Published:Updated:

`தேர்தல் முடியட்டும்...வச்சுக்கறேன் கச்சேரியை!'- பிரசார உள்ளடியால் கொதித்த ஸ்டாலின்

`தேர்தல் முடியட்டும்...வச்சுக்கறேன் கச்சேரியை!'- பிரசார உள்ளடியால் கொதித்த ஸ்டாலின்
`தேர்தல் முடியட்டும்...வச்சுக்கறேன் கச்சேரியை!'- பிரசார உள்ளடியால் கொதித்த ஸ்டாலின்

கோடை வெப்பத்தைப் பொருட்படுத்தாமல் தமிழக வீதிகளில் தீவிரப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். `அ.தி.மு.க அரசையும் பா.ஜ.க-வையும் வீழ்த்துவதற்காகக் கடுமையாகப் பாடுபடுகிறார் ஸ்டாலின். ஆனால், தொகுதிகளில் நடக்கும் உள்ளடி வேலைகளால் உடன்பிறப்புகளே உறைந்து போய் உள்ளனர்' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில். 

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 9 நாள்களே உள்ளன. 40 தொகுதிகளோடு சேர்த்து 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்க இருக்கிறது. `ஸ்டாலினா...எடப்பாடி பழனிசாமியா?' என்ற மோதல் வலுத்து வருவதால், இரு கட்சிகளின் தலைவர்களும் ஒருவருக்கொருவர் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். `அனைத்துத் தொகுதிகளிலும் வென்றாக வேண்டும்' என்ற முனைப்பில் இருப்பதால், பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஏராளமான வாக்குறுதிகளை அளித்திருக்கிறார் ஸ்டாலின். `நான் எதிர்பார்க்கும் வெற்றியைத் தேடித் தந்தால், உங்களுக்குத் தேவையானது அனைத்தும் வந்து சேரும்' என நம்பிக்கை அளித்திருக்கிறார். இந்த வாக்குறுதியின் காரணமாகவே, பூத் கமிட்டிகளில் கூடுதல் உற்சாகத்துடன் வேலை நடந்து வருகிறது. அதேநேரம், சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் நடக்கும் உள்ளடி வேலைகளால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் தி.மு.க-வினரும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும். 

``தி.மு.க-வின் கோட்டையாக இருந்த சென்னையின் 3 தொகுதிகளையும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இழந்தோம். இந்தமுறை, `மீண்டும் தி.மு.க-வின் கோட்டையாக சென்னையை மாற்ற வேண்டும்' எனக் கட்சிக்காரர்கள் களவேலை பார்த்து வருகின்றனர். இதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளே உள்ளடி வேலைகளைச் செய்து வருகின்றனர். இதனால், மத்திய சென்னையிலும் வடசென்னையிலும் ஏராளமான குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன" என ஆதங்கத்தோடு நம்மிடம் பேசினார் தி.மு.க-வின் முக்கிய நிர்வாகி ஒருவர். தொடர்ந்து நம்மிடம் பேசியவர்,

`` மத்திய சென்னையில் தயாநிதி மாறனும் வடசென்னையில் டாக்டர்.கலாநிதியும் போட்டியிடுகின்றனர். இவர்களுக்காக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் கம்யூனிஸ்டுகளும் கடும் வெயிலிலும் வாக்கு சேகரித்து வருகின்றனர். இவர்களை மட்டம் தட்டும் வேலையில் சேகர்பாபு தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணிக் கட்சிகள் தவறு செய்தால்கூட, அதை அனுசரித்துச் செல்வது வழக்கமான ஒன்று. ஆனால், அதற்கு மாறான செயல்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்பு, மத்திய சென்னை தொகுதியின் காங்கிரஸ் பொறுப்பாளரை நேரில் சந்தித்து, `உன்னைத் தொலைத்துவிடுவேன்' என மிரட்டியிருக்கிறார் சேகர்பாபு. தி.மு.கவினரின் பேச்சை அந்தக் காங்கிரஸ் நிர்வாகி கேட்கவில்லை என்பதைக் குற்றச்சாட்டாக முன்வைக்கிறார்கள்.

