாங்க. நமக்கு கொடுக்கிற காசெல்லாம் அவங்களுக்கு பல்லு குத்துற துரும்புக்குச் சமம்தானே. அதனால, கூச்சப்படாம வாங்கிக்கிறோம்

தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. ஒருபுறம் “இதோ, உங்கள் அபிமான வேட்பாளர் நம் கழகத்தின் காவலாளி உங்களைத் தேடி, உங்கள் இல்லங்களை நோக்கி கடலளவு தொண்டர்களோடு வந்துகொண்டிருக்கிறார். உங்கள் பொன்னான ஆதரவைத் தந்து நம் கட்சியை வெற்றி பெறச் செய்யுங்கள்” என்ற கோஷங்களோடு தொண்டர்கள் படைசூழ வாக்காளர்களைச் சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள் வேட்பாளர்கள்.

மறுபுறம் கட்சிக் கூட்டங்கள், மாநாடுகள் என ஆயிரம் ஆயிரம் மக்கள் கூட்டத்தினரைத் திரட்டி, எங்கள் கட்சி பெரிதா... உங்கள் கட்சி பெரிதா எனப் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள் கட்சித் தலைவர்கள். இந்தச் சூட்டோடு சூடாகக் கட்சிக் கூட்டங்களுக்கும் வேட்பாளர்களின் பிரசார ஊர்வலத்துக்கும் ஆள்களை அழைத்துச் செல்லும் பெண் கான்ட்ராக்டர்கள் சிலரைச் சந்தித்தோம். 

ஜெயலெட்சுமி

“நான் 36 வருஷமா கட்சிக்கூட்டங்களுக்கு ஆள்களை அழைச்சிட்டுப் போய்ட்டு இருக்கிறேன். எம்.ஜி.ஆர் இருக்கும்போது அவர் கூட்டம் நடத்தினா அவரோட முகத்தைப் பாக்குறதுக்காகவே அக்கம் பக்கத்தில் உள்ள பொம்பளைங்களை இழுத்துட்டுப் போனேன். அப்போலாம் யாருகிட்டயும் காசு வாங்கினதில்ல. அவரோட பேச்சுக்காகவும் முகத்தைப் பாக்குறதுக்காகவும் மட்டும்தான் கூட்டத்துக்குப் போனோம். அப்போ இருந்தே அக்கம் பக்கத்துல இருக்கிற ஆம்பளை பொம்பளைங்ககிட்டல்லாம் நான் நல்லா பேசுவேன். நாலு சனங்களோட பழக்கமும் உண்டாச்சு. எம்.ஜி.ஆருக்குப் பிறகு வந்த மத்தவங்கள்லாம் காசு கொடுத்து கூட்டத்தை வர வச்சாங்க. அந்தச் சமயத்துலதான் என்னைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு என்கிட்ட ஆள்களைக் கூட்டிட்டு வரச் சொன்னாங்க. அப்போ கொஞ்சம் காசு கிடைச்சது. அதை நான் மட்டுமே வச்சிக்காம கூட வந்தவங்க எல்லாருக்கும் சரியா பிரிச்சுக் கொடுத்தேன். அதுல இருந்து சனங்களுக்கும் எம்மேல நம்பிக்கை வந்துடுச்சு. 

