Published:Updated:

`ரஜினியின் வரவேற்பே ஒரு சான்று, இதில் வியப்பேதும் இல்லை!'- திருமாவளவன் காட்டம்

எம்.திலீபன்
`ரஜினியின் வரவேற்பே ஒரு சான்று, இதில் வியப்பேதும் இல்லை!'- திருமாவளவன் காட்டம்
`ரஜினியின் வரவேற்பே ஒரு சான்று, இதில் வியப்பேதும் இல்லை!'- திருமாவளவன் காட்டம்

``பா.ஜ.க தேர்தல் அறிக்கையை  நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியிருப்பது பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ளார் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது'' என ரஜினியைக் கடுமையாக விமர்சனம் செய்தார் திருமாவளவன்

அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிதம்பரம் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் போட்டியிடும் தொல்.திருமாவளவன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கீழப்பழுவூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட திருமாவளவன், ``பா.ஜ.க ஆட்சியில் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகளைச் சந்திக்க 10 நிமிடம் நேரம் ஒதுக்காத பிரதமர், நடிகைகளைச் சந்திக்கிறார். அம்பானி மற்றும் அதானியுடன் ஊதாரித்தனமாக ஊர் சுற்றுகிறார். இந்த மாதிரியான பிரதமர் மீண்டும் பிரதமராக வரக்கூடாது. இந்தியா வளர்ச்சியடைய இயற்கை வளங்கள் பாதுகாக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்'' எனக் கூறினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவனிடம், `நடிகர் ரஜினிகாந்த் பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையை வரவேற்றது குறித்துக் கேட்டபோது, ``பா.ஜ.க தேர்தல் அறிக்கையை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியிருக்கிறார் என்பது அதிர்ச்சி தரக் கூடியது ஒன்றுமில்லை. வியப்பதற்கு எதுவுமில்லை. ரஜினிகாந்த் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள அல்லது அவர்கள் வழிகாட்டலில் இயங்குகிறார் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

அவருக்கு அதில் உடன்பாடு என்பதற்கு நான் கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. நதிகள் இணைப்பு பற்றி பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் சொல்லியிருப்பதை வரவேற்கின்ற முகத்தில் அவர்தான் இத்தகைய நிலைப்பாட்டில் இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருடைய நிலைப்பாடு நாட்டு மக்களுக்கு வெளிப்பட்டிருக்கிறது. அந்த வகையில் மகிழ்ச்சி'' என்றார்.

8 வழிச்சாலை தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் தங்களது கருத்தைக் கேட்டு பின் முடிவெடுக்க வேண்டும் என பா.ம.க சார்பில் நீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது குறித்துக் கேட்டபோது. அ.தி.மு.க கூட்டணி பொருந்தாக் கூட்டணி என்று பலமுறை கூறியுள்ளேன். இதுவும் அதற்கு ஒரு சான்று'' என்று கூறினார்.