Published:Updated:

`தபால் வாக்கு அளிக்கும் நடைமுறைகள் என்ன?' - காவல்துறையினருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் விளக்கம்

துரை.வேம்பையன்
`தபால் வாக்கு அளிக்கும் நடைமுறைகள் என்ன?' - காவல்துறையினருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் விளக்கம்
`தபால் வாக்கு அளிக்கும் நடைமுறைகள் என்ன?' - காவல்துறையினருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் விளக்கம்

மக்களவை தேர்தலின்போது, தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள காவல்துறையினர் தபால் வாக்கு அளிக்கும் நிகழ்வை, தேர்தல் நடத்தும் அலுவலரும், கரூர் மாவட்ட ஆட்சித்தலைவருமான அன்பழகன் மற்றும் தேர்தல் பொதுப்பார்வையாளர் பிரசாந்த் குமார் ஆகியோர் ஆய்வுசெய்தனர்.

மக்களவைப் பொதுத்தேர்தலில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் தபால்மூலம் தங்களது வாக்குகளை அளிக்கும் வகையில், மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த தபால் வாக்குப்பதிவு சேவை மையத்தில் அன்பழகன் மற்றும் தேர்தல் பொதுப்பார்வையாளர் பிரசாந்த் குமார் ஆகியோர் ஆய்வுசெய்தனர்.


 

தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்ய வந்திருந்த காவலர்களிடம் ஆட்சியர் அன்பழகன், தபால் வாக்குகளை அளிப்பதற்கு முன்பாக செய்ய வேண்டிய நடைமுறைகள் குறித்தும், எவ்வாறு படிவத்தைப் பூர்த்தி செய்து அதை முறையாக மடித்து மேலுறையில் வைத்து ஒட்டி, அதன் பின்னர் மேலுறையில் கையொப்பமிட்டு அதன் பிறகே பெட்டிக்குள் போட வேண்டும் என்ற விவரங்களைத் தெளிவாக அனைவருக்கும் எடுத்துரைத்தார். அதன் பின்னர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் தபால் ஓட்டுகளைப் போடும் பெட்டி காலியாக இருப்பது காண்பிக்கப்பட்டு, பின்னர் பூட்டி சீல் வைக்கப்பட்டது. 


 

அதைத்தொடர்ந்து, தபால் வாக்குகளைப் பதிவு செய்யும் நிகழ்வு தொடர்ந்து நடந்தது. இந்தச் சேவை மையத்தில் வாக்களிக்க வரும் காவலர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் எந்தப் பாகத்தில், எந்தத் தொடர் எண்ணில் அமைந்துள்ளது என்பது குறித்த தகவல்களை அவர்களுக்கு வழங்கி உதவும் வகையில், போதிய அளவிலான சட்டமன்றத்தொகுதி வாரியாக கணினி வசதியுடன் அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும், தபால் வாக்களிக்கும் படிவத்தில் கையொப்பமிட சான்றளிக்கும் அலுவலர் ஒருவரும் பணியமர்த்தப்பட்டிருந்தார். காவல்துறையைப் பொறுத்தவரை கரூர் மாவட்டத்தில்

அரவக்குறிச்சி சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட 70 நபர்களும், கரூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட 242 நபர்களும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட 136 நபர்களும், குளித்தலை சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட 101 நபர்களும், பிற மாவட்டங்களைச் சேர்ந்த 320 நபர்களும் என மொத்தம் 869 நபர்கள் தபால் வாக்குகளை அளிக்க விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர். ஊர்க்காவல் படையினரைப் பொறுத்தவரை, 260 நபர்கள் தபால் வாக்குகளை அளிக்க விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.