அம்மா இருந்தப்போவே காசு கொடுத்து ஆட்களைத் திரட்ட ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா, நாங்க யாரும் அம்மா வர்ற கூட்டத்துக்கு மட்டும் காசு வேணாம்னு சொல்லிடுவோம். அவங்க வந்தா சும்மாவே ஆட்களை அனுப்பி வச்சிடுவேன். எம்.ஜி.ஆர் ஐயா கூட்டத்துக்குப் போற மக்களுக்கெல்லாம் வயிறார சாப்பாடு கிடைக்கும். அம்மா இருக்கும்போதும் அப்படிதான். சாப்பாடு பொட்டலங்களைக் கொடுத்து அனுப்பிடுவாங்க. ஆனா, இப்போ யாரும் அப்படிப் பண்றதில்ல. கூட்டம் முடியுற வரை நம்மளைத் தாங்குறாங்க. அதுக்கப்பறம் சாப்பாடுகூட வாங்கித்தராம கழட்டி விட்டுடுறாங்க. எம்.ஜி.ஆர் இறந்ததுக்கு அப்புறம் எங்களுக்கும் காசு வாங்குறது தப்பா தெரியல. ஏன்னா, கட்சிக்காரங்க கோடி கோடியா சம்பாதிக்கிறாங்க. நமக்கு கொடுக்கிற காசெல்லாம் அவங்களுக்கு பல்லு குத்துற துரும்புக்குச் சமம்தானே. அதனால, கூச்சப்படாம வாங்கிக்கிறோம். இப்போ எந்தக் கட்சியில இருந்து யார் கூப்பிட்டாலும் போயிடுவோம். தினமும் உழைச்சா 400 ரூபா கிடைக்கும். அதுவே ரெண்டு மூணு கூட்டத்துக்குப் போனா 600 ரூபா சம்பாதிச்சிடலாம். சனங்களும் என்னப்பா செய்யும். கொள்கை, நியாயம்னு பார்த்தா வயித்துப்பசிய யாரு தீர்ப்பா. அதனாலதான் இந்த எலெக்‌ஷன் நேரத்தை நாங்க யூஸ் பண்ணிக்கிறோம்” என்கிறார் ஜெயலெட்சுமி.

தேவி

“இங்கே யார்தான் ஒழுங்கா கட்சி நடத்துறான்னு புரியலையேப்பா. இப்போ முதல்வரா ஒருத்தர் இருக்காரே அவர் பேரு என்ன (யோசிக்கிறார்). மெய்யாலுமே எனக்கு யாரு ஆட்சி நடத்துறானே தெரியலைப்பா. அப்படி இருக்கும்போது யார் துட்டு கொடுத்தா என்ன... போயி கோஷம் போட்டுட்டு வந்துட வேண்டியதுதான். ஏன்னா, விக்கிற வெலவாசியில பணம்தான் மெயினு கண்ணு. தி.மு.க-காரங்க 200 கொடுத்தா ஸ்டாலின் வாழ்கனு கோஷம் போடுவோம். அ.தி.மு.க ஆளுங்க காசு கொடுத்தா ஸ்டாலின் ஒழிகனு கோஷம் போடுவோம். எங்களைப் பொறுத்தவரை ஒரு நாள் பொழப்பு ஓடுதான்னுதான் பாக்குறோம் அவ்வளவுதான். என்னைப் பொறுத்தவரை ஜெயலலிதா எனக்கு அம்மான்னா கலைஞர்தான் அப்பா. அவங்க ரெண்டு பேரும் இருந்த வரைக்கும் நான் கம்மியாதான் காசு வாங்கிட்டு இருந்தேன். இப்போ அவங்களே போயிட்டாங்க. அதான் கொஞ்சம் கூடுதலாவே அடிச்சு புடிச்சு காசு வாங்கிக்கிறோம். அதுமட்டுமல்ல கண்ணு, நாம ஏதாவது புதுசா கோஷம் கண்டு புடிச்சு சொன்னா அதுக்குத் தனியா 100 கொடுப்பாங்க. அப்படித்தான் ஒருமுறை எம் பையனுக்கு மிட்டாய் வாங்க கடைக்குப் போனேன். அங்கே வெளியில தொங்கிட்டு இருந்த லேஸ் பாக்கெட்ட பார்த்ததும் 'அஞ்சு ரூவா லேசு மோடி ஒரு லூசு'ன்னு நானே யோசிச்சு ஒரு டயலாக் சொன்னேன். உடனே எனக்கு 100 ரூவா கொடுத்தாங்க. அந்த மாதிரி யாருக்கு டயலாக் சொன்னாலும் காசு கிடைக்கும். இங்கே எல்லாமே காசுதான்ப்பா. ஒருமணி நேரம் தி.மு.க கூட்டத்துக்கு, அடுத்த ஒரு மணி நேரம் அ.தி.மு.க பிரசாரத்துக்கு, ராத்திரி தினகரன் கூட்டத்துக்குன்னு மாறி மாறி தலையைக் காட்டிட்டு ஓடிட வேண்டியதுதான் தம்பி” மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிட்டுச் சென்றார் தேவி. 

