பிரசாரத்தில் எதை வேண்டுமானாலும் பேசலாமா? சட்டம் சொல்வது என்ன? | Laws on Election Campaign speeches.

வெளியிடப்பட்ட நேரம்: 11:04 (11/04/2019)

கடைசி தொடர்பு:11:35 (11/04/2019)

பிரசாரத்தில் எதை வேண்டுமானாலும் பேசலாமா? சட்டம் சொல்வது என்ன?

சட்டம் சொல்வதை மட்டும் கடைப்பிடித்தால், இன்றைய பெரும்பான்மையான தேர்தல் வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்பதே நிஜம்.

பிரசாரத்தில் எதை வேண்டுமானாலும் பேசலாமா? சட்டம் சொல்வது என்ன?

நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டிய இந்தியாவின் தேர்தல் களத்தில் பரபரப்புக்குப் பஞ்சமில்லை, முக்கியமாக வேட்பாளர்களும், வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பேச்சாளர்களும், கட்சித் தலைவர்களும் மக்கள் மனதை எப்படியாவது கவர்ந்து, ஜால பேச்சில் ஞாலத்தை வெல்லும் நோக்கோடு பேசிக்கொண்டே........ இருக்கிறார்கள்.

தேர்தல்

பழைய ஞாபகத்தில், கூட்டணிக் கட்சியையே சாடுவது, பெயரை மாற்றிச் சொல்வது, சொந்தக் கட்சி வேட்பாளர் பெயரையே மறப்பது, மாம்பழத்தை ஆப்பிள் என்பது போன்ற பல்வேறு நகைச்சுவை சம்பவங்கள் ஒருபக்கம் இருந்தாலும்,  மறுபக்கம் மக்கள் முகம் சுளிக்கும் வகையில், சர்ச்சையை ஏற்படுத்தும் பேச்சுகளும், மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் வாக்கு கேட்பதும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. 

ஆனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தேர்தல் பிரசார பேச்சுகளுக்கு என்று தனி வரையறையை வைத்திருக்கிறது, சட்டம்,  எதைப் பேசலாம்... எதைப் பேசக் கூடாது என்று விதிகள் வகுத்திருக்கிறது. பேச்சு சுதந்திரம் இருக்கிறதே என்பதற்காக, எதை வேண்டுமானாலும் அவர்கள் பேசலாம் என்று மக்களும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். வரைமுறையின்றிப் பேசுவது சட்டவிரோதம் என்கிற சட்டம் மக்களுக்குத் தெரிந்திருந்தால், மக்களின் கேள்விகளுக்குப் பயந்தாவது அத்தகைய சட்டங்களை அரசியல் கட்சிகள் பின்பற்றத் தொடங்கலாம் என்ற நம்பிக்கையில், வாருங்களேன் சிறிது சட்டம் அறிந்துகொள்வோம்...

1951-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8A பிரிவின்கீழ், முறைகேடான செயல்களில் ஈடுபடும் வாக்காளர்களைத் தகுதி நீக்கம் செய்யலாம். இந்தச் சட்டம், முறைகேடான பேச்சு என்று ஐந்து  வகையான பேச்சுகளை வரையறுத்திருக்கிறது. இச்சட்டத்தை ஒரு வேட்பாளர் மீறும்பட்சத்தில், எதிர்க்கட்சி வேட்பாளரோ, வாக்காளரோ தேர்தல் முடிந்த 45 நாள்களுக்குள் நீதிமன்றத்தில் தேர்தல் மனு எனப்படும் Election Petition தாக்கல் செய்யலாம்.  

தேர்தல் -

அச்சுறுத்தும் வகையில் பேசுவது:  

வாக்காளர் சுதந்திரமாக வாக்களிப்பதற்கு அச்சுறுத்தும் வகையில் பேசுவது என்பது சட்டப்படி குற்றமாகும், செல்வாக்கு உள்ள ஒருவர், நீங்கள் குறிப்பிட்ட நபருக்கு வாக்களிக்கவில்லை எனில், நீங்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்படுவீர்கள் என்று பேசுவதோ அல்லது குறிப்பிட்ட நபருக்கு வாக்களிக்கவில்லை என்றால் விளைவுகள் ஏற்படும் என்று மிரட்டும் தொனியில் பேசுவதோ, நீங்கள் இவருக்கு வாக்களிக்கவில்லை என்றால் கடவுளின் கோபத்துக்கு ஆளாவீர்கள் என்று சொல்வதோ சட்ட விரோதம் ஆகும். 

