Published:Updated:

``ஆட்சிக்கு வந்தபிறகு கேள்வி கேட்க மாட்டேன்; தண்டனை அளிப்பேன்!” குமரியில் ஸ்டாலின் பேச்சு

``ஆட்சிக்கு வந்தபிறகு கேள்வி கேட்க மாட்டேன்; தண்டனை அளிப்பேன்!” குமரியில் ஸ்டாலின் பேச்சு
``ஆட்சிக்கு வந்தபிறகு கேள்வி கேட்க மாட்டேன்; தண்டனை அளிப்பேன்!” குமரியில் ஸ்டாலின் பேச்சு

'ஆட்சிக்கு வந்த பிறகு கேள்வி கேட்க மாட்டேன்; தண்டனை தரக்கூடிய இடத்தில் இருந்து தண்டனை அளிப்பேன்' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசினார்.

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமாரை ஆதரித்து நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அதில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ``மத்தியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பாசிச ஆட்சிக்கு முற்றுபுள்ளி வைக்கும் தேர்தல் இது. சர்வாதிகாரியாக ஆட்சி நடத்தும் மோடியை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல். தேர்தலுக்காக மட்டும் வந்துபோகிறவர்கள் நாங்கள் அல்ல. ஆட்சியில் இருந்தாலும் இல்லாமல் இருந்தாலும் மக்களோடு மக்களாக இருக்கக்கூடியவர்கள் நாங்கள்.

குமரிக்கும் தி.மு.க-விற்கும் தொடர்பு உண்டு. முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இந்த மாவட்டம் இருந்தது. 1957-ல் இணைக்கப்பட்டது. அப்போது நடந்த போராட்டத்தை தி.மு.க ஆதரித்தது.  1954 சித்தூரில் நடந்த கூட்டத்தில், திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானத்தில் உள்ள தமிழ் மக்களின் கிளர்ச்சிக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் போடப்பட்டது. குமரி மாவட்டம் அமையும் முன்பே மக்களுக்காகப் போராடிய, வாதாடிய இயக்கம் தி.மு.க.

ஏற்கெனவே, ஆட்சி அதிகாரத்தில் பொறுப்பில் இருந்தபோது என்னென்ன பணிகள் செய்துள்ளோம் என நாங்கள் எடுத்துச் சொல்கிறோம்.  மத்தியில் ஐந்து ஆண்டுகள் ஆண்ட பா.ஜ.க, எட்டு ஆண்டுகளாக தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க என்ன செய்தோம் என்பதைக் கூறி வாக்கு கேட்க வேண்டும். ஆனால், சாதனைகளை எடுத்துச்சொல்ல அவர்களால் முடியவில்லை. அதனால், நம்மை தாக்கிப் பேசுகின்றார்கள். தனிப்பட்ட முறையில் கொச்சைப்படுத்தி விமர்சனம் செய்கிறார்கள். கடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், நான் பிரதமராக வந்தால் கன்னியாகுமரியை சுற்றுலா மாவட்டமாக அறிவிப்போம் என்ற மோடி, அதைச் செய்யவில்லை. தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் சுடப்பட மாட்டார்கள், சிறைபிடிக்கப்பட மாட்டார்கள் எனக்  கூறினார். ஆனால், எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. குஜராத் மீனவர்களுக்கும் பாகிஸ்தானுக்கும் பிரச்னையை தீர்க்க கண்காணிப்புக் குழு ஏற்படுத்தப்போகிறேன் என்றார், அமைக்கப்படவில்லை.

வசந்தகுமாரை எதிர்த்து நிற்கும் பொன்.ராதாகிருஷ்ணன் மோடியின் சிஷ்யர். அவர் வாக்குறுதிகளை அள்ளி வீசினார். 63 உறுதிமொழி கொடுத்திருக்கிறார். சுசீந்திரம் பாலம் தவிர வேறு எதையும் நிறைவேற்றவில்லை. பிரதமர் வாயால் வடை சுட்டார், பொன்.ராதாகிருஷ்ணன் வாயில் அடை சுட்டார்.

ஐந்தாறு நாள்களுக்கு முன்பு  காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஒன்றே ராகுல் காந்தி பிரதமராகும் தகுதிக்குச் சான்று. பா.ஜ.க வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், மக்களுக்குப் பயன்படும் எந்தத் திட்டமும் இல்லை. தி.மு.க தேர்தல் அறிக்கை ஹீரோ என்றால், ராகுல் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ. மோடி வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஜீரோ.


கொடநாட்டு கொலை விவகாரம், ஜெயலலிதா மரணம், பொள்ளாச்சி பாலியல் சம்பவம் ஆகிய மூன்று விஷயங்கள் குறித்த கேள்விகளை நான் கேட்டுவருகிறேன். நானும் ஒரு பெண்ணைப் பெற்றவன்தான். பெண்ணை பெற்றவர்களுக்குத்தான் பொள்ளாச்சி சம்பவத்தின் வலி தெரியும். ஆட்சிக்கு வந்தபிறகு கேள்வி கேட்க மாட்டேன்; தண்டனை தரக்கூடிய இடத்தில் இருந்து தண்டனை அளிப்பேன். 


ஓய்வுக்கே ஓய்வு கொடுத்த கலைஞர் மறைந்த நேரத்தில், அவருடைய உடலை அவரது விருப்பப்படி அடக்கம் செய்ய நாம் என்னென்ன கொடுமைகள் அனுபவித்தோம். கலைஞரின் மரணத்தில்கூட சித்திரவதை செய்த கூட்டம் எடப்பாடி அரசு. அண்ணா அருகில் இடம்தர மறுத்தது அரசு. தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்யநாதன் திட்டவட்டமாக மறுத்தார். நாம் ஆட்சிக்கு வந்தால், அவர்கள் அந்தப் பொறுப்பில் இருப்பார்கள். பழிவாங்க அல்ல, அவர்கள் உணர்வார்கள்.

கலைஞருக்கு இடம் கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. நீதிமன்றமும் தடுத்திருந்தால், உடலை எடுத்துக்கொண்டு எந்தத் தடை வந்தாலும் கடற்கரைக்குச் செல்ல வேண்டும் என நான் நினைத்திருந்தேன். எடப்பாடிக்கு பதிலடி கொடுக்க நாடாளுமன்றத்தில் நாற்பதுக்கு நாற்பது, சட்டசைபை இடைத்தேர்தலில் பதினெட்டுக்கு பதினெட்டு என வெற்றிபெற்று, அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்குவோம்" என்றார்.

பின் செல்ல