Published:Updated:

``என் குழந்தைக்கு 'பிரியங்கா'ன்னு பேர் வச்சாங்க!" - ஜோதிமணி குறித்து உருகும் கரூர் பெண்

துரை.வேம்பையன்
``என் குழந்தைக்கு 'பிரியங்கா'ன்னு பேர் வச்சாங்க!" - ஜோதிமணி குறித்து உருகும் கரூர் பெண்
``என் குழந்தைக்கு 'பிரியங்கா'ன்னு பேர் வச்சாங்க!" - ஜோதிமணி குறித்து உருகும் கரூர் பெண்

கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி  பிரசாரத்துக்குப் போனபோது, ஒரு பெண் தனது பெண் குழந்தைக்குப் பெயர் வைக்கும்படி கூறினார். ஜோதிமணி, 'என்னைப் பெயர் வைக்கச் சொல்கிறாரே இந்தப் பெண்' என்று நெகிழ்ந்துபோய், அந்தக் குழந்தைக்கு 'பிரியங்கா' என்று பெயர் வைத்து ஆசீர்வதித்தார்.

கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, புலியூர், புரவிபாளையம், கோயில்பாளையம், கொளத்துப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவரோடு தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் பயணித்தார்கள். காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்தும், தீப விளக்குகள் ஏற்றியும் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். ஜோதிமணியும் அந்த வரவேற்பில் மகிழ்ந்துபோனதோடு, தன்னை எம்.பி-யாக்கினால் என்னென்ன திட்டங்கள் கொண்டுவருவேன் என்று வாக்குறுதிகளை அள்ளி வழங்கினார்.

இந்நிலையில், அப்பகுதியில் கை சின்னத்திற்கு அவர் வாக்கு கேட்டுக்கொண்டிருந்தபோது, தனது இடுப்பில் இருந்த பெண்குழந்தையோடு பெண் ஒருவர் ஜோதிமணியை நெருங்கி, அந்தக் குழந்தையைக் கொடுத்து, 'இது என் குழந்தைதான். இதுக்கு இன்னமும் பெயர் வைக்கலை. நியூமராலஜிபடி பெயர் வைக்கும்படி உறவினர்கள் சொன்னாங்க. என் கணவரோ, தமிழ்முறைப்படி பெயர் வைக்க நல்ல பெயர் தேர்வுபண்ணிக்கிட்டு இருந்தார். இந்நிலையில்தான், நீங்க ஓட்டு கேட்டு வந்தீங்க. எனக்கென்னமோ, நீங்க பெயர் வச்சா நல்லா இருக்கும்'னு தோணுச்சு. நல்ல பெயரா வையுங்க' என்று சொன்னார். 

 அதைக்கேட்டு, ஒருநிமிடம் திகைத்துப் போனார் ஜோதிமணி. "நான் பெயர் வைக்கும் அளவிற்கு என்ன சாதித்துவிட்டேன்' என்று மறுத்தார். ஆனால் விடாத அந்தப் பெண், "நீங்கள் பெயர் வைத்தால்தான் இந்த இடத்தைவிட்டு நகருவேன்" என்று உறுதிகாட்டினார். இதனால், மனம் நெகிழ்ந்துபோன ஜோதிமணி, " 'பிரியங்கா' என்று பெயர் வைக்கிறேன். அந்த பிரியங்கா போலவே உங்க பெண்குழந்தையும் வாழ்க்கையில் பல உயரங்களைத் தொடுவாள். அதற்கு என் வாழ்த்துகள். அதோடு, இந்த சம்பவத்தால், இப்பவே எனக்கு எம்.பி-யான மாதிரி அப்படி ஒரு சந்தோஷம், நிறைவு ஏற்பட்டிருக்கு" என்று நெக்குருகிப்போய் சொன்னார். அதன்பிறகு விசாரித்ததில், கரூர் புலியூரை அடுத்த புரவிப்பாளையத்தில் வசிக்கும் தினேஷ்பாபு, ஹேமாமாலினி தம்பதியரின் பெண் குழந்தைக்குதான் ஜோதிமணி பிரியங்கா எனப் பெயர் சூட்டினார் என்பது தெரியவந்தது.


 

ஹேமமாலினியிடமே பேசினோம், "என் குழந்தைக்கு அழகான பெயர் தேடிக்கிட்டு இருந்தோம். அப்போதான், ஜோதிமணி எங்க ஊருக்கு ஓட்டு கேட்டு வர்றதா கேள்விப்பட்டேன். உடனே, 'அவர்தான் என் குழந்தைக்கு பெயர் வைக்கணும்'னு முடிவு பண்ணினேன். காரணம், சாதாரண ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஜோதிமணி, திருமணமும் செய்துக்காம, எம்.பி தேர்தலில் நிற்கும் அளவுக்கு வளர்ந்திருக்காங்க. 'ராகுல் காந்தியே கரூரில் இவரை சிபாரிசு பண்ணினார்'னு செய்திகள்ல பார்த்தோம். அதனால், ஜோதிமணி என் குழந்தைக்கு பெயர் வைத்தால், என் குழந்தையும் வாழ்க்கையில் உன்னத நிலைக்கு வருவாள்னு நினைச்சேன். அதனால்தான், ஜோதிமணியை விட்டு பெயர் வைக்கச் சொன்னேன். ரொம்ப மகிழ்ச்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கு" என்றார் உற்சாகமாக!