அதேபோல், வடசென்னை தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளராக வி.எஸ்.ஜே.தினகரனைப் போட்டிருக்கிறார்கள். அவரிடமும் கடுமையாகச் சண்டை போட்டிருக்கிறார் சேகர்பாபு. பிரசாரப் பணிகளில் சொல்வதைக் கேட்கவில்லை என்பதற்காக, ஒரு சிலரிடம் சண்டை போட்டால் ஏற்றுக் கொள்ளலாம். தொடர்ந்து ஒவ்வொரு நிர்வாகியையும் சந்தித்து சண்டை போடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதவிர, தி.மு.க-வின் கீழ்மட்ட நிர்வாகிகளிடம், `காசே கொடுக்காமல் பிரசாரம் செய்ய வருகிறார்கள். இவர்கள் எல்லாம் தோற்றால்தான் அடங்குவார்கள்' எனப் பேசி வருகின்றனர் சேகர்பாபு தரப்பினர். `மாவட்டச் செயலாளர் தரப்பிலிருந்து இதுபோன்ற வார்த்தைகள் வரலாமா?' எனக் கட்சிக்காரர்கள் ஆதங்கப்படுகின்றனர். 

மத்திய சென்னையிலும் வடசென்னையிலும் தி.மு.க-வுக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. அப்படியிருக்கும்போது, தி.மு.க-வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் பெரும் மோதலை உண்டு செய்ய சிலர் முனைகின்றனர். இதன் பின்னணியில் அமித் ஷா டீம் களமிறங்கியிருப்பதாகவும் சொல்கின்றனர். இதில், தி.மு.க நிர்வாகிகளுக்கு ஆதரவாக மப்டி உடையில் சில போலீஸார் வலம் வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க-வின் தூண்டுதலின் பேரில் இப்படி நடக்கிறதா எனவும் தெரியவில்லை. வெற்றி பெறக் கூடிய தொகுதிகளில் எல்லாம், உளவுத்துறை பாணியில் தி.மு.கவினரே உள்ளடி வேலைகளைச் செய்து வருகின்றனர். காங்கிரஸ் நிர்வாகிகளை சேகர்பாபு கடுமையாகத் திட்டியது குறித்து ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார் கே.எஸ்.அழகிரி. அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட ஸ்டாலின், `தேர்தல் வரையில் அமைதியாக இருங்கள். அதன்பிறகு உறுதியாக நடவடிக்கை எடுக்கிறேன்' எனக் கூறிவிட்டார். 

தன்னுடைய பேச்சை கேட்காதவர்களைத் திட்டுவது, வேட்பாளர்களுக்கு எதிரான மறைமுகப் பிரசாரம் என தி.மு.க நிர்வாகிகள் சிலரின் செயல்பாடுகள் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது. இதனால் துறைமுகம், எழும்பூர், வில்லிவாக்கம், திரு.வி.க. நகர், கொளத்தூர் ஆகிய தொகுதிகளில்தான் இவ்வளவு பிரச்னையும். இதுதொடர்பாக, அறிவாலயத்துக்கும் புகார் மனுக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. தலைமை நடவடிக்கை எடுக்கும் என உறுதியாக நம்புகிறோம்" என்றார் அமைதியாக. 

வடசென்னை தொகுதியில் வேட்பாளர் கலாநிதிக்காக நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொண்ட ஸ்டாலின், `நடைபெற இருப்பது நாடாளுமன்றத் தேர்தல். உங்களுடைய வாக்கு என்பது வெறும் வாக்குகள் இல்லை. இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றப் போகிறது. உங்களுடைய தலையெழுத்தையும் வாழ்க்கையில் நிம்மதியை அளிக்கும் சூழ்நிலையையும் உருவாக்கப் போவது நீங்கள் அளிக்கும் வாக்குதான். உங்களது வாக்குகளை சரியான முறையில் பயன்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது' என்றார் உறுதியாக. 

` ஸ்டாலினின் நம்பிக்கையைப் பொய்த்துப் போக வைக்கும் உடன்பிறப்புகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?' என்பதே மத்திய சென்னை, வடசென்னை நிர்வாகிகளின் கேள்வியாக இருக்கிறது.