Published:Updated:

`8 வழிச் சாலை வழக்குக்காக விவசாயிகளிடம் ரூ.2 கோடி பெற்றது பா.ம.க!' - வீரபாண்டி ராஜா

வீ கே.ரமேஷ்
`8 வழிச் சாலை வழக்குக்காக விவசாயிகளிடம் ரூ.2 கோடி பெற்றது பா.ம.க!' - வீரபாண்டி ராஜா
`8 வழிச் சாலை வழக்குக்காக விவசாயிகளிடம் ரூ.2 கோடி பெற்றது பா.ம.க!' - வீரபாண்டி ராஜா

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மறைந்த தி.மு.க முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், சேலம் தி.மு.க கிழக்கு மாவட்டச் செயலாளருமான ராஜா பத்திரிகையாளர்களைச் சந்தித்து, ``8 வழி பசுமைச் சாலைக்காக முதன் முதலில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டது நாங்கள் தான். எங்க வழக்கில் பா.ம.க 4வதாக இணைந்தது. அதுவும் வழக்கு போட செலவாகும் என்று கூறி ஒவ்வொரு விவசாயிகளிடமும் ரூ 2000 வீதம் 2 கோடி பணத்தை வாங்கி இருக்கிறார்கள். இவர்கள் எங்கள் கட்சியையும், தளபதியையும் விமர்சிக்க எந்தத் தகுதியும் இல்லை'' என்று புதிய சரவெடியை கொளுத்திப் போட்டிருக்கிறார்.

இது சம்பந்தமாக தன் வீட்டில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த வீரபாண்டி ராஜா, ``சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலை திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்ற முயன்று விவசாயிகளை மிரட்டி, துன்புறுத்தி நிலம் கையகப்படுத்தினார். இத்திட்டம் 12,500 கோடியில் நிறைவேறப்பட இருந்தது. அதில் 20 சதவிகித கமிஷன் என்றாலும் 2,500 கோடி கிடைக்கும் என்பதால் இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் என்று எடப்பாடி பழனிசாமி கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், முதன் முதலில் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் என்ற முறையில் நான் எதிர்ப்பு தெரிவித்து போராடினேன். அதற்குப் பிறகு 10 நாள்கள் கழித்து பா.ம.க., கம்யூனிஸ்ட், சமூக ஆர்வலர்கள் எனப் பலருக்கும் விஷயம் தெரிந்து படையெடுத்து வந்தார்கள். நாங்கள் பாதிக்கப்பட்ட விவசாயி ரவிச்சந்திரனை வைத்து வழக்கறிஞர் கனகராஜ் மூலம் உயர் நீதிமன்றத்தில் முதன் முதலில் வழக்கு போட்டோம்.

எங்கள் வழக்கோடு பலரும் இணைந்தார்கள். 4வதாக பா.ம.கவும் இணைந்தது. அதன் பிறகு வழக்கு நடைபெற்றது. மக்களின் வாழ்வாதாரத்தை, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு தற்போது நல்ல தீர்ப்பு வந்துள்ளது. இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தில் அன்புமணி வழக்கு போட்டதால் மட்டுமே தீர்ப்பு வந்துள்ளதாக விளம்பரம் செய்து வருகிறார்.

8 வழி பசுமைச் சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு போடுவதாக கூறி ஒவ்வொரு விவசாயிகளிடமும் தலா 2,000 ரூபாய் வீதம் மொத்தம் 2 கோடி பெற்றிருக்கிறார்கள். தற்போது பா.ம.க-வினர் அந்த விவசாயிகளைச் சந்தித்து, ``அன்புமணி வழக்கு போட்டதால் நல்ல தீர்ப்பு கிடைத்ததாகத் தருமபுரியில் வந்து சொல்லுங்கள்'' என்று கூறி  கார் வைத்து அழைத்துச் செல்வது வெட்கக் கேடு. நாங்கள் ஒரு பைசா கூட யாரிடமும் வாங்கவில்லை. எங்க சொந்தச் செலவில் வழக்கு போட்டோம்.

சேலம் ரயில்வே கோட்டம் கொண்டு வருவதற்காக எனது தந்தை வீரபாண்டியார் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு ரயிலை மறித்து 24 மணி நேரத்தில் சேலம் ரயிவே கோட்டம் கொண்டு வரப்பட்டது. பா.ம.க மத்திய அமைச்சரவையில் இருந்தது. ஆனால், இதுபற்றி அவர்கள் கண்டுகொள்ளவில்லை. சேலம் ரயில்வே கோட்டம் தலைவர் கலைஞரின் தலைமையில் செயல்பட்ட தி.மு.க தான் கொண்டு வந்தது. அதேபோல சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, திருச்சியில் அமைய வேண்டியது. தலைவர் கருணாநிதி பேசியதால், அது சேலத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அப்போதும் பா.ம.க மத்திய அமைச்சரவையில் இருந்ததே தவிர அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்கியது, மண்டல் கமிஷன் கொண்டு வந்தது, கொங்கு சமுதாயத்தை பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்த்தது. 108 ஆம்புலன்ஸ் கொண்டு வந்தது அனைத்தும் கலைஞரின் தலைமையில் இருந்த நம்ம ஆட்சியில் வந்தது. தலைவர் கலைஞரின் வாரிசு அண்ணன் தளபதியை விமர்சிக்க பா.ம.க-வுக்கு எந்தத் தகுதியும் இல்லை'' என்றார்.