Published:Updated:

`தமிழிசையை வேட்பாளராக நிறுத்தியது பா.ஜ.க-வின் சதி!'- தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

இ.கார்த்திகேயன்
`தமிழிசையை வேட்பாளராக நிறுத்தியது பா.ஜ.க-வின் சதி!'- தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் பிரசாரம்
`தமிழிசையை வேட்பாளராக நிறுத்தியது பா.ஜ.க-வின் சதி!'- தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

``தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட சட்டமன்றத்தைக் கூட்டி கொள்கை முடிவு எடுக்கப்படும்" என தூத்துக்குடியில் நடந்த தி.மு.க., பிரசார பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் கனிமொழி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஜெயக்குமார் ஆகியோரை ஆதரித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்ட பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், இரண்டு வேட்பாளர்களையும் ஆதரித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், ``தூத்துக்குடியில் கனிமொழி போட்டியிடுவது என்பது கருணாநிதியே இங்கு போட்டியிடுவது என்று சொல்லலாம், ஏன் நானே போட்டியிடுவதாகக்கூட அர்த்தம் என்றும் சொல்லலாம்.

கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், சமூகப் போராளி என பல்வேறு முகங்களைக் கொண்டவர் கனிமொழி. தூத்துக்குடி மக்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் கனிமொழி தீர்வு காண்பார். நாடாளுமன்றத்தில் டைகர் என்ற பட்டம் பெற்றுள்ளார். அதனால், தூத்துக்குடியிலும் மக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதில் கனிமொழி, டைகராகவும் இருப்பார். ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட பல பிரச்னைகள் கொண்ட தூத்துக்குடியில் தோற்பதற்காகவே அவர் நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. தூத்துக்குடியில் பா.ஜ.க தலைவர் தமிழிசையை வேட்பாளராக நிறுத்தியது பா.ஜ.க-வின் சதி. அவருக்கு வேறு தொகுதியே கிடைக்கவில்லையா?

டெபாசிட் இழக்கப் போகும் தமிழிசை சௌந்தரராஜனுக்கு தி.மு.க-வின் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மோடி சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார் என்றால், தமிழகத்தில் அடிமை ஆட்சிதான் நடக்கிறது. பா.ஜ.க.-அ.தி.மு.க., கூட்டணி ஒரு நம்பிக்கை இல்லாத கூட்டணி. மோடியின் ஆட்சியில் 40 ராணுவவீரர்கள் வெடிகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தனர். ஆனால், மோடி கையில் இந்தியா பாதுகாப்பாக உள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பா.ஜ.க-வின் செல்வாக்கு உள்ள மாநிலங்களில்தான் கலவரங்களும் அதிகம் நடைபெறுகின்றன. அந்த வரிசையில், தமிழகத்தையும் அதே நிலைக்குத்தள்ள முயற்சிகள் நடக்கின்றன.

கடந்த வருடம் மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான  போராட்டத்தின்போது மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்ற அப்பாவி மக்களில்  2 பெண்கள் உட்பட 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 13 பேர் இறந்துபோனது தொடர்பாக பிரதமர் மோடி நேரில் வந்து ஆறுதல் கூறினாரா, ஒரு அறிக்கை விட்டாரா அல்லது இதுவரை ட்விட்டரிலாவது இரங்கல் தெரிவித்தாரா. ஆனால், வடமாநிலத்தில் ஒரு பிரச்னை என்றால் மட்டும் மோடி அமைதியாக இருந்துவிடுவாரா. அப்பாவிகள் 13 பேரை சுட்டுக் கொன்றவர்களுக்கு நாம் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி அமைந்ததும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட சட்டமன்றத்தைக் கூட்டி கொள்கை முடிவு எடுக்கப்படும். அதேபோல, சேது சமுத்திர திட்டமும் முழுமையாக நிறைவேற்றப்படும். ஆங்கிலேய அராஜக அரசை எதிர்த்து கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் குரல் கொடுத்ததைப் போல, மோடி ஆட்சியை எதிர்த்து தி.மு.க. குரல் கொடுக்கிறது.

பாசிச பா.ஜ.க என்ற வார்த்தையை தூத்துக்குடி மாணவி சோபியா கண்டுபிடித்துக் கொடுத்துள்ளார். ஒருமுறை கூறிய சோபியாவை கைது செய்த மாநில அரசு அதே வார்த்தையை பலமுறை கூறிய என்னை ஏன் கைது செய்யவில்லை. இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் தி.மு.க வென்றால் ஏற்கெனவே உள்ள 97 இடங்களுடன் சேர்த்து 119 இடங்களைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் தி.மு.க ஆட்சி மலரும். இதுதான் மறைந்த தலைவர் கருணாநிதிக்கு நாம் அளிக்கும் மரியாதையாகும்” என்றார்.