Published:Updated:

`ராமதாஸின் தேர்தல் அறிக்கையிலேயே எங்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்குப் பதில் உள்ளது!’- மு.க.ஸ்டாலின் தீர்க்கம்

`ராமதாஸின் தேர்தல் அறிக்கையிலேயே எங்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்குப் பதில் உள்ளது!’- மு.க.ஸ்டாலின் தீர்க்கம்
`ராமதாஸின் தேர்தல் அறிக்கையிலேயே எங்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்குப் பதில் உள்ளது!’- மு.க.ஸ்டாலின் தீர்க்கம்

கடலூர் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. கூட்டணி சார்பில் வடலூர் அருகே உள்ள ஆண்டிக்குப்பத்தில் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ, நெய்வேலி எம்.எல்.ஏ. சபா. ராஜேந்திரன், புவனகிரி எம்.எல்.ஏ. சரவணன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
 

இதில் தி.மு-.க. தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது, ``நடைபெற இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான மதவெறி பிடித்த ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும். நாங்கள் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்னைக்கு முதலில் வருபவர்கள். தேர்தலில் மட்டும் மக்களைச் சந்திப்பவர்கள் இல்லை. இந்தத் தேர்தலோடு தி-.மு.க. அழிந்துவிடும் என புதியதாக கூட்டணி சேர்ந்த ஒருவர் கூறிவருகிறார். தி.மு.கவை யாரும் அழிக்க முடியாது. அதை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போய் இருக்கின்றனர். மாநாடு போல கூடியிருக்கும் இந்தக் கூட்டத்தைப் பார்த்தால் தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க  முடியாது. ஒரு ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகக் கருணாநிதி ஆட்சி இருந்தது. ஆனால், ஓர் ஆட்சி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு அடையாளமாக தற்பொழுது உள்ள முதல்வர் எடப்பாடி ஆட்சி உள்ளது. கடலூர் என்றாலே கடல் சூழ்ந்த ஊர் மட்டுமல்ல. சில நேரங்களில் கண்ணீரும் சூழ்ந்துவிடுகிறது. இந்த மாவட்டத்தில் சுனாமி, தானே புயல்  என பாதிக்கப்பட்டபோது உடன் வந்து தி.மு.க-வினர் ஆற்றிய பணிகளை நீங்கள் அறிவீர்கள். 

தமிழகத்துக்கு தற்பொழுது வாரம்தோறும் மோடி தேர்தல் பிரசாரத்துக்காக  வருகிறார். ஆனால், கஜா புயல் பாதிக்கப்பட்டபோது மோடி வந்தாரா. இல்லை தமிழக அரசு கேட்ட நிவாரண நிதியாவது தந்தாரா. விவசாயிகள் தங்களின் வாழ்வாரத்துக்காக டில்லியில் பல கட்டப் போராட்டங்கள் நடத்தினார்கள். ஆனால், பிரதமர் விவசாயிகளை அழைத்துப் பேச கூடத் தயாராக இல்லை. தி.மு.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை ஹீரோ, காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ. பா.ஜ.க., வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை ஜீரோ. கடந்த தேர்தலின்போது ஆண்டுக்கு 2  கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவேன் என்று கூறினார். யாருக்காவது ஒருவருக்கு மத்திய அரசின் மூலமாக வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதா. வெளிநாட்டிலிருந்து கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு குடிமகன் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும் என்று கூறினாரே செய்தாரா. குறைந்தது ரூ.15,000, அல்லது 15 ரூபாய், 15 பைசாவது வந்துள்ளதா. 

பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் 2025-க்குள் இந்தியாவை அமெரிக்கா போல் மாற்றுவோம். 2032க்குள் அமெரிக்கா பொருளாதாரத்தை எட்டுவோம் எனக் கூறி ஏமாற்றும் வேலை செய்து வருகிறார். மோடி தேர்தல் பிரசாரத்தில் நீலிக்கண்ணீர் வடிக்கிறார். ஏழைத் தாயின் மகன் என்கிறார். டீ விற்றுதான் பிரதமராக வந்தேன் என்கிறார். ஆனால், ஏழைகளைப் பற்றி நினைக்காமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவி செய்து வருகிறார். அவர் தன்னை ஒரு காவலாளி என்கிறார். ஆமாம், நீங்கள் எடப்பாடி ஆட்சிக்கு காவலாளி. நீங்கள் காவலாளி அல்ல களவாணி. தமிழகத்தில் நடக்கும் அக்கிரம ஆட்சிக்கும், கொடநாடு கொலை சம்பவம், பொள்ளாட்சி சம்பவம் என அனைத்துக்கும் மோடி காவலாளியாக உள்ளார். 

வன்னியர் சமுதாயத்துக்கு தி.மு.க., தூரோகம் செய்ததாக டாக்டர் ராமதாஸ் கூறுகிறார். அவர் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையிலேயே அவர் கூறிய குற்றச்சாட்டுக்குப் பதில் உள்ளது. அதை அவர் மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும். பா.ம.க. தேர்தல் அறிக்கையில் 93-ம் பக்கத்தைப் படித்துப் பார்க்க வேண்டும். தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய மக்களுக்குச் 20 சதவிகித இட ஒதுக்கீடு பெற்றுத் தந்ததாகக் கூறுகிறார். இதைக் கருணாநிதி முதல்வராக இருந்தபோது செய்தது. இதேபோல் நுழைவுத் தேர்வை ரத்து செய்தது, சமச்சீர்க் கல்வி கொண்டு வந்தது எல்லாம் கருணாநிதிதான். சொல்வது யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், செய்தது கருணாநிதி. விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த வன்னியர் சங்க வெள்ளி விழா மாநாட்டில் உங்களைவிட்டால் இதை யாரும் செய்ய முடியாது எனக் கூறி கருணாநிதியைப் பாராட்டி பேசியவர் டாக்டர் ராமதாஸ். ஆனால், இன்று தேர்தல் ஆதாயத்துக்காக வாங்கிய கூலிக்கு மாரடிப்பதற்காக ஏதோ பேசுகிறார் ராமதாஸ். கருணாநிதி இல்லாமல் நாம் சந்திக்கும் முதல் தேர்தல் இது. உதயசூரியன் சின்னம் நிற்கிறது என்று சொன்னால் கருணாநிதி மற்றும் நான் நிற்கின்றேன் எனக் கருதி உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டுகிறேன்". இவ்வாறு பேசினார்.