மதத் தலைவர்கள், அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி,  அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்கவில்லை என்றால், நீ பாவம் புரிந்தவன் என்று பேசுவது குற்றம். அதேபோல இந்த வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று பொது அறிக்கை வெளியிட்டு, அதில் அப்படி வாக்களிக்காதபட்சத்தில், அது பாவம், மதத்துக்கான துரோகம் என்று பேசுவது குற்றமாகும்.

தேர்தல் - எடப்பாடி பழனிசாமி

மதம், சாதி, மொழி போன்றவை அடிப்படையில் வாக்கு சேகரிப்பது:

வேட்பாளரோ, அவரைச் சேர்ந்தவர்களோ, ஒரு குறிப்பிட்ட சாதி, மத, இனம் , மொழி ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, மற்றொரு வேட்பாளருக்கு வாக்களிக்காதீர்கள் என்று சொன்னாலோ அல்லது ஒரு குறிப்பிட்ட சாதிக்கு நான் நன்மை செய்வேன், ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் வளர்த்தெடுப்பேன், இந்த மொழி பேசுபவர்கள் என்றால் வாக்களியுங்கள் என்று பேசினால் அது சட்ட விரோதம். மத அடையாளங்களையோ, தேசியக்கோடி, சின்னம் போன்ற அடையாளங்களையோ பயன்படுத்துவதும் சட்டத்த்துக்குப் புறம்பானது.

தேர்தல் - மோடி

வாக்காளர்கள் இடையில் பிரிவினையை உண்டாக்குவதுபோலப் பேசுவது: 

இந்த மதத்தினரைக் காப்பதற்கு என்னால் மட்டுமே முடியும், இந்தச் சாதியின் முன்னேற்றம் எனக்கு வாக்களித்தால் மட்டுமே சாத்தியம் என்பது போன்ற பேச்சுகள், இரு பிரிவினரிடையே பகையை வளர்ப்பது போன்று இருந்தால், இரு பிரிவினரிடையே வெறுப்பை உண்டாகும் பேச்சுகள் ஆகியவை சட்டப்படி குற்றம். வேட்பாளர்களின் இத்தகைய பேச்சுகளுக்கு  ஏற்கெனவே நீதிமன்றம் அவர்களைத் தண்டித்தும் இருக்கிறது.

தேர்தல் - ஸ்டாலின்

உடன்கட்டை ஏறுதலை ஆதரித்துப் பேசுவது: 

வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும் நோக்கத்தில், கணவன் இறந்தால் மனைவியும் உடன்கட்டை ஏற வேண்டும் என்ற சட்டத்துக்குப் புறம்பான `சதி' எனப்படும் உடன்கட்டை ஏறுதலை ஆதரித்துப் பேசுவது சட்டப்படி குற்றம். 

தவறான செய்தியை வெளியிடுவது:

ஒரு வேட்பாளர் ஒரு செய்தி அல்லது அறிக்கை தவறு, உண்மைக்குப் புறம்பானது என்று நன்கு அறிந்திருந்தும் அதை வெளியிடுவது சட்டப்படி குற்றம் ஆகும். ஒரு வேட்பாளர் அவரது எதிர் வேட்பாளரைப் பற்றி அறிந்தே தவறான செய்தியை உருவாக்கி உண்மைபோல வெளியிடுவது அல்லது பேசுவது சட்டப்படி குற்றம். தவறாக ஒருவரின் நன்னடத்தை மீது கறைபடுத்தும் நோக்கில் பேசினால், அது சட்டத்துக்குப் புறம்பானது. 

தேர்தல் - ராகுல்

சட்டம் என்னவோ, நேர்மையான தேர்தல் நடப்பதற்கு வழிவகை செய்கிறது, ஆனால் சட்டத்தை மீறுவதில் பயமோ, சட்டத்தை மீறுபவர்களைக் கேள்விகேட்பதற்கு தைரியமோதான் யாரிடமும் இல்லாமல் இருக்கிறது. சட்டம் சொல்வதை மட்டும் கடைப்பிடித்தால், இன்றைய பெரும்பான்மையான தேர்தல் வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்பதே நிஜம். சாதி அரசியலும், மத அரசியலும் மட்டுமே இன்று இந்திய அரசியலாக இருக்கிறது. கேட்பாரில்லை என்பதே கள நிதர்சனம். இந்தியா எனும் பெரும் தேசத்தில், லஞ்சமும், ஊழலும் எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டமீறல்களோ, அப்படியாகிவிட்டது தேர்தல் பிரசாரங்களும், சுயதேவைக்காக மட்டுமல்லாமல், சமூகத் தேவைக்காகவும் சட்டங்கள் பயன்படுத்தப்படுமேயானால், ஒருவேளை இந்நிலை மாறலாம். 


டிரெண்டிங் @ விகடன்