கோலாகலமாகத் தொடங்கியது ஜனநாயகத் திருவிழா - வாக்காளர்களுக்கு உற்சாக வரவேற்பு! | Lokshaba poll started for first phase

வெளியிடப்பட்ட நேரம்: 09:37 (11/04/2019)

கடைசி தொடர்பு:10:17 (11/04/2019)

கோலாகலமாகத் தொடங்கியது ஜனநாயகத் திருவிழா - வாக்காளர்களுக்கு உற்சாக வரவேற்பு!

17-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், இன்று 20 மாநிலங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. 

வாக்குப்பதிவு

அடுத்த 5 ஆண்டுகள், நாட்டை ஆளப்போவது யார் என்று மக்கள் தீர்மானிக்கும் ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல், இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், முதற்கட்டமாக 91 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளில், வாக்குப்பதிவு அமைதியான முறையில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில், தேர்தல் நடைபெறும் பகத்பாட் என்னும் பகுதியில் காலையில் வாக்களிக்க வந்தவர்களுக்கு மலர் தூவி, மேல தாளங்கள் முழங்க வரவேற்பு வழங்கப்பட்டது. 

வரவேற்பு

ஆந்திரப்பிரதேசம், ஒடிஷா, சிக்கிம், தெலங்கானா, உத்தரகாண்ட், அருணாச்சலப்பிரதேசம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவு ஆகிய இடங்களில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திரப்பிரதேசம், ஒடிஷா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டபேரவைத் தேர்தலும் நடைபெறுகிறது.  ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, இன்று காலை தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். 

சந்திரபாபு நாயுடு

மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கும் நிலையில், பிரதமர் மோடி, சாதனை படைக்கும் அளவுக்கு வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். குறிப்பாக, முதல் முறையாக வாக்களிப்பவர்கள் அதிக அளவில் வந்து வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.  தேர்தல் நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.