Published:Updated:

`ஸ்டாலினைப் போல் அல்ல; நான் செய்வதைத் தான் சொல்வேன்!'‍- முசிறியில் அதிர்ந்த முதல்வர் எடப்பாடி

எம்.திலீபன்
`ஸ்டாலினைப் போல் அல்ல; நான் செய்வதைத் தான் சொல்வேன்!'‍- முசிறியில் அதிர்ந்த முதல்வர் எடப்பாடி
`ஸ்டாலினைப் போல் அல்ல; நான் செய்வதைத் தான் சொல்வேன்!'‍- முசிறியில் அதிர்ந்த முதல்வர் எடப்பாடி

``மக்களுக்கு நன்மை அளிக்க ஸ்டாலின் கட்சி நடத்தவில்லை. நமது ஆட்சியைக் கெடுக்க வேண்டும் என்பதில் மட்டும் அவர் குறியாக இருக்கிறார்" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க-வை கடுமையாக விமர்சனம் செய்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், பெரம்பலூரில் அ.தி.மு.க வேட்பாளர் என்.ஆர்.சிவபதியை ஆதரித்து முசிறியில் பிரசாரத்தைத் தொடங்கினார். அதைத்தொடர்ந்து  மண்ணச்சநல்லூர், துறையூர், பெரம்பலூர் ஆகிய இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி பேசத்தொடங்கினார். ``நாடு நலம்பெற நாட்டின் பாதுகாப்பு முக்கியம். நாட்டின் பாதுகாப்பு நன்றாக இருந்தால்தான் முசிறியிலும் பாதுகாப்பு இருக்கும். எனவே, நம் நாட்டுக்குத் தகுதியான, திறமையான பிரதமரான மோடி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும். அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு தாருங்கள்.

எங்கள் ஆட்சியின் முதல் கோரிக்கை தண்ணீருக்காகத்தான். குடி மராமத்து திட்டத்தில் ஆறு, மழை நீரைத் தேக்கி வைக்கும் வகையில் ஏரி, குளங்களைத் தூர்வாரி வருகிறோம். இன்று வரை 3,000-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் தடுக்கப்பட்டு விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும். நீர் மேலாண்மை அமைப்பு உருவாக்கப்பட்டு 4 ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர்கள் கொண்ட குழு ஆய்வறிக்கையை சமர்ப்பித்து வருகிறது. அதன்படி தடுப்பணைகள் கட்டப்படும். காவிரியில் தற்போது 3 தடுப்பணை கட்டப்படுகிறது. 

அதேபோல் 2,000 கோடியில் சென்னையில் உணவுப் பூங்கா அமைக்கிறோம். இந்த உணவுப் பூங்கா தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரியதாக இருக்கும். இதில் விவசாயப் பொருள்களுக்குச் சேமிப்புக் கிடங்கு அமைக்கப்பட உள்ளது. இதில் விவசாயிகள் ஒருமாதம் வரை பொருள்களை வைத்து, விலையேறும்போது விற்பனை செய்யலாம். அத்தோடு 900 ஏக்கரில் கால்நடைப் பூங்கா அமைக்க உள்ளோம். அதில் கலப்பின, நாட்டுப் பசு போன்றவை நோய்த் தடுப்பிலிருந்து பாதிக்கப்படும். அதிகம் பால் கொடுக்கும் கறவை மாடுகளை விவசாயிகளுக்கு வழங்க இருக்கிறோம்" என்றார்.

அடுத்ததாக தி.மு.க பக்கம் தாவினார். ``தைப் பொங்கலுக்குப் பரிசு ரூ.1,000 கொடுத்தோம். அதை ஸ்டாலின் தடுக்க முயற்சி செய்தார். அவர் மக்களுக்கு நன்மை அளிக்கக் கட்சி நடத்தவில்லை. நமது ஆட்சியைக் கெடுக்க வேண்டும் என்பதில் மட்டும் குறியாக இருக்கிறார். தற்போது தொழிலாளர்களுக்கு ரூ.2,000 வழங்கும் திட்டம் அறிவித்தேன். அதை ஸ்டாலின் தடை செய்ய முயற்சி செய்தார். ஆனால், நீதிமன்றம் தடை வழங்க மறுத்துவிட்டதோடு, அந்த வழக்கையும் தள்ளுபடி செய்தது. தேர்தல் முடிந்ததும் இந்தத் திட்டம் கட்சி பாகுபாடின்றி அனைத்துத் தொழிலாளர்கள் குடும்பத்துக்கும் ரூ.2,000 வழங்கப்படும். ஸ்டாலின் எங்களைத் தடுத்து நிறுத்த முடியாது. ஏழைகளுக்குக் கொடுப்பதை இந்தியாவிலே தடுக்கும் ஒரே கட்சி தி.மு.க தான். ஏழைகள் வாழ்வு பெற மத்திய அரசு ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது. மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வட்டியில்லாக் கடன் வழங்கவுள்ளது. தி.மு.க ஆட்சியில் இதேபோல் நீர் மேலாண்மைக்குச் செய்தார்களா? எந்தத் திட்டமும் செய்யவில்லை. நான் செய்வதைத் தான் சொல்வேன். ஸ்டாலின் போல வெறுமனே சொல்லிவிட்டுச் செல்ல மாட்டேன்" என்று பேசினார்.