Published:Updated:

``கொள்கைக்கு செத்தால்தான் பெருமை என்றிருக்கிறார் பெரியார்!” - எதிர்ப்பு குறித்து கி. வீரமணி பேச்சு

``கொள்கைக்கு செத்தால்தான் பெருமை என்றிருக்கிறார் பெரியார்!” - எதிர்ப்பு குறித்து கி. வீரமணி பேச்சு
``கொள்கைக்கு செத்தால்தான் பெருமை என்றிருக்கிறார் பெரியார்!” - எதிர்ப்பு குறித்து கி. வீரமணி பேச்சு

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கே.சுப்பராயனை ஆதரித்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் நேற்று திருப்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர். திருப்பூர் கரட்டாங்காடு பகுதியில், நேற்று மாலை பொதுக்கூட்டம்  தொடங்குவதற்கு முன், வீரமணிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்த முயன்றனர். மேலும், வீரமணியின் காரை வழிமறித்து தாக்குதல் நடத்தவும் முயற்சி எடுக்கப்பட்டது. அப்போது கூட்டத்தினர் கல்லைத் தூக்கி எரிந்ததில், தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜின் கார் கண்ணாடியும் உடைந்தது. இதனால் நிலைமை பதற்றமடைய, பின்னர் உடனடியாகக் காவல் துறையினர் குவிக்கப்பட்டு, தடியடி நடத்தி போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து, பதற்றமான சூழலிலேயே வீரமணி மற்றும் சுதாகர் ரெட்டி ஆகியோர் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்தில் பேசிய திராவிடர் கழக தலைவர் வீரமணி, "நாங்கள் திருப்பூருக்கு வரும்போது எதிராளிகள் எங்களுக்குக் கொடுத்த வரவேற்பிலேயே தெரிந்துவிட்டது, திருப்பூரில் தி.மு.க கூட்டணி வேட்பாளருக்கு வெற்றி உறுதியாகிவிட்டது என்பது. எந்த அளவுக்கு எதிரிகள் ஆத்திரத்தோடு இருக்கிறார்கள் என்பதைக் கண்கூடாகப் பார்த்தோம். தங்கள் கையிலிருக்கும் வருமான வரித்துறையை ஏவிப் பார்த்தார்கள். சி.பி.ஐ-யை ஏவிவிட்டுப் பார்த்தார்கள். அதற்கெல்லாம் எங்களது கூட்டணியினர் அஞ்சவில்லை என்பதைத் தெரிந்துகொண்டு, இப்போது எங்களை வழிமறித்து தாக்கவும் முயன்றார்கள். இதன்மூலம், தோல்வி பயம் அவர்களை உலுக்கிக்கொண்டு இருப்பது கண்கூடாகத் தெரிகிறது. தேர்தல் நேரத்தில் யாராவது காலித்தனம் செய்தால், அவர்கள் தேர்தல் தோல்வி பயத்தில் இருக்கிறார்கள் என்றே அர்த்தம். அதனால்தான், அவர்கள் பெரியார் சிலையை உடைக்கிறார்கள். 

ஒருகாலத்தில் ஸ்காட்லாந்து யார்டைவிட பெருமைபெற்ற காவல் துறை, தற்போது பரிதாபமாக, காவி ஆட்சியின் ஏவல் துறையாக விளங்கிக்கொண்டிருப்பது வெட்கக்கேடு. காவல் துறைக்காகவும் போராடியவர்கள் நாங்கள். நாளைக்கும் காவல் துறைக்கு ஆபத்து என்றால், எங்களது கூட்டணிதான் உங்களுக்காகப் போராடும். கூட்டணி என்பது அரசியலில் மட்டும் இருக்கட்டும். காவிகளோடும், காலிகளோடும் காவல்துறை கூட்டணி வைத்துக்கொள்ளக் கூடாது. நாங்கள் யாரும் கலவரங்களுக்கு அஞ்சுபவர்கள் கிடையாது. எந்தவித காலித்தனமும் எங்களை அடக்கிவிட முடியாது. நெருப்பிலே பூத்த மலர்கள் நாங்கள். அண்ணாவும் கலைஞரும் சந்திக்காத எதிர்ப்பா? எதிர்ப்புகள் இருப்பதுதான் பொதுவாழ்க்கைக்கு நல்லதொரு அங்கீகாரம். மனிதன் நோயினாலும் விபத்தாலும் சாகக் கூடாது. கொள்கைக்கு செத்தால்தான் பெருமை எனப் பெரியாரே சொல்லியிருக்கிறார்.

தி.மு.க கூட்டணி கொள்கைக் கூட்டணி. இது, தேர்தலுக்காகவும் பதவிக்காகவும் உருவான கூட்டமல்ல. நீட் தேர்வு, காவிரி நதி நீர் பிரச்னை என அனைத்துக்கும் கையைத் தூக்கி, முழக்கமிட்ட கூட்டணி. ஆனால், எதிரில் இருப்பது தேர்தலுக்காக மட்டுமே உண்டான கொள்ளைக் கூட்டணி. காவியும், ஆவியும் கூட்டணி வைத்திருக்கிறது. மதுரை விமான நிலையத்தில் ஓ.பி.எஸ்ஸை அழைத்து, இது பா.ஜ.க தலைமையிலான கூட்டணி எனச் சொல்கிறார் அமித்ஷா. 40 தொகுதிகளில், 5 தொகுதிகளைத்தான் பா.ஜ.க-வுக்குக் கொடுத்திருக்கிறார்கள். அப்படியிருந்தும், இது அ.தி.மு.க கூட்டணி என்று சொல்ல முடியாத அளவுக்கு கொத்தடிமைகளாகத்தான் இருக்கிறார்கள். அண்ணா பெயரில் உருவான கட்சியை மோடியிடம் அடகு வைத்துவிட்டார்கள். இறுதியில் அம்பானிக்கும், அதானிக்கும்தானே நாட்டை அடகு வைத்திருக்கிறார்கள்.

வித்தைக்காரர்கள் சத்தம்போட்டுதான் வித்தையை ஆரம்பிப்பார்கள். அதுபோலத்தான், மத்தியில் மோடியின் ஆட்சி தொடங்கியது.
ஆண்டுக்கு 2 கோடி நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவேன் என்றார். அதுகூட பிரச்னை இல்லை. ஆனால் நாலரை கோடி பேர் வேலையை இழந்துவிட்டார்களே. அது வேதனை இல்லையா? இன்றைக்கு சிபிஐ வழக்கில் இருக்கும் அமைச்சர்களை இருபக்கமும் வைத்துக்கொண்டு, ஊழலை ஒழிப்போம் என்று சொல்லி வாக்குக் கேட்கிறார்கள் பா.ஜ.க கூட்டணியினர்.  திருப்பூரில் பிடிக்கப்பட்ட கன்டெய்னர் விவகாரம் என்ன ஆனது ? ஆர்.கே. நகரில் நடத்தப்பட்ட சோதனை என்ன ஆனது? நோயாளிகளைக் காக்கவே ஆம்புலன்ஸ் இருக்கிறது. ஆனால்,நோட்டுக்கட்டுக்காக ஆம்புலன்ஸைப் பயன்படுத்தும் கொடுமை உங்கள் நாட்டில்தான் இருக்கிறது என வெளிநாட்டினரே வேதனைப்படுகிறார்கள். 

மாநில அரசுகள் தரையிலே ஊழல் செய்கிறார்கள் என்றால், அதிகாரம் அதிகம் படைத்த மத்திய அரசு ஆகாயத்தில் ரபேல் ஊழல் செய்கிறது. ஆனால் ஒன்று மட்டும் உறுதி. மே 23 -க்குக் பிறகு மத்தியில் மோடி ஆட்சியும், தமிழகத்தில் கொத்தடிமை ஆட்சியும் அகற்றப்படும். பொதுமக்கள் ஏப்ரல் 18 - அன்று வாக்குசாவடியில் பொத்தானை அழுத்தும்போது விளக்கு எறிகிறதா? வெளிச்சம் தெரிகிறதா என்பதை உன்னிப்பாகப் பார்க்க வேண்டும். அங்கு விளக்கு எரிந்தால்தான் உங்கள் வீட்டிலும் விளக்கு எரியும்” என்று பேசினார்.