விஜயலெட்சுமி

“நான் வீட்டு வேலைக்குப் போயிட்டு இருக்கேன்யா. என்னால ஒரு கூட்டத்துக்கு 20 பேரை கூட்டிட்டுப் போக முடியும். ஒரு ஆளுக்கு 200-ல இருந்து 300 ரூவா வரை கொடுப்பாங்க. அ.தி.மு.க 300, தினகரன் 350, தி.மு.க-காரங்க 200-னு பிரியப்பட்டதைக் கொடுக்கிறாங்க. அதோட இப்போ சாப்பாட்டுக்கு வேற ஒவ்வொருத்தரும் தனியா 50 ரூவா கொடுத்துடுறாங்க. அதனால, யாரு எந்த நேரத்துல கூப்பிட்டாலும் ஆளுங்களை அழைச்சிட்டுப் போயிடுவோம். சின்னச் சின்ன கூட்டங்கள்ல இருந்து பெரிய பெரிய மாநாடுங்க வரை போயிருக்கேன். கூட்டத்துல முழக்கம் போடணும். வெயிலு மழைனு பாக்காம தலைவர் வந்து பேசும்போது கைதட்டணும். எந்தக் கட்சிக்காகப் போறோமோ அந்தக் கட்சியோட தலைவர் வந்து பேசி முடிக்கிற வரை உட்கார்ந்த இடத்திலேயே இருக்கணும். அதுக்கு முன்னாடி கிளம்பக் கூடாது. தலைவர் பேசினதுக்கு அப்பால கிளம்பிட்டாகூட ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. அதோட, இப்போல்லாம் யார் துட்டு கொடுத்தாலும் யோயிட வேண்டியதுதான். முகத்தைப் பார்த்து கூட்டத்துக்குப் போனதெல்லாம் அந்தக் காலம். இப்போலாம் அப்படி இருக்க முடியாது தம்பி” என்றவர் தொடர்ந்து, 

தம்பி நாங்க கட்சிக் கூட்டத்துக்கு மட்டும் போக மட்டோம். சர்ச்சுல கூட்டம் போட்டாகூட போயிடுவோம். நாளைக்கு கூட்டம்னா இன்னிக்கு சாயந்திரமே போன் போட்டு நாளைக்கு சர்ச்சுல கூட்டம் போடுறோம். 30, 40 பேரை கூட்டிட்டு வரணும். தலைக்கு இவ்வளவு ரூவா தருவாங்கன்னு சொல்லிடுவாங்க. அதுக்கு ஏத்த மாதிரி நாம ஆளுங்களை அழைச்சிட்டுப் போகணும். இப்படி கட்சிக் கூட்டம், மாநாடு, சர்ச்சுன்னு காசு வாங்கிட்டுப் போனாலும் நாங்க காசே வேணாம்னு சொல்லி உணர்வுபூர்வமா ஒரு போராட்டத்துக்குப் போயிருந்தோம் தம்பி. அதுதான் ஜல்லிக்கட்டுப் போராட்டம். அப்போ நாங்க நம்ம உரிமையை மீட்கணும்ங்கிற எண்ணத்துல போயிருந்தோம். சின்னச் சின்ன பசங்கள்லாம் ஒண்ணு சேந்து நடத்துற போராட்டம். அவங்களுக்கு நாம ஆதரவா இருக்கணும்னு சொல்லி ஒண்ணு திரண்டு போய் ஆதரவு கொடுத்தோம். அந்த உணர்வு எங்களுக்கு ரொம்பப் புடிச்சிருந்தது தம்பி” என்றவரின் குரலில் பெருமிதம் நிறைந்திருந்தது.  

அடுத்த கட்டுரைக்கு