Published:Updated:

`உங்களுக்காக உழைத்தே கறுத்துப்போயிட்டேன்; தம்பிதுரைக்கு ஓட்டு போடுங்க!'- விஜயபாஸ்கர் பிரசாரம்

மணிமாறன்.இரா
`உங்களுக்காக உழைத்தே கறுத்துப்போயிட்டேன்; தம்பிதுரைக்கு ஓட்டு போடுங்க!'- விஜயபாஸ்கர் பிரசாரம்
`உங்களுக்காக உழைத்தே கறுத்துப்போயிட்டேன்; தம்பிதுரைக்கு ஓட்டு போடுங்க!'- விஜயபாஸ்கர் பிரசாரம்

``உங்களுக்காக உழைத்து உழைத்து கறுத்துப்போய் இருக்கிற என்னைப் பார்த்தாவது இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்'' என்று கூறி, தன் தொகுதி மக்களிடம் தம்பிதுரைக்கு ஆதரவாக விஜயபாஸ்கர் அனுதாப பிரசாரம் மேற்கொண்டார்.   

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதியில், கரூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது விஜயபாஸ்கர் மக்களிடம் பேசுகையில்,  'உங்களுக்காக நான் படும் கஷ்டத்தைப் பார்த்து, என்னுடைய தூங்காத இந்தக் கண்களைப் பார்த்து, உங்களுக்காக உழைத்து உழைத்து கறுத்துப்போய் இருக்கிற என்னைப் பார்த்தாவது இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். மக்களுக்காக ஒரு திட்டத்தைக் கொண்டுவர படாதபாடுபடுகிறோம். உங்களுக்காக உழைப்பது, கஷ்டப்பட்டு திட்டங்களைக் கொண்டுவருவதைத் தவிர வேறு எதையும் யோசிப்பதற்கு எங்களுக்கு நேரம் இல்லை. நான் யாரையும் குறைசொல்வதோ, திட்டுவதோ இல்லை. எங்களின் உழைப்பைப் பார்த்தாவது எங்களுக்கு ஓட்டு போடுங்கள். உங்கள் பொற்பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன்'' என்று தன் தொகுதி மக்களிடம் அனுதாபப் பிரசாரம் மேற்கொண்டார்.

கடந்த இரண்டு முறை கரூர் எம்.பி-யாக இருந்தும் எந்தத் திட்டத்தையும் தம்பிதுரை கொண்டுவரவில்லை என்பதால், தொகுதி முழுவதும் அதிருப்தியில் உள்ள பொதுமக்கள், ஓட்டு கேட்டுச் செல்லும் அவரை சூழ்ந்துகொண்டு கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்து வருகின்றனர்.  நொந்துபோன மனிதர், ஒட்டு கேட்க மக்களைச் சந்தித்தே ஆக வேண்டுமா என்ற நிலையில் தான் உள்ளதாக அ.தி.மு.க நிர்வாகிகள் பேசிக்கொள்கின்றனர். இந்த நிலையில்தான், விராலிமலை தொகுதியில் தம்பிதுரைக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் விஜயபாஸ்கர், தான் கொண்டுவந்த திட்டங்களை எடுத்துக்கூறியும், தன்னுடைய உழைப்பு என்ற அனுதாபத்தையும் வைத்து பிரசாரம் செய்யவேண்டிய சூழல் உள்ளதாக விராலிமலை அ.தி.மு.க-வினர் தற்போது பேசத் தொடங்கிவிட்டனர்.