Published:Updated:

சீமான் பேச்சைக் கேட்க நாம் தமிழர் கூட்டத்துக்கு வந்த கம்யூனிஸ்ட் வேட்பாளர் - திருவாரூரில் சுவாரஸ்யம்

சீமான் பேச்சைக் கேட்க நாம் தமிழர் கூட்டத்துக்கு வந்த கம்யூனிஸ்ட் வேட்பாளர் - திருவாரூரில் சுவாரஸ்யம்
சீமான் பேச்சைக் கேட்க நாம் தமிழர் கூட்டத்துக்கு வந்த கம்யூனிஸ்ட் வேட்பாளர் - திருவாரூரில் சுவாரஸ்யம்

சீமான் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் பிரசார பொதுக்கூட்டம், திருவாரூர் பனகல் சாலையில் நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் நாடாளுமன்ற வேட்பாளர் எம்.செல்வராஜ், கூட்டத்தில் கலந்துகொண்டு மேடையேறி சீமானை சந்தித்து உரையாடிய சுவாரஸ்ய நிகழ்ச்சி நடந்தது. 

திருவாரூர் இடைத்தேர்தல் மற்றும் நாகை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவாரூர் பேருந்து நிலையம் அருகே பனகல் சாலையில் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். 

அப்போது அவர், ``உலக நாடுகளில் அரசு நடத்தும் அனைத்து நிறுவனங்களும் சிறப்பாகச் செயல்படுகின்றன. ஆனால், தமிழகத்தில்  சரியான தரம் இல்லை என்பதால், அனைத்து நிறுவனங்களும்  தனியார் வசமாகப் போய்விட்டது. சமமான கல்வி, சமமான மருத்துவம் அனைத்தும்தான் எங்கள் நோக்கம்.  இதைத் திராவிட கட்சிகள் சொல்ல முடியாது. ஏனென்றால், பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்களை நடத்துவதே அவர்கள்தான். எனவே, எப்படி அவர்களால் சமமான கல்வியைத் தரமுடியும்? என்றார்.

தொடர்ந்து பேசிய சீமான், ``கருணாநிதி ஆட்சிக்கு வந்தபோது ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாயாக இருந்தது. அடுத்து வந்த ஜெயலலிதா ஆட்சியில்  இலவச அரிசி கொடுத்தார்கள். இதுதான் இவர்கள் செய்த சாதனை. ஏழை மக்களிடம் ஒரு ரூபாய்கூட இல்லாமல் செய்ததுதான், இவர்கள் செய்த பெரிய சாதனை.

தற்போது இருக்கும் சாதியும் மதமும் ஒருநாளும் மனிதனுக்கு உதவாது. மனிதனுக்கு மட்டும் அரசியல் செய்யாமல் மண்ணுக்கு அரசியல் செய்தால்தான், மனிதனைக் காப்பற்ற முடியும். ஆற்று மணலை அனைவரும் தின்றுவிட்டார்கள். இதை மோடியோ, ராகுலோ, ஸ்டாலினோ, எடப்பாடியோ பேசுவார்களா?  அப்படி அவர்கள் மணலின் பயன் பற்றி பேசினால், நான் கூட்டத்தை முடித்துக்கொள்கிறேன். மலையையும் மணலையும் உருவாக்க முடியாது; அது இயற்கையின் கொடை. இந்த பூமியை வருங்கால சந்ததிகளுக்கு நாம் விட்டுச் செல்ல வேண்டும். அனைத்தையும் விற்று வங்கியில் பணம் சேர்த்துவிட்டால் போதுமா? இந்த பூமி மனிதர்களுக்கு மட்டுமல்ல. அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானது.

பா.ஜ.க, காங்கிரஸ் தமிழர்களின் நலனுக்காக எப்போது நின்றது? காவிரியில் தண்ணீர் வந்தால் விவசாயி விளைநிலங்களை விட்டு வெளியேற மாட்டான் என இரண்டு கட்சிகளும் திட்டம்போட்டு செயல்படுகின்றன.  தண்ணீரை விடவில்லை என்றால், இங்குள்ள இரண்டு கட்சிகளும் வளங்களைச் சூறையாட எண்ணுகின்றன. 

பா.ஜ.க சொல்கிறது, நாட்டை எங்களை விட்டால் யார் காப்பாற்றுவது என்று. நாட்டை பா.ஜ.க-விடம் இருந்து யார் காப்பாற்றுவது என நாங்கள் எண்ணுகிறோம் என்று பேசிக்கொண்டிருந்தார் சீமான். அப்போது, தி.மு.க கூட்டணிக் கட்சி வேட்பாளரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் நாடாளுமன்ற வேட்பாளர் எம்.செல்வராசு, கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் மேடையேறிய எம்.செல்வராசு சீமானை கட்டித் தழுவிப் பேசினார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு உண்டானது.

இதுபற்றி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நாகப்பட்டினம் நாடாளுமன்ற வேட்பாளர் எம்.செல்வராசிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, ``நான் பிரசாரம் செய்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தேன்.  அப்போது, நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சீமான்,  மோடியின் பாகிஸ்தான் தாக்குதல்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார். சரி என்னதான் அவர் பேசுகிறார் என கேட்பதற்காகவே வாகனத்தை விட்டு இறங்கி, கூட்டத்தில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் துல்லியமாகப் பேசினார்” என்று புகழாரம் சூட்டினார். 

 ``இதற்கு முன், கடந்த தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற கூட்டங்களில் சீமான் கலந்துகொண்டு உரையாடியுள்ளார். அதன் அடிப்படையில்தான் அவருடைய பேச்சை கேட்க நான் சென்றேன். இது அரசியலுக்கு அப்பாற்பட்டது. இதில் எந்த அரசியலும் இல்லை. நாங்கள் எதுவும் பேசிக்கொள்ளவும் இல்லை” என்